ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label நல்ல தகவல்கள். Show all posts
Showing posts with label நல்ல தகவல்கள். Show all posts

Tuesday, July 14, 2009

நல்ல தகவல்கள்-2



நல்ல தகவல்கள் - 2

நல்ல விடயங்களில் மேலும் சிலவற்றினை அறிந்து கொள்வோம், வாருங்கள்:


நான்கு வகை உயிரினங்கள்:

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை

4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.


ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு


பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:

1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....


ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயதெல்லையும் ஆண்களின் வயதெல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]

1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்


நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்


அஷ்ட பர்வதங்கள்:

1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை


ஆத்ம குணங்கள்:

1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை


எண்வகை மங்கலங்கள்:

1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : நல்ல தகவல்கள் - 1


search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal

_*_*_*_

Tuesday, July 7, 2009

நல்ல தகவல்கள்-1




நல்ல தகவல்கள் - 1


சில நல்ல விடயங்களைப் பற்றிப் பார்க்கலாம். உதாரணமாக ஏழுவகைப் பிறப்பு, ஈரேழுலோகங்கள் இப்படி பல உண்டு. அவற்றினைப் பார்க்கலாம்...


எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்


ஏழுவகைப் பிறப்புக்கள்:

1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்


ஈரேழு உலகங்கள்:

முதலில் மேல் உலகங்கள்:

பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்

அடுத்து கீழ் உலகங்கள்:

அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்


குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி


அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்


எண்வகை போகங்கள்:

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)


நவ நாகங்கள்:

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி


நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்



search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal

_*_*_*_

Tuesday, June 30, 2009

தேவ தேவியர்கள்



தேவ தேவியர்

தெய்வங்களையும், தெய்வங்களின் தேவியர்களையும் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.


முதலில் கடவுளரின் சக்தியரைப் பார்ப்போம்:

சிவன் : உமை

மகாவிஷ்ணு : இலட்சுமி

பிரமன் - சரஸ்வதி

பிள்ளையார் : சித்தி, புத்தி, வல்லபை

முருகன் : வள்ளி, தெய்வயானை

வீரபத்திரர் : காளி

வெங்கடாசலபதி : அலமேலு அம்பாள்

ஐயப்பன் : பூரணை, புட்கலை

பைரவர் : இரத்தசாமுண்டி

கிருஷ்ணன் : ருக்குமணி, சாம்பவதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்யவதி, பத்திரை, நப்பின்னை, சத்தியபாமா


அட்டதிக்கு பாலகரின் சக்தியர்:

இந்திரன் : இந்திராணி

அக்னி : சுவாஹாதேவி

யமன் : சாமளை

நிருதி : தீர்க்காதேவி

வருணன் : சேஷ்டை

வாயு : அஞ்சனை

குபேரன் : சித்ரரேகை

ஈசானன் : காளி


அட்டமாத்ருகைகள்:

அந்தகாசுர வதத்தின் பொருட்டு சிவபிரான் முகத்திலுண்டான அஷ்ட மூர்த்திகளிடமிருந்து உண்டானவர்கள்.

காமம் : யோகீஸ்வரி

குரோதம் : மாகேஸ்வரி

மதம் : பிரம்மாணி

லோபம் : வைஷ்ணவி

மோகம் : கௌமார்

மாச்சர்யம் : இந்திராணி

பிசுநம் : யமதண்டி

அசூயை : வராகி


நவக்கிரக சக்தியர்:

சூரியன் : உஷா, ப்ரத்யுஷா

சந்திரன் : ரோஹினி

செவ்வாய் : சக்தி தேவி

புதன் : ஞான சக்தி தேவி

வியாழன் : தாரா தேவி

வெள்ளி : சுகீர்த்தி

சனி : நீலா

ராகு : ஸிம்ஹி

கேது : சித்ரலேகா


நன்றி : மயூரமங்கலம்


search tags : Article, theva theviyar, கட்டுரைகள், தேவ தேவியர்

_*_*_*_


Monday, June 29, 2009

குண்டலினி சக்தி



குண்டலினி சக்தி


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே - சிவ வாக்கியர்.


" குண்டலினி அம்மா! மனிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி, ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.
நீயே பிராணனாகவும், வித்யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் இருந்து இந்த உடலுள் உறைகின்றாய்.
ஸுஷும்னா நாடியைத் திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடு. - குண்டலினி தியானம் -


எப்படி ஜீவாத்மா பரமாத்மா அம்சமோ, அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறாள். பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சமஷ்டி ரூபிணியான திரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே குண்டலினி சக்தி நம்முடைய சரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கிறாள். இதனாலேயே அம்பிகைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர் உண்டு.

எப்படிச் சக்தியில்லாவிட்டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் குண்டலினி இல்லாவிட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

பராசக்தியின் அம்சமான குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம் உண்டு பண்ணுவதுதான் சமயமத சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் "சமயாசாரதத்பரா" என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறது.

அப்படி சமாரஸ்யம் ஏற்படுத்திய போதிலும் குண்டலினி சக்தி மறுபடியும் மூலாதாரத்தை வந்தடையும் சுபாவமுள்ளவளாகையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் சகஸ்ராரத்திலேயே நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் ஸித்திப்பதாகும். இதுவே ஜீவன் முக்த நிலை.

குண்டலினியை வாழும் பாம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் குடியிருப்பதாகவும், அது மனிதர் கண்களுக்குப் படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.

இது அக்னி ஸ்வரூபமான சக்தி. மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும் பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.

இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகின்றது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.

இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷும்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்த பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்றமடைந்திருக்கிறான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்த போதிலும் அவன் அறிவு ஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.

படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்கமுடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.

அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான் எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கி குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டுமிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.

மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.


நன்றி : மயூரமங்கலம்


search tags : Article, Kundalini, Yogam, குண்டலினி, யோகம், கட்டுரைகள்

_*_*_*_

Sunday, June 21, 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்-1



சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


பகுதி - 1


சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.


பொதுவான பொன்மொழிகள்:-


* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.

* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.


தொடரும்...


search tags : Swami Vivekanandar, Vivekanandar, Ponmoligal, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர், பொன்மொழிகள்

_*_*_*_

Tuesday, June 16, 2009

பஜனையும் பக்தியும்



பஜனையும் பக்தியும்

ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...


* வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

* பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.

* உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.

* நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.

* ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், ஏஎனைய அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.

* உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.

* திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.

* எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு.

" ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.

* " ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.

* பகவானைப்பற்றி மனதில் சிந்தனை செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்படி பல ரூபங்களும் குணங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது அவசியம் இல்லாமல் போனாலும், உலகத்தைப்படைத்து நடத்துகிற ஒரு தெய்விக சக்தியிருப்பதாக நம்பி, கசிந்துருகிய மனதுடன் ஒருவன், "பகவானே, நான் உமது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தவனல்லேன். உமது உண்மை ஸ்வரூபத்தை நீரே எனக்குக் காட்டியருள வேண்டும் " என்று அவரைப் பிரார்த்தித்தால் பகவான் தம் கருணைப் பிரவாகத்தை அவன் மீது செலுத்துவார்.

* கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : உண்மை


search tags : sree ramakirishna paramahamsar, pon moligal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள்.

_*_*_*_

Sunday, May 31, 2009

உண்மை



உண்மை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகச் சொல்லப்பட்டவை. அவற்றில் 'உண்மை' பற்றிய அவரின் பொன்மொழிகளை இப்போது பார்ப்போம்.


* பகவானிடம் ஹிருதய பூர்வமான பக்தி கொள்வாய். கபடவேஷத்தையும் ஏமாற்றுதலையும் விட்டுவிடு. குமாஸ்தா வேலை செய்பவராயிருந்தாலும், வியாபாரிகளாக இருந்தாலும் அவர்களும் கூட உண்மை பேசுவதிலிருந்து தவறுதலாகாது. உண்மையையே பேசுவதே கலியுகத்துக்கான தவமாகும்.

* ஒருவன் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறவனாக இருந்தாலல்லாமல் சத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.

* மனிதன் ஸத்தியம் பேசுதலில் தவறக்கூடாது. அவ்விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எப்போதும் உண்மையே பேசிவந்தால் கடவுள் சாஷாத்காரத்தை அடையப்பெறலாம்.

* பொய் அனைத்தும் கெட்டவை. பொய் வேஷமும் கெட்டதே. உன் வேஷத்துக்குத் தகுந்தபடி மனம் இராமற்போனால், நீ பெரும் நாசமடைவாய். இப்படித்தான் ஒருவன் வஞ்சகனாகிறான்; பொய் பேசுவதிலும் பொய்க் காரியங்களைச் செய்வதிலும் உள்ள பயம் அவனுக்குப் போய்விடுகிறது.

* ஒரு மனிதனுக்குக் கடன் வெகு ஜாஸ்தியாகி விட்டது. அதனில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். வைத்தியர்களால் யாதொரு குணமும் உண்டாகவில்லை. மருந்து அதிகமாக உள்ளே செல்லச்செல்ல பாசாங்குப் பைத்தியமும் அதிகரித்தது. கடைசியாக, புத்திசாலியான வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டு போலிப் பைத்தியனைத் தனியாக அழைத்துப்போய், "அடே! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஜாக்கிரதை! பைத்தியம் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தால், வாஸ்தவமாகவே உனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இப்போதே உன்னிடம் சில பைத்தியக் குறிகள் தென்படுகின்றன" என்றான். இதைக்கேட்ட அம்மனிதன் பயந்து போய் பைத்தியமெனப் பாசாங்கு செய்வதை விட்டான். இடைவிடாது நீ எவ்விதம் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறாயோ, அவ்விதமாகவே ஆகிவிடுவாய்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : சத்தியம்


search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, Unmai, உண்மை, ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

---

Wednesday, May 20, 2009

திருமணக் கிரியைகள்




திருமணக் கிரியைகள்

இந்து முறைப்படியான திருமணங்களின் போது பல கிரியைகள் செய்யப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவை ஏன் செய்யப்படுகின்றன என அறிவீர்களா, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது வாழ்வில் முக்கியமானதொன்றாகும். இத் திருமணத்தின் போது நடைபெறக்கூடிய கிரியைகளில் பல கோயில் கிரியைகளில் நடைபெறுவதுதான். உதாரணமாக அனுஜ்ஜை, சங்கற்பம், பிள்ளையார் பூஜை, புண்ணிய யாகம், பஞ்சகவ்வியம், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம், கும்பபூஜை, ஓமம் வளர்த்தல், ஆகியவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றினைத் தொடர்ந்து திருமணத்திற்குச் சிறப்பாகவுள்ள கிரியைகள் நடைபெறும். உதாரணமாக பிதிர்தேவர்களது ஆசிர்வாதம் பெறுதல், மணமகனுக்கு உபசாரம் செய்தல், கன்னிகாதானம், கூறை கொடுத்தல், தாலி கட்டுதல், அக்கினி பூஜை, பால்,பழம் கொடுத்தல், நவக்கிரக தானம், பசு தரிசனம், பாணிக்கிரகணம்(கையைப் பற்றுதல்), அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல், பிராயச்சித்தம், அக்கினியை வலம் வருதல், பெரியோர் வாழ்த்துதல் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

இக் கிரியைகளின் தத்துவங்களை அல்லது விளக்கத்தினைக் காணலாம் வாருங்கள்.

அரசாணி : திருமண மண்டபத்தில் சிவசக்தியின்(சிவம்+சக்தி) பாவனையில் அரசும் முருங்கும் நடப்படும். இதுவே அரசாணிமரம் எனப்படும்.

அனுஜ்ஜை : ஆரம்பிக்கும் கிரியையில் உள்ளத்தை உறுதி செய்தல். அதாவது மணமகன் திருமணம் செய்வதற்கும், ஆசாரியார் அதை நடத்துதற்கும் உள்ளத்தை உறுதி செய்தலே அனுக்ஜை ஆகும்.

விநாயகர் பூஜை : எந்தச் செயலும் இனிதே நடைபெறுவதற்கும் விநாயகரின் அருள் அவசியம் வேண்டும். அதே போல் திருமணக் கிரியைகளும் தடங்கலின்றி இனிதே நடைபெற விநாயகரின் அருளை வேண்டிச் செய்யப்படும் பூஜை.

ஆசமனம் : மணமகன் மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல். இதனால் உள்ளம் தூய்மையாகி ஆன்மா அருள்வழி நிற்கும்.

புண்ணிய யாகம் : இடத்தையும் பொருளையும் சுத்தி செய்தல். இது பஞ்சகவ்வியம் கொண்டு செய்யப்படும்.

அங்குரார்ப்பணம் : நவதானியங்களை முளைப்பதற்காக இடுதல். இது மணமக்களுக்கு நன்மைகளும் எல்லாச் செல்வங்களும் கிடைத்தற் பொருட்டு செய்யப்படுவதாகும்.

இரட்சாபந்தனம் : இரட்சை என்றால் காப்பு, பந்தனம் என்றால் கட்டுதல். எனவே இரட்சாபந்தனம் என்றால் காப்பு கட்டுதல் எனப்பொருள்படும். இது மணமக்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தொடங்கிய கருமத்தினை இடையூறின்றி முடிக்கவும் இடையில் குற்றங்கள் எதுவும் நிகழாதிருக்கவும் அவர்களுக்கு கையில் கட்டப்படும்.

கும்ப பூஜை : இரட்சாபந்தனமான பின்னர் ஆசாரியார் முறைப்படி சிவனதும் சக்தியினதும் அருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியையே கும்பபூஜை ஆகும்.

நவக்கிரக பூஜை : நம் வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. புதிதாக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்களின் நவக்கிரக தோஷ பலத்தைக் குறைக்கவும், அவற்றால் ஏற்படும் குற்றங்களைப் போக்கியருளும்படியும் வேண்டி செய்யப்படும் பூஜை இது.

ஓமம் வளர்த்தல் : கும்பத்திலே பூஜித்த யாகேசுவரியின் (சிவன் சக்தி) அருளை நிலைபெறச் செய்வதற்காக ஓமகுண்டத்தில் அக்கினி காரியம் செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி 'சிவாக்கினி' எனப்படும். இச் சிவாக்கினி வாழ்க்கைக்கு வேண்டிய தூய அருளை நல்கும்.

பிதுரர் ஆசிர்வாதம் : நற்காரியங்களின் போது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவது நம் மரபு. அதே போல் திருமணத்தின் போதும், வாழ்க்கையினை ஆரம்பிக்க இருக்கும் மணமக்களின் முன்னோரை அழைத்து ஆசிர்வாதம் பெற இடம் பெறும் கிரியையே பிதுரர் கிரியை எனப்படும். இது மணமக்களின் தந்தையார்களால் செய்யப்படும். மணமக்களின் பாட்டன், பூட்டன் ஆகியோரின் பெயர்கள் கூறி ஆசி வேண்டப்படும்.

மணமகனுக்கு உபசாரம் : மணவறையில், மணமகனின் வலப்பக்கத்தில் மணமகளை இருத்தி இரட்சாபந்தனம் செய்த பின்பு, மணமகளின் தகப்பனார் கன்னிகாதானம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொள்வார். பின்பு பட்டு வேட்டி சால்வையுடன் உபசாரப் பொருட்களை உபகாரமாக மணமகனுக்குக் கொடுப்பார்.

கன்னிகாதானம் : மணமகளின் தந்தை தம் மடியிலே மகளை இருத்தி அவளைத் தானமாகத் தாரை வார்த்து மணமகனின் கையில் அளிப்பார். தண்ணீரைத் தாரையோடு கொடுப்பதால் இது 'தாராதத்தம்' எனப்படும். கையில் நீர்விடுதல் ஒரு பொருளை இறுதியாகக் கொடுத்தலுக்கு அறிகுறி.

கூறை கொடுத்தல் : மணமகளின் திருமணச் சேலை, தாலி மற்றும் உபசாரப் பொருட்களை வைத்துச் சுத்தி செய்து பூஜித்த பின் பெரியோரினால் அவை ஆசிர்வதிக்கப்படும். பின்னர் மணமகன் மணமகளுக்கு உபசாரமாகக் கூறையைக் கொடுப்பார்.



தாலி கட்டல் : தாலியில் சிவலிங்கம், விநாயர் அல்லது இலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்படல் வேண்டும். மணமகனால் தாலிக்குத் தீபம் காட்டப்படும். தாலி கட்டுவதற்கு முன்னர் முகூர்த்தக் குற்றங்களைத் தீர்ப்பதற்காக தானம் செய்யப்படும். பின்னர் மணமகன், தன் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டு மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். மணமகனின் சகோதரியார் முடிச்சினைப் போட மணமகனின் தாயார் தீபத்தைக் காட்டுவார். மணமகன், மணமகள் நெற்றி மீது குங்குமமும் விபூதியும் இடுவார். பின்னர் மணமகள் மணமகனின் இடதுபுறத்தில் அமர்த்தப்படுவார். இதனையடுத்து அக்கினி வளர்த்துப் பூஜை நடைபெறும்.

பால் பழம் கொடுத்தல் : தயிர், தேன், சர்க்கரை, நெய், பழம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதார்த்தத்தை மணப்பெண் முதலில் மணமகனுக்கும், பின்னர் மணமகன் மணப்பெண்ணுக்கும் கொடுப்பார்கள். உயர்ந்த பதார்த்தங்களின் சுவை போன்று மணமக்கள் வாழ்வு முழுவதும் நலம் நிலவவேண்டும் என்பதற்காக இது வழங்கப்படுகிறது.

கோதரிசனம் : பசு புண்ணியத்தின் வடிவம். அதன் உடலில் அனைத்து கடவுளரும் தேவர்களும் வசிக்கிறார்கள். அப்புண்ணிய வடிவத்தைப் பார்த்தல் நல்லசகுனம். இதனால் வாழ்க்கையில் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

ஏழடி வைத்தல் : மணமகளுடைய கையை மணமகன் பிடித்துக் கொண்டு தோழி, தோழனுடன் அக்கினியை வலம் வருகையில் ஏழு அடி வந்ததும் அம்மி மிதித்தல் நடைபெறும். இது மூன்று முறை நடைபெறும். ஒவ்வொருமுறை வலம் வந்ததும் மணமகளின் சகோதரன் நெற்பொரியினை மணமக்கள் கையிற் கொடுப்பார். அவர்கள் அதனை அக்கினியில் இடுவார்கள். நெல் பொரியாக மலர்வது போன்று அவர்களுடைய வாழ்வும் வளம்பெற வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஏழு அடி வைத்தலின் தத்துவத்தைப் பார்ப்போம். இல்வாழ்க்கைக்கு வேண்டிய ஏழு பொருட்களைக் குறிக்கும், இவற்றைப் பெற இருவரும் ஒத்து முயற்சி செய்ய வேண்டும். அந்த ஏழு பொருட்களாவன, உணவுப்பொருள், உடற்பலம், கடவுள் வழிபாடு, மன அமைதி, அறிவு, காலத்திற்கு காலம் வாரும் பொருட்களும், அவற்றால் வரும் சுகங்களும், யாகத்திற்கு வேண்டிய துணைகள்.

அம்மி மிதித்தல் : மணமகன் மணமகளது வலதுகாலைத் தூக்கி அம்மி மீது வைப்பார். இதன் கருத்தானது பெண்ணாணவள் அந்த கல்லைப் போலத் தன்னுடைய நிலையில் இருந்து கற்புறுதியாக வாழ வேண்டும் என்பதாகும்.

பிராயச்சித்தம் : குற்றங்களைத் தீர்ப்பதற்காக பிராயசித்த ஓமமும், கிரியைகளின் நிறைவு குறித்துப் பூரணாகுதியும் நடைபெறும்.

அருந்ததி காட்டல் : இது ஒழுக்கம், கற்பு, பிறரை விழையாமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் உயர்வு குறித்துக் காட்டப்படும். இது பெண்ணுக்கு மாத்திரமன்றி ஆணுக்கும் உரியது.

ஆசிர்வாதம் : இறுதியாக ஆசாரியார் பூரணாகுதி செய்து மணமக்களை ஆசிர்வதிப்பார். அதன் பிற்பாடு நிறைவான பெரியோர் அறுகரிசி போட்டு ஆசிர்வதிப்பர். அறுகரிசி மங்கலப் பொருளாகும்.

திருமணக் கிரியைகள் ஆரம்பமுதல் வாழ்த்து நடைபெறும் வரை அனைவரையும் மகிழ்விக்க மங்கள வாத்தியங்கள் ஒலிக்கப்படும்.

அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் பண்டைய காலந்தொட்டே வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு சேக்கிழார் பெரிய புராணம் பாடி முடித்து யானை மீதமர்ந்து வீதியுலா வரும்போது அறுகெடுத்து வாழ்த்தப்படுகிறார்.

ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர்கொண்டு
அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பைக ளெல்லாம் - இவ்வாறு திருத்தொண்டர் புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த மரபு காலப்போக்கில் அறுகோடு நெல்லும் மலரும் கலந்து இடுதல் என்று மாறிற்று. பின்னர் நெல் அரிசியாகி அர்ச்சதை இடுதல் என்று ஆயிற்று. அறுகும் அர்ச்சதையும் மலரும் கலந்து வாழ்த்துதல், அட்சதையிடுதல் என்று இன்றைய வழக்கில் வழங்கக் காண்கின்றோம்.



நன்றி : ஆன்மிக கிரியைகள், சைவ ஏடு, விரதங்களும் சடங்குகளும்.


search tags : Thirumanam, Thirumanam Sadanku, Thirumanam Kiriyai, திருமணம், திருமணச் சடங்கு, திருமணக் கிரியைகள்.

Friday, May 15, 2009

நல்வழி



ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை போன்று இந் நல்வழியும் பல நல்ல கருத்துக்களைக் கொண்டது.

நல்வழி

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். -1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. -2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. -3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. -4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். -5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. -6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. -7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். -8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து . -9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் -10

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது. -11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. -12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். -13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். -14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். -15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. -16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? -17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். -18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். -19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். -20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான். -21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். -22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. -23

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை. -24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. -25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். -26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். -27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். -28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். -29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி . -30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. -31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. -32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். -33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். -34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. -35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். -36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. -37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். -38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. -39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். -40


இப் பதிவுடன் தொடர்புடைய பதிவுகள் : ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை


நன்றி (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி) : மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்.


search tags : Nalvali, Auvayar, நல்வழி, ஔவையார்


Thursday, May 14, 2009

மூதுரை



ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போலவே இம் மூதுரையும் பல நல்ல கருத்துக்களைக் கொண்டது. அம் மூதுரை இதோ :


மூதுரை


கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆத்திசூடி , கொன்றைவேந்தன்


search tags : Moothurai, Auvaiyar, Awayar, மூதுரை, ஔவையார்

Saturday, May 9, 2009

கொன்றை வேந்தன்



ஔவையாரின் கொன்றை வேந்தன். ஆத்திசூடி போலவே பல நல்ல கருத்துக்களைக் கொண்டது.

கொன்றை வேந்தன்



கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.


இப்பதிவுடன் தொடர்புடைய பதிவு : ஆத்திசூடி (பதிவிற்கு செல்ல ஆத்திசூடி மேல் அழுத்துங்கள்)


search tags : owayar, auvayar, kontrai venthan, aathi soodi, கொன்றை வேந்தன், ஔவையார், ஆத்திசூடி

Friday, May 8, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்



நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் கூறிய பொன்மொழிகளில் இருந்து சில உங்களுக்காக.

சத்தியம் என்பது பற்றி பரமஹம்சர் கூறுவதாவது:

* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

* உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

* இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.

* முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.



search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, sathyam, சத்தியம், ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

Sunday, May 3, 2009

ஆத்திசூடி

ஔவையாரின் ஆத்திசூடி. பல நல்ல கருத்துக்களின் கோவை இது. நம் வாழ்வு சிறப்படைய வழிகாட்டும் அற்புதக் கருத்துகள் நிறைந்தது. வாருங்கள் நாமும் படித்து அதன் வழி நடந்து வாழ்வினை சிறப்பாக்குவோம்.

ஆத்திசூடி


கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்

32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.


search tags : owayar, ouvayar, aathisoodi, ஔவையார், ஆத்திசூடி

Friday, April 24, 2009

பூஜை செய்யும் வழிமுறைகள்

* நெற்றியில் திருநீறோ குங்குமமோ அல்லது திருமண்ணோ இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. காரணம் இவை இறை சின்னங்கள். இவை நம் மனதை ஒருமுகப்படுத்தி பூஜையில் ஈடுபட உதவும்.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜைக்குப் பயன்படும் மலர்கள் புழு அல்லது பூச்சியின் தாக்கத்திற்கு ஆளாகாததாக இருக்கவேண்டும். ஒரு வேளை அவை புழு,பூச்சி அரித்துக் காணப்படுமாயின் அவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு நல்ல மலர்களின் காம்புகளை ஆய்ந்து அவற்றில் தலைமுடியோ அல்லது வேறு பொருட்களோ இல்லாதவாறு சுத்தப்படுத்த வேண்டும்.

* பூஜைக்கு தேவையான பொருட்களை நினைவில் வைத்து முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையின் போது பொருட்களை சேகரிப்பதைத் தவிருங்கள்.

* தீபம், மணி, வெற்றிலை, தேங்காய், சங்கு, பழம். பூக்கள் இவற்றை வெறுந்தரையில் வைக்கக்கூடாது.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜை நடுவில் எழுந்தி போகக்கூடாது.

* மந்திரம் தவிர்ந்த வேறு பயனற்ற பேச்சுக்கள் எதையும் பூஜையின் போது பேசலாகாது. மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் இறைவனை இறைஞ்சி வணங்குங்கள்.


search tags : payanulla thakaval, good, poojai, பயனுள்ள தகவல், நல்ல தகவல்கள், தகவல்கள்.

Friday, February 20, 2009

பயனுள்ள தகவல்கள்-1

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.

* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.

* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொட்டால் மூதேவியே பீடிப்பாள்.

* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

search tags : article, பயனுள்ளவை, தகவல்

Related Posts Widget for Blogs by LinkWithin