ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label ராமகிருஷ்ண பரமஹம்சர். Show all posts
Showing posts with label ராமகிருஷ்ண பரமஹம்சர். Show all posts

Tuesday, June 16, 2009

பஜனையும் பக்தியும்



பஜனையும் பக்தியும்

ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...


* வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

* பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.

* உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.

* நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.

* ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், ஏஎனைய அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.

* உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.

* திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.

* எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு.

" ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.

* " ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.

* பகவானைப்பற்றி மனதில் சிந்தனை செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்படி பல ரூபங்களும் குணங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது அவசியம் இல்லாமல் போனாலும், உலகத்தைப்படைத்து நடத்துகிற ஒரு தெய்விக சக்தியிருப்பதாக நம்பி, கசிந்துருகிய மனதுடன் ஒருவன், "பகவானே, நான் உமது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தவனல்லேன். உமது உண்மை ஸ்வரூபத்தை நீரே எனக்குக் காட்டியருள வேண்டும் " என்று அவரைப் பிரார்த்தித்தால் பகவான் தம் கருணைப் பிரவாகத்தை அவன் மீது செலுத்துவார்.

* கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : உண்மை


search tags : sree ramakirishna paramahamsar, pon moligal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள்.

_*_*_*_

Sunday, May 31, 2009

உண்மை



உண்மை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகச் சொல்லப்பட்டவை. அவற்றில் 'உண்மை' பற்றிய அவரின் பொன்மொழிகளை இப்போது பார்ப்போம்.


* பகவானிடம் ஹிருதய பூர்வமான பக்தி கொள்வாய். கபடவேஷத்தையும் ஏமாற்றுதலையும் விட்டுவிடு. குமாஸ்தா வேலை செய்பவராயிருந்தாலும், வியாபாரிகளாக இருந்தாலும் அவர்களும் கூட உண்மை பேசுவதிலிருந்து தவறுதலாகாது. உண்மையையே பேசுவதே கலியுகத்துக்கான தவமாகும்.

* ஒருவன் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறவனாக இருந்தாலல்லாமல் சத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.

* மனிதன் ஸத்தியம் பேசுதலில் தவறக்கூடாது. அவ்விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எப்போதும் உண்மையே பேசிவந்தால் கடவுள் சாஷாத்காரத்தை அடையப்பெறலாம்.

* பொய் அனைத்தும் கெட்டவை. பொய் வேஷமும் கெட்டதே. உன் வேஷத்துக்குத் தகுந்தபடி மனம் இராமற்போனால், நீ பெரும் நாசமடைவாய். இப்படித்தான் ஒருவன் வஞ்சகனாகிறான்; பொய் பேசுவதிலும் பொய்க் காரியங்களைச் செய்வதிலும் உள்ள பயம் அவனுக்குப் போய்விடுகிறது.

* ஒரு மனிதனுக்குக் கடன் வெகு ஜாஸ்தியாகி விட்டது. அதனில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். வைத்தியர்களால் யாதொரு குணமும் உண்டாகவில்லை. மருந்து அதிகமாக உள்ளே செல்லச்செல்ல பாசாங்குப் பைத்தியமும் அதிகரித்தது. கடைசியாக, புத்திசாலியான வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டு போலிப் பைத்தியனைத் தனியாக அழைத்துப்போய், "அடே! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஜாக்கிரதை! பைத்தியம் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தால், வாஸ்தவமாகவே உனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இப்போதே உன்னிடம் சில பைத்தியக் குறிகள் தென்படுகின்றன" என்றான். இதைக்கேட்ட அம்மனிதன் பயந்து போய் பைத்தியமெனப் பாசாங்கு செய்வதை விட்டான். இடைவிடாது நீ எவ்விதம் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறாயோ, அவ்விதமாகவே ஆகிவிடுவாய்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : சத்தியம்


search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, Unmai, உண்மை, ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

---

Monday, May 18, 2009

உண்மையான சந்நியாசம்




உண்மையான சந்நியாசம்

ஒரு புருஷனும் அவன் மனைவியும் சந்நியாசம் பெற்றுக் கொண்டு, தீர்த்த யாத்திரைக்காக ஒன்று சேர்ந்து சென்றனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்கள். முன்னதாக அக் கணவனும், பின்னே அவன் மனைவியுமாகச் சென்றனர். சற்றுத் தூரம் செல்கையில் முன்னே சென்ற கணவனுக்கு ஒரு வைரக்கல் தென்பட்டது.
ஒரு வேளை அந்த வைரக்கல்லைத் தன் மனைவி கண்டு, அதன் மேல் ஆசை கொண்டு தன் சந்நியாச பலத்தை இழந்துவிடுவாளோ என சிந்தித்தான். அதை அவள் கண்களில்படாமல் புதைத்து விடலாம் என முடிவெடுத்தான். அவள் அருகில் வருவதற்குள் புதைக்கவேண்டுமே என அவசர அவசரமாகத் தரையைத் தோண்டினான். ஆனால் மனைவி அருகில் வந்துவிட்டாள். " சுவாமி எதற்காக இத்தனை அவசரமாகத் தரையைத் தோண்டுகின்றீர்கள் ?" எனக் கேட்டாள். அவளிற்கு உண்மையைச் சொல்லாமல் ஏதோ மறைமுகமாகப் பதில் சொன்னான். இருப்பினும் அவன் மனைவிக்கு அவன் மனக்கருத்தைப் பற்றியும், வைரத்தினைப் பற்றியும் நன்றாக விளங்கியது. அதனால் அவன் மனதிற்படும்படி இப்படிக் கேட்டாள். " சுவாமி! வைரத்துக்கும், சாதாரண கல்லுக்கும் உள்ள வித்தியாசம் தங்களுக்கு இன்னும் தெரிகிறதானால் தாங்கள் ஏன் உலகத்தைத் துறந்து வந்தீர்கள்?. "

இது ஸ்ரீ ராம கிருஷ்ணரின் கதைகளில் ஒன்று. எத்தனை அர்த்தம் பொதிந்த கதை. இன்று பலர் இந்தக் கதையில் வரும் புருஷனைப் போலத்தான் இருக்கிறார்கள். மனதில் உலக ஆசைகளோடே துறவறம் மேற்கொள்கிறார்கள். இப்படியானவர்களால்தான் போலிச் சாமியார்கள் அதிகரித்துவிட்டனர். இப்படியான போலிச் சாமியார்களால், உண்மையான சாமியார்களின் நற்பெயர் கூடக் களங்கமாகிவிடுகிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், துறவறம் மேற்கொள்வது அத்தனை சுலபமானது இல்லை.


நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்


search tags : sree ramakrishna paramahamsae, Aanmikam, Saivam, Aanmika kathaigal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சைவம், ஆன்மிகம், ஆன்மிகக் கதைகள்.

Friday, May 8, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்



நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் கூறிய பொன்மொழிகளில் இருந்து சில உங்களுக்காக.

சத்தியம் என்பது பற்றி பரமஹம்சர் கூறுவதாவது:

* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

* உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

* இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.

* முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.



search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, sathyam, சத்தியம், ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

Related Posts Widget for Blogs by LinkWithin