இதோ இந்த ஆண்டிற்கான மஹாசிவராத்திரி விரதம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நல்ல நாளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...
மஹாசிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் உகந்த இராத்திரி எனப் பொருள்படும். சிவ விரதங்களிலாகட்டும் அல்லது மற்றைய விரதங்களிலாகட்டும் இச் சிவராத்திரி விரதத்திற்கு தனியிடமும் தனிச்சிறப்பும் உண்டு. சிவம் என்றால் வடமொழியில் இன்பம் எனப் பொருள் உண்டு. இராத்திரி என்றால் இரவு. ஆக சிவராத்திரிக்கு இன்பமயமான இரவு என்றும் பொருளுண்டு.
சிவராத்திரியில் சில வகைகள் உண்டு. மாத சிவராத்திரி என்ற பெயரில் மாதந்தோறும் சிவராத்திரி விரதங்கள் வருகின்றபோதும் இவற்றை அனுஷ்டிப்போர் மிகக் குறைவானவர்களே. மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசியிலே மாத சிவராத்திரியும், அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் யோக சிவராத்திரியும் வரும். நாம் இப்போது மஹாசிவராத்திரியைப் பற்றிப் பார்க்கலாம்.
இம் மஹாசிவராத்திரி விரதமானது மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியிலே கைக்கொள்ளப்படுகின்றது. வயது வேறுபாடு இன்றி அனைவராலும் இவ்விரதத்தை அனுட்டிக்கமுடியும். இந் நன்னாளில் விரதம் இருந்து பலர் பலவகையான நற்பலன்களைப் பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு சூரியன், விஷ்ணு, பிரம்மா, மன்மதன், யமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியோரைக் குறிப்பிடமுடியும்.
இப்படிப்பட்ட இம் மகாவிரதம் எப்படி ஏற்பட்டது தெரியுமா. அதற்கு பல புராணகதைகளைக் கூறுவர். அதில் முக்கியமான சில கதைகளைப் பார்ப்போம்.
ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காத்தற் கடவுளான திருமாலுக்கும் இடையில் கடும் போட்டி ஒன்று ஏற்பட்டது. இருவரும் தம்மைத் தாமே பெரியவர் எனக் கூறிக்கொண்டனர். இவர்களின் இப்பிரச்சனை தீர்வதற்குப் பதில், நேரம் செல்ல செல்ல மிகக் கடுமையாகிக் கொண்டே சென்றது. அப்போது திடீரென்று அவ்விடத்தில் ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அதன் அடியையும் முடியையும் காணமுடியவில்லை. அத்தனை தூரம் பெரியதாக இருந்தது. அச் சோதிப்பிழம்பில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. இதன் அடியையோ அல்லது முடியையோ யார் காணுகின்றார்களோ அவரே பெரியவர் என அவ்வசரீரி கூறிற்று. யார் பெரியவர் எனப் போட்டி போட்டுக்கொண்டு இருந்த திருமாலும் பிரம்மாவும் முறையே அடியையும் முடியையும் தேடிப் புறப்பட்டனர். திருமால் வராக உருக்கொண்டு பூமியைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடிச் சென்றார். பிரம்மா அன்னப்பட்சியாக உருக்கொண்டு முடியைத் தேடிச் சென்றார். இருவரும் பலகாலம் தேடியும் அடியையோ முடியையோ காணமுடியவில்லை. இறுதியில் இருவரும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர். தாம் வெறும் கருவிகள் என்பதையும் தம்மை இயக்குபவர் அப்பரம்பொருளான சிவபெருமானே என்பதையும் உணர்ந்தனர். அவர்களின் செருக்கையடக்கி அவர்களை மன்னித்த சிவபிரான் அச்சோதி வடிவம் தோன்றிய அந்நாளை மஹாசிவராத்திரியாகக் கொண்டாடும்படி கூறினார்.
இரண்டாவது கதை, ஒரு உலகமுடிவு நாளில்(அதாவது பிரளயகாலத்தில்) பிரம்மதேவன் மறைய சர்வான்மாக்களும் இறந்து போயின. அந்த இராப் பொழுதில் உமாதேவியார் சிவனைப் பூசித்து , பெருமானுடைய அருளைப் பெற்றார். அத்தோடு அந்த இராப்பொழுதில் விரதம் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மோட்சமடைய வேண்டுமெனவும் வரம் பெற்றார். உமாதேவியார் வரம் பெற்ற அந்த இரவே மஹாசிவராத்திரி என்றும் கூறுவர்.
இவ்வாறாகத்தான் சிவராத்திரி தோற்றம் பெற்றதென்பர் பெரியோர். எப்படியாக இருந்தாலும் இந்த மஹாசிவராத்திரி விரதம் மிகவும் புண்ணியமானதொன்று. உதாரணத்திற்கு ஒரு வேடன் கதையைக் கூறுவர். ஒரு காட்டில் ஒரு வேடன் இருந்தான். மிருகங்களை வேட்டையாடுவதுதான் அவன் குலத்தொழில். ஒரு நாள் அவன் வேட்டையாடப் புறப்பட்டான். காலையில் இருந்து முயற்சி செய்தும் ஒன்றும் சிக்கவில்லை. அதனால் மிருகங்களைத் தேடிக்கொண்டே காட்டின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டான். சூரியன் மறையத் தொடங்கியும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் அவன் அன்று பகல் முழுதும் பட்டினி. இனி அவனால் தன் இடத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாது. நாளை காலையில்தான் செல்லமுடியும். எனவே இரவுப் பொழுதை அந்நடுக்காட்டிலேயே கழிக்கத் தீர்மானித்தான். அவ்விரவில் துஷ்ட மிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். அம்மரத்தில் ஏறினாலும் தூங்கி விழுந்து விடாமல் இருக்கவேண்டுமே, அதற்காக அம்மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாக கீழே பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் ஏறிய அம்மரம் ஒரு வில்வமரம். அவன் பிடுங்கிக் கீழே போட்ட ஒவ்வொரு வில்வ இலையும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. ஆனால் வேடனுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. அவன் விடியும் வரை அவ்வாறே இலைகளைப் பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். பகலிலும் பட்டினி, இரவிலும் பட்டினி. மறுநாள் காலை ஆனது. எம்பெருமான் அவன் முன் தோன்றினார். காரணம் அவன் இருந்த பட்டினியை எம்பெருமான் விரதமாகவும், அவன் தூக்கம் வராமல் இருக்க செய்த வேலையை வில்வ அர்ச்சனையாகவும் ஏற்றுக்கொண்டார். அவனுக்கு முக்தியின்பத்தை அளித்தார். அவ்வேடன் தெரியாமற் செய்த அப்புண்ணியம் எத்தனை பெரிய பலனைக் கொடுத்தது பார்த்தீர்களா. இதையே நாம் தெரிந்து செய்தால் எவ்வளவு பலன் ஏற்படும்.
இப்போது இவ்விரதத்தினை எப்படி அனுட்டிப்பது எனப் பார்ப்போம். சிவராத்திரிக்கு முதல்நாளில் ஒரு பொழுது உணவருந்தி, மஹாசிவராத்திரியன்று உபவாசம் இருந்து அதாவது உணவை முற்றிலும் தவிர்த்து, அன்று இரவு முழுவதும் துயில் கொள்ளாது, மறு நாள் அதிகாலையில் நித்தியகருமங்களை முடித்து எட்டரை மணிக்கு முன்னதாக பாரணை செய்யவேண்டும். பாரணை செய்தல் என்றால் உணவருந்துதல்.
அதாவது சிவராத்திரி தினத்தன்று காலையில் இருந்தே சிவசிந்தனையிலும், சிவபஜனைகளிலும் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். பின் மாலை 6 மணியளவில் அருகில் இருக்கும் சிவ ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜைகளையும் கண்டுகளிக்க வேண்டும். இது நம் பாவங்களையெல்லாம் நசித்து நமக்கு பிறவாவரமளிக்கும். இவ்வாறு இரவு முழுதும் விழித்திருக்க முடியாதவர்கள், இரவு 11.30 தொடக்கம் 12.15 வரை இருக்கும் லிங்கோற்பவகாலம் வரையிலாவது விழித்திருக்கவேண்டும். அவர்களுக்கும் ஐயன் அருள்புரிவார்.
இன்றைய காலகட்டத்தில் இரவு முழுதும் விழித்திருக்கவேண்டும் என்பதை பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இரவுமுழுதும் எப்படியாவது இருந்து விட்டால் புண்ணியம் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றனர். அதனால் சிலர் சீட்டாடுகின்றனர், சிலர் சினிமாப்படங்களைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் வீண் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நோக்கம் விடியும் வரை தூங்காமல் இருந்து புண்ணியத்தினைச் சம்பாதிக்கவேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் இவ்வாறு இருப்பது மகா பாவமான செயலாகும். அவர்கள் புண்ணியத்திற்குப் பதில் பெரும்பாவத்தினைத்தான் சேர்க்கின்றார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுதல் குளிக்கப் போய் சேறு பூசுவதற்குச் சமானமாகும். நம் பாவங்களைக் கழுவும் இந் நல்ல நாளில் தகாத செயல்களில் ஈடுபட்டு மேன்மேலும் ஏன் பாவத்தைச் சேர்க்கவேண்டும்?. எனவே சிவராத்திரியன்று சொன்னால் சிவநாமங்களைச் சொல்லுங்கள், செய்தால் சிவகாரியங்களைச் செய்யுங்கள். தேவையற்ற காரியங்களையும், வீண் பேச்சுக்களையும் தவிர்த்து விடுங்கள்.
இந் நல்ல நாளில் நான்கு ஜாம பூஜைகளுக்குத் தேவைப்படும் அபிஷேகத் திரவியங்களை வாங்கிக் கொடுத்தல் மிகவும் புண்ணியமான செயலாகும். எனவே முடிந்தோர் அபிஷேகத் திரவியங்களான பால், தேன், பன்னீர் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். நான்கு ஜாமப் பூஜைகளும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் கரணங்கள் நான்கையும் சிவன் திருவடியிற் சேர்த்தலைக் குறிக்கின்றது. ஆலயம் செல்லமுடியாதோர் வீட்டில் இருந்தே வழிபடலாம். தவறில்லை. வீட்டில் இருந்து சிவபுராணங்களையும், தேவாரங்களையும், சிவகதைகளையும் படியுங்கள்.
இவ் விரதத்தினை 6 வருடங்களுக்காவது, 12 வருடங்களுக்காவது, அல்லது 24 வருடங்களுக்காவது தொடர்ந்து கைக்கொள்ளுதல் சிறப்பு. மஹாசிவராத்திரி விரதத்தைப் பற்றி பேசுவோருக்கு யமபயம் இல்லை. பல யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணியமாகும். சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பயன் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாற்கூட கிட்டாது.சிவராத்திரிக்கு ஒப்பான வேறு சிறந்த விரதம் இல்லை. இவ்வாறு பரமசிவனார் பார்வதிதேவிக்கு இவ்விரதம் பற்றி எடுத்துரைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரியன்று சொல்லக்கூடிய சில மந்திரங்கள்:
ஸ்ரீ பவாய நம
ஸ்ரீ சர்வாய நம
ஸ்ரீ ருத்ராய நம
ஸ்ரீ பசுபதயே நம
ஸ்ரீ உக்ராய நம
ஸ்ரீ மகா தேவாயை நம
ஸ்ரீ பீமாயை நம
ஸ்ரீ ஈசாநாய நம
search tags : sivarathiri, shivarathiri, shivan, சிவராத்திரி, விரதம், நோன்பு
தொடர்புடைய பதிவு : திருவாசகம்
மஹா கும்பமேளா 2025 - வருக வருக என வரவேற்கிறோம்
3 weeks ago
1 comment:
Submit your blog to the Tamil Blogs directory http://kelvi.net/topblogs/
Post a Comment