இறைவன் இருக்கிறாரா.......... (பகுதி-2)
எனக்கு மட்டும் துன்பம் ஏன்?
சென்ற பதிவில் இறைவன் இருக்கிறாரா என்பதைப் பற்றிப் பார்த்தோம். இறைவன் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள். இக் கேள்வி பலர் மனதில் உண்டு.
முன் வினைப்பயனைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகளின் பலனை இந்தப் பிறப்பில் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும். முற் பிறப்பில் அதிக நல்ல காரியங்களையும், புண்ணியங்களையும் செய்தவன் இப் பிறப்பில் அதற்கான நல்ல பலனை அனுபவிக்கின்றான். முற் பிறப்பில் தீய காரியங்களிலும், பாவச் செயல்களிலும் ஈடுபட்டவன் இப் பிறப்பில் அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றான்.
அப்படியானால் நான் முற்பிறப்பில் அதிக பாவச் செயல்களில் ஈடுபட்டேனா?, அதனால்தான் இப் பிறப்பில் எனக்குத் துன்பமா எனக் கேட்கலாம். இப் பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கு முன் வினையின் 50 % தான் காரணம். மீதி 50% இப் பிறப்பில் நம் செயற்பாடுகளைப் பொறுத்து அமைகின்றது.
முற் பிறப்பில் நாம் எத்தனை தவறுகள் செய்தோம், எவ் வகையான தவறுகள் செய்தோம் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். சாமானியர்களான நமக்குத் தெரியாது. நாம் சென்ற பிறப்பில் ஒரு பொய் சொல்லி இருந்தால் கூட அதற்கான பலனை இப் பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பொய் சொன்னதற்கான பலனையே அனுபவித்தாகவேண்டும் என்கின்றபோது, மற்றைய தவறுகளுக்கு என்ன சொல்வது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே தீரவேண்டும். இது விதி. ஆனால் நாம் இந்த முன் வினைப்பயனின் தாக்கத்தைக் குறைக்கமுடியும். அதாவது சென்ற பிறப்பிற் செய்த வினைக்கு வருந்தி இறைவனை உள்ளன்போடு வணங்குவதன் மூலம் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் இறைவனை வணங்குவதன் மூலம் முன்வினைப்பயனின் தண்டனைகளில் இருந்து தப்பிவிடமுடியாது, அவற்றின் தாக்கத்தை மட்டுமே குறைக்கமுடியும். யாராக இருந்தாலும் வினைப் பயனில் இருந்து தப்பமுடியாது. அபூர்வமாக சிலர் ஞானகுருக்கள், சாதுக்கள், சித்தர்கள் போன்றோரால் வினைப்பயனில் இருந்து தப்பியுள்ளனர்.
சரி, இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன்வினைப்பயனோடு, இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்களும் காரணமாகும். எப்படி என்றால் ஒரு குழந்தை மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகவே உள்ளது. அது கள்ளம் கபடமற்றதாக இருக்கும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால் வளர வளர அதன் இயல்புகள் மாறி விடுகின்றது. தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றது. அது நன்றாக வளர்ந்த பின் அதனிடத்தில் நிச்சயம் ஒரு சில தீயபழக்கங்களாவது இருக்கும். இதற்கான காரணங்களாகப் பலவற்றைக் கூறமுடியும். சமூகம்தான் அவனை இப்படியாக்கிவிட்டது என்று கூடக் கூறலாம். ஆனால் ஊசி இடங்கொடுக்காமல் நூல் எப்படி நுழையமுடியும். தீயபழக்கங்களை ஒரு மனிதன் விலக்கமுடியும். அதற்காகத்தான் ஆறாவது அறிவாக பகுத்தறிவு அவனுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் அவன் சிந்திக்காது தீயபழக்கங்கள் தன்னிடத்தில் குடியேற அனுமதித்துவிடுகின்றான். ஆக அவன் சிந்தித்திருந்தால் தீயபழக்கங்களில் இருந்து தப்பி இருக்கமுடியும். குழந்தையாக அவன் இருந்த போது நல்லவனாகத்தானே இருந்தான். பின்னர் சிந்திக்கத் தவறியதால்தான் தனக்குத் தானே கேட்டினை வரவழைத்தான்.
இதற்குச் சில உதாரணங்களைக் கூறமுடியும். ஒருவன் படிக்கும் காலத்தில். படிக்க அனைத்து வசதியிருந்தும், தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, பிற்காலத்தில் சரியான வேலை இல்லாது துன்பப்படும் போது முற்பிறவி பயனை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஒரு விவசாயி தன் தோட்டத்தில் சரியான நேரம் அறிந்து பயிரிடாமலும், பயிரிட்டால் தோட்டத்தைக் கவனிக்காதும் விட்டால் எப்படி விளைச்சல் கிடைக்கும். விளைச்சல் கிடைக்காது போனபின்னர் முற்பிறவிப்பயனைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. சிலர் சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று தெரிந்தேதான் பிடிப்பார்கள், பின்னர் கான்சர் வந்தால் " சே... முற்பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ, நமக்கு கான்சர் வந்திருச்சே " என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்த்தனம்.
மொத்தத்தில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாது இருந்துவிட்டுப் பின் முன்வினைப்பயனைக் குறை கூறுவது முட்டாள்த்தனம். இருப்பினும் சிலர் என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடிவடையும். அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துபார்ப்பார்கள் ஆனால் முடிவு முன்போலத்தான் இருக்கும். இவர்கள் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு, முற்பிறப்பில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தால் வாழ்வு சிறக்கும்.
ஆக எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று கேட்பது தவறானது. மனிதர்களில் 99% ஆனோருக்கு ஏதாவதொரு கவலை இருக்கிறது. நாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த காரியங்களே நம் இன்பத்தினையும் துன்பத்தினையும் முடிவு செய்கின்றது. எனவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுங்கள். "கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார்". இது நம் முன்னோர் கூறியது.
முற்பிறவியிற் செய்த வினை எத்தனை தூரம் மனிதனை அலைக்கழிக்கிறது. இப்படி இருக்க இப்பிறப்பிலும் பாவ காரியங்களில் ஈடுபடவேண்டுமா?. மனிதன் வாழும் காலம் சொற்பமானது. அந்த சொற்ப வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் இறந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.
தொடரும் ...
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இறைவன் இருக்கின்றாரா...(பகுதி-1)
search tags : Article, God, Kadavul, Iraivan
No comments:
Post a Comment