திருக்குறள் 31-40
அறத்துப்பால்
அறன் வலியுறுத்துதல்
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31
அறம் ஒருவருக்கு வீடு பேறு என்கின்ற சிறப்பையும் செல்வங்களையும் கொடுக்கும். உயிர்களுக்கு அந்த அறம் தரும் ஆக்கம் போல வேறு நன்மை ஏது?.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32
ஒருவர் அறம் செய்வதனால் ஏற்படும் நன்மையான விளைவுகள் அதிகம். அந்த அறம் செய்வதை மறந்து திரிதலால் வரும் தீய விளைவுகளும் அதிகம்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல். - 33
எக்காலத்திலும் விட்டு விடாமல் தத்தமக்கு இயன்ற அளவில் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் அறச் செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும்.
மனத்துக்கண் மாசுஇலான் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - 34
ஒருவன் உள்ளத்தில் தூய்மையுடையவனாகக் குற்றமற்றுத் திகழ்வதே அறம் எனப்படும். ஏனையவை வெற்று விளம்பரங்களுக்காகச் செய்யப்படும் ஆரவாரத் தன்மைகளாகும், அறமாகாது.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35
பொறாமை, ஆசை, கோபம், தீய சொல் என்ற நான்கு குற்றங்களையும் நீக்கித் தொய்வின்றித் தொடர்வதே அறமாகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36
முதுமைக்காலத்தில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். உடலில் இருந்து உயிர் அழியும் காலத்தில் அந்த அறம் அழியாத் துணையாக வந்து நிற்கும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேல் அமர்ந்து செல்பவனிடம் போய் அறத்தின் பெருமை இது என அறிவிக்க வேண்டாம்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியமைக்கும் கல். - 38
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள்களே இல்லை என்னுமாறு நாள் தோறும் அறம் செய்வானாயின் அவ்வறமானது அவன் உடலோடு கூடும் பிறவி வழியை அடைக்கின்ற கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39
அறம் செய்வதன் மூலம் வருகின்ற இன்பமே சிறந்த இன்பமாகும். அறநெறிக்குப் புறம்பாக வரும் மற்றவை இன்பங்களும் புகழும் இல்லாதவை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - 40
ஒருவன் தான் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அறம் என்ற நல்வினையையே. செய்யாமல் ஒழிக்க வேண்டியது பழியையே.
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 21-30
search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்
No comments:
Post a Comment