ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Saturday, June 6, 2009

திருக்குறள் 41-50



திருக்குறள் 41-50

அறத்துப்பால்

இல்வாழ்க்கை



இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. - 41

இல்லறத்தோடு பொருந்தி வாழுபவன் எனச் சொல்லப்படுபவன் அற இயல்புகளை உடைய மூவர்க்கும் அவர்களின் நன்னெறிகளுக்கு நிலைபெற்ற துணையாவான்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. - 42

வாழ்வைத் துறந்துவிட்ட துறவிகளுக்கும், வறுமையில் உள்ள ஏழைகளுக்கும், ஆதரவற்று இறந்து போனவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன் துணையாவான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - 43

தென்புலத்தவராகிய மூதாதையர்களைப் பூசித்தல், தெய்வ வழிபாடு, உபசரிப்பு, தன் குடும்பம் என்னும் ஐந்நெறிகளையும் வழுவாது செய்பவனே இல்லறச் சிறப்புடையவனாவான்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

சேர்க்கக் கூடிய பொருட்களை பழி, குற்றம் ஏற்படாத வண்ணம் சேர்த்துச் செலவு செய்து, பலருக்கும் பகுத்து உண்டு செயல்படுபவனது இல்வாழ்க்கை உலகில் என்றும் குறைவு இல்லாது நிலைத்து நிற்கும் இல்வாழ்க்கையாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - 45

ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அவ்வாழ்வின் பண்பும் பயனும் அதுவேயாகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன். - 46

அறநெறியின்படி ஒருவன் தன் இல்வாழ்வை அமைப்பான் ஆயின் அவன் பிற வழிகளில் சென்று பெறுகின்ற இன்பம்தான் என்ன? ஏதுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. - 47

இல்லறத்தின் இயல்புகளில் குறையாது சரியாக வாழுபவன் என்பவன், புலனின்பங்களை விட்டு வாழ முயல்கின்றவர்களிலும் மேம்பட்டவனாவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48

அறநெறியில் தானும் நடந்து, பிறரையும் பின்பற்றி நடக்கச் செய்பவனது இல்வாழ்க்கை, தவம் புரிபவரையும் விஞ்சும் வலிமை உடைய வாழ்க்கையாகும்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. - 49

அறம் என பெருமை செய்யப்படுவதே இல்லறம்தான் அந்த இல்லறமும் பிறர் பழித்துக் கூறாவண்ணம் அமைவது மேலும் நன்மையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். - 50

இல்லற நெறியில் இருந்து பிறழாமல், இவ்வுலகத்தில் வாழ வேண்டிய நெறிமுறைகளோடு வாழுபவன் வானத்தில் உறைகின்ற தெய்வத்திற்குச் சமமாக மதிக்கப்படுவான்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 31-40


search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்

_*_*_*_

Friday, May 29, 2009

திருக்குறள் 31-40 (பொருளோடு)



திருக்குறள் 31-40

அறத்துப்பால்

அறன் வலியுறுத்துதல்


சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31

அறம் ஒருவருக்கு வீடு பேறு என்கின்ற சிறப்பையும் செல்வங்களையும் கொடுக்கும். உயிர்களுக்கு அந்த அறம் தரும் ஆக்கம் போல வேறு நன்மை ஏது?.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32

ஒருவர் அறம் செய்வதனால் ஏற்படும் நன்மையான விளைவுகள் அதிகம். அந்த அறம் செய்வதை மறந்து திரிதலால் வரும் தீய விளைவுகளும் அதிகம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல். - 33

எக்காலத்திலும் விட்டு விடாமல் தத்தமக்கு இயன்ற அளவில் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் அறச் செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும்.

மனத்துக்கண் மாசுஇலான் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - 34

ஒருவன் உள்ளத்தில் தூய்மையுடையவனாகக் குற்றமற்றுத் திகழ்வதே அறம் எனப்படும். ஏனையவை வெற்று விளம்பரங்களுக்காகச் செய்யப்படும் ஆரவாரத் தன்மைகளாகும், அறமாகாது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35

பொறாமை, ஆசை, கோபம், தீய சொல் என்ற நான்கு குற்றங்களையும் நீக்கித் தொய்வின்றித் தொடர்வதே அறமாகும்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

முதுமைக்காலத்தில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். உடலில் இருந்து உயிர் அழியும் காலத்தில் அந்த அறம் அழியாத் துணையாக வந்து நிற்கும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேல் அமர்ந்து செல்பவனிடம் போய் அறத்தின் பெருமை இது என அறிவிக்க வேண்டாம்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியமைக்கும் கல். - 38

ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள்களே இல்லை என்னுமாறு நாள் தோறும் அறம் செய்வானாயின் அவ்வறமானது அவன் உடலோடு கூடும் பிறவி வழியை அடைக்கின்ற கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39

அறம் செய்வதன் மூலம் வருகின்ற இன்பமே சிறந்த இன்பமாகும். அறநெறிக்குப் புறம்பாக வரும் மற்றவை இன்பங்களும் புகழும் இல்லாதவை.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - 40

ஒருவன் தான் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அறம் என்ற நல்வினையையே. செய்யாமல் ஒழிக்க வேண்டியது பழியையே.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 21-30


search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்



Wednesday, May 20, 2009

திருக்குறள் 21-30 (பொருளோடு)



திருக்குறள் 21-30


அறத்துப்பால்

நீத்தார் பெருமை



ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு -21

தாம் சார்ந்த ஒழுக்க நெறியில் தவறாது நின்று பிறவற்றைத் துறந்தவர்களின் பெருமைகளை விரும்பிப் போற்றிப் புகழ்வதே நூல்களின் துணிவாகும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று -22

இது வரையான காலத்தில் இவ்வுலகில் பிறந்து இறந்தோரைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. அதே போல் பற்றற்ற ஞானிகளின் பெருமைகளையும் அளவிட்டுக் கூறமுடியாது.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறிங்கிற்று உலகு -23

பிறப்பு, வீடு எனும் இருவகைக் கூறுகளைத் தெரிந்து தெளிந்து அதற்கு ஏற்றால் போல் இங்கு அறவாழ்க்கை மேற்கொண்டோரின் பெருமைகளே உலகில் சிறந்தது.

உரெனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரெனென்னும் வைப்பிற்கோர் வித்து. -24

மனவலிமை எனும் அங்குசத்தால் ஐம்பொறிகள் என்னும் யானையின் வேட்கையை அடக்கியவன் வீடு என்னும் உயர்ந்த நிலத்திற்கு விதை போன்றவன் ஆவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. -25

ஐம்புலன்களின் இன்ப ஆசைகளை அவித்து ஒழித்த வலிமைக்கு வானத்து தேவர்களின் அரசன் இந்திரனே சரியான சான்றாக அமைவான்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். -26

எவராலும் செய்ய இயலாத அருமையான செயல்களைச் செய்து காட்டுகின்றவர்களே பெரியவர் ஆவர். அத்தகு செயல்களைச் செய்யும் ஆற்றல் இல்லாதவர் சிறியவராவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. -27

சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், முகர்தல் எனும் ஐந்து வகைக் கூறுகளையும் அறிந்து தெளிந்த அறிஞனுடைய அறிவில் உலகம் உள்ளது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். -28

நிறைவு மிக்க பயன்மிகுந்த சொற்களைப் பேசிச் சிறந்த சான்றோரின் பெருமைகளை உலகத்துள் அவர்கள் அருளிச் சென்ற மறைமொழிகளே காட்டி நிற்கும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. -29

நற்பண்புகள் என்னும் குணங்களுடைய குன்றின் உச்சியில் நிற்கும் தவசீலர்கள் சினம் என்னும் கோபத்தை ஒரு கணப்பொழுதேனும் வைத்துக் காத்தல் அரிதாகும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். -30

அனைத்து உயிர்களிடமும் செம்மையான கருணையை மேற்கொண்டு ஒழுகும் அறம் கொண்டோரே அந்தணர் எனப்படுவர்.


இப் பதிவோடு தொடர்பான பதிவுகள் : திருக்குறள் 11-20


search tags : Thirukural, Thiruvalluvar, Arathu Paal, திருவள்ளுவர், திருக்குறள், அறத்துப்பால்

Thursday, May 14, 2009

திருக்குறள் 11-20 (பொருளோடு)



திருக்குறள் 11-20

அறத்துப்பால்


வான் சிறப்பு


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. -11


இப் புவியானது நிலைபெற்று உய்ய மழை பொழிகிறது. எனவே அம்மழையே உயிர்களுக்கு அமிர்தம் என உணர்தல் வேண்டும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. -12


நமக்கான உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதுடன், அருந்துவோர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் எனும் உணவைத் தருவதும் மழையாகும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13


வான்மழை சரியான காலங்களில் பெய்யாமல் பொய்க்குமானால், பரந்த கடல் சூழ்ந்த இந்த உலகத்தினுள் பசியானது நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். -14


மழை எனும் வளம் குறைந்தால் உழவர்கள் ஏர் பூட்டி உழ மாட்டார், இயலாது.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15


மழையானது பெய்ய வேண்டிய பருவத்தில் பெய்யாது மக்கள் வாழ்வினைக் கெடுக்கும். ஆனால் அதே மழைதான் பின்னர் கெட்டுப்போன மக்களுக்குத் துணையாக மீண்டும் பெய்யும்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -16


மேகத்தில் இருந்து வரும் மழைத்துளிகள் விழாமல் போனால் பூமியின் மேலே பச்சைப் புற்களின் தலை கூடத் தென்படுவது கடினமாகும்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். -17

கடல்நீரை உண்ட மேகம் மீண்டும் அதனிடத்தில் செல்லாதுவிடின் பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. -18


வானமானது மழையைத் தராது வறட்சி ஏற்படுமாயின் வானத்து தேவர்களுக்கான சிறப்புப் பூசைகளும் வழிபாடுகளும் இப் புவியில் நடக்காது.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19


வானமானது மழையை வழங்காது போகுமானால் இப் பெரிய உலகில் தானம், தவம் என்ற இரு அறங்களும் தங்காமல் மங்கி விடும்.

நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. -20


எந்த வகையில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் நீரின்றி உலக வாழ்க்கை அமையாது. அப்படியே அந்த நீரும் வானத்தில் இருந்து மழையாக ஒழுகா விட்டால் கிடைக்காது.


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 1-10


search tags : Valluvar, Thirukural, வள்ளுவர், திருக்குறள்

Friday, May 1, 2009

திருக்குறள் 1-10 (பொருளோடு)

திருக்குறள் - 1-10

அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் அடிப்படையாவது, முதன்மையாவது 'அ' கரம் எனும் எழுத்து. அது போல இவ் உலகிற்கு எல்லாம் முதன்மையானவன், அடிப்படையானவன் இறைவன்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

உண்மை அறிவாக விளங்கும் இறைவனின் தூய திருவடிகளைத் தொழுதலே கல்வி நூல்களைக் கற்றதின் பயனாகும்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களின் இதயமலரில் அமர்ந்திருக்கும் இறைவனின் மாண்புமிக்க திருவடிகளை இடைவிடாது சேர்ந்து நினைப்பவர் இன்பம் குறையாது இவ்வுலகின் கண் நிலைத்து வாழ்வர்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன். அந்த இறைவனின் திருவடிகளையே எண்ணிப் பொருந்துபவர்களுக்கு என்றும் எங்கும் எத்துன்பமும் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனின் பொருள் பொதிந்த உண்மைப் புகழைப் புரிந்து அவனை விரும்புகிறவர்களிடம் அறிவினை மயக்கி இருள் தருகின்ற தீவினை நல்வினை என்ற இரு வினைகளும் அணுகா.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின்பால் எழும் தாகங்களை அழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறிகளின்பால் முறையுடன் ஒழுகுபவர் என்றென்றும் நிலைத்து வாழ்வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றக் அரிது.

எந்த வகையிலும் யாராலும் தனக்கு நிகராக ஒப்புவமை காட்ட முடியாத இறைவனின் திருவடிகளை எண்ணித் துதிப்பார்களைத் தவிர, மற்றவர்கள் தங்கள் மனதில் எழும் துன்பச் சுமைகளை மாற்றல் இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.

அறக் கடலாகத் திகழும் இறைவனின் திருவடிகளை எண்ணிச் சேர்ந்தவர்களைத் தவிர, பிறர் பொருட்கடல், இன்பக்கடலாகிய பிற கடல்களை நீந்திக் கடக்க இயலாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உணர்ச்சிகளை உணராத கொள்கையற்ற உடல் பொறிகள் பயனற்றவை. அவை போல் எட்டுக் குணங்களின் இருப்பிடமாகத் திகழும் இறைவனை வணங்காத தலைகளும் பயனற்றவை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.

இறைவன் திருவடிகளை எண்ணித் துதிப்பவர் மட்டுமே பிறப்பு எனும் பெரிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு எண்ணாதவர் அக்கடலுள் வீழ்ந்து இன்னல் அடைவர்.


search tags : Thirukuaral, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்

Related Posts Widget for Blogs by LinkWithin