ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, May 24, 2009

இராமாயணம்-1



இராமாயணம்

பகுதி - 1

இந்த இராமாயணம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் எழுதப்பட்டது. இதனைத் தொகுத்தவரான Dr. J. பெருமாள் M.B.A, Ph.D அவர்களுக்கும் என் நன்றிகள்.


கங்கை நதிபாயும் நீர் வளமும் திலவளமும் குடிவளமும் பொருந்திய நாடு கோசல நாடு. வளமை மிகுந்த இந்தக் கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி என்ற திருநகராகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் மறந்தும் தீங்கு செய்யாதவர்கள். வறுமையால் வாடி யாசிப்பவர் இந்நகரில் இல்லாததால் தருமகுணசீலர்கள் அள்ளிக் கொடுக்கும் தன்மை இன்றி வாழ்ந்தனர். அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தம் இல்லாத ஊர் என்று பொருள். இந்த நகரம் போரும் சினமும் இன்றிச் சாந்தி நிகேதனமாகத் திகழ்ந்தது. எல்லோரும் அனைத்து நலங்களும் பெற்று இன்புற்று வாழந்தார்கள்.

இந்த அயோத்திமா நகரை, ஆதித்தன் குலத்தில், அஜமகாராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப் பிறந்த தசரதச் சக்ரவர்த்தி தாய்போல் மக்களுக்குத் தண்ணருள் புரிந்து அரசு புரிந்து வந்தார். பயிருக்குத் தண்ணீர் துணை புரிவது போலவும், உயிருக்கு உடம்பு ஆதாரமாக இருப்பது போலவும் மக்களுக்கு இம்மன்னவர் கருணை புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியிலே தருமம் தழைத்து ஒங்கியது. இவருடைய ஆட்சி மாட்சியுடன் விளங்கியது. பகைவர்களாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் துன்பம் இன்றி மக்கள் இன்பம் பெற்று வாழந்தார்கள். தசரத மன்னருடைய கரங்கள் ஈந்து ஈந்து சிவந்தன. இவருக்குக் கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவியர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பேறு இல்லாமையினால் அவ்வப்போது வேறு வேறு மாதர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அறநெறி வழுவாமல் நல்லற நாயகனாக நின்று அரசு புரிந்தார். மக்கள் மன்னரை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தினார்கள்.

தசரதர் தமக்குப் பின் தருமநெறி தவறhமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார். தசரதர் நாட்டைக் காக்க நன்மகன் இல்லையே என்று வருந்துவது பொது நலமாகும். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா! அடியேன் தங்கள் ஆசியினால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் பத்துத் திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன், சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன், ஆனால், அடியேனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை தலைவனின்றி மக்கள் வருந்துவார்களே என்று எண்ணி அடியேன் வருந்துகின்றேன். தாங்கள் பிரம புத்திரர். தங்களை குருநாதராகக் கொண்ட எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே இழிவு? குழல், யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா! என்று அழைக்கம் மழலைச் சொல் கேட்கும் பாக்கியம் பெற்றேனில்லை. வானளாவி வளர்ந்த மரம் பழுக்கவில்லையானால் அம்மரத்தால் யாது பயன்? என்னுடைய மனுக்குலத்தில் இதுவரை குழந்தையில்லாத மலட்டுத் தன்மை ஒருவருக்கும் இல்லை. பெரும் தவமுனிவராகிய தங்கள் சீடனாகிய எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே அவமானம் ? அடியேனுக்கு மகப்பேறு உண்டாகத் தேவரீர் அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.

வசிட்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப் பெற்றது. அதிலே கண்ட காட்சி அடியில் வருகின்றது.
திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். இராவணாதி அரக்கர்களால் பலகாலமாகத் துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே! கமலக்கண்ணா! நீலமேக வண்ணா! இராவணன் முதலிய அரக்கர்களால் நாங்கள் ஆலைக்கரும்புகோல் போல நொந்து வெந்து வருந்துகிறோம். நாங்கள் அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றோம். அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டுமென்று சரண் அடைந்தார்கள்.

திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களைத் தொலைத்து உங்கள் துயர் துடைத்து அருள்புரிவேன். இராவணன் பிரமதேவனிடம் வரம் பெறும் போது மனிதர்களையும், வானரங்களையும் சிறிய பிராணிகள் என்று விட்டு விட்டான். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வானரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார்.

திருமாலின் கட்டளையின்படி வானவர்கள் வானரங்களாகப் பிறந்தார்கள். இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் ( நீலன் சேனைத் தலைவன் ). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான்.
பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜாம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்று கூறினார்.

தொடரும்...


Search tags : Ramayan, Ramayana, Ramayanam, Kirubanantha Variyaar, இராமாயணம், கிருபானந்தவாரியார்.

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin