ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, July 12, 2009

அபிராமி அந்தாதி 91-100



அபிராமி அந்தாதி

பகுதி 91-100 [ நிறைவு பெற்றது ]


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...



மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. 91

அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.


பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்-
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே. 92

ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.


நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93

உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.


விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே. 94

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. 95

ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமளவல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கிவிட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.


கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. 96

என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.


ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. 97

என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.


தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?-
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே. 98

ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக்கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாயகங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 99

ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! 100

ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.


நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 81-90


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin