ஆன்மிகக் கதைகள் - 2
- அரசனும் அடிமையும் -
அரசன் ஒருவருக்கு ஓர் அடிமை மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் சேவை செய்து வந்தான். தனது அரசனை எப்போதும் போற்றியபடியும், எந்த நேரத்திலும் சேவைபுரியத் தயாராக இருந்தான். அவ்வடிமையின் உண்மைத்தன்மையை நன்றாக உணர்ந்த அரசர் அவனைத் தன் முதலமைச்சராக நியமித்தார். இவ்வாறு அடிமையாக இருந்த ஒருவன் இரவோடிரவாக முதலமைச்சராக மாறியதைக் கண்ட மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அடிமையான முதலமைச்சர் மீது பொறாமை கொண்டனர்.எல்லா அமைச்சர்களும் இந்த விடயம் காரணமாக ஒன்று கூடி தமது இந்த மனக்குறையை அரசனிடம் கூறினர். இவர்களுடைய மனக்குறையை மிகவும் அமைதியாகக் கேட்டு விட்டு "இன்றிலிருந்து ஒரு கிழமை முடிய நீங்களும் முதலமைச்சரும் எம்மை இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள பூஞ்சோலையில் உள்ள விடுதியில் சரியாக மாலை 4 மணிக்கு என்னை வந்து சந்திக்க வேண்டும். எவர் ஒருவர் என்னை வந்து முதலாவதாகச் சந்திக்கிறாரோ அவரே எம்மீது உண்மையான அன்பும் மரியாதையும் உள்ளவர்" என அரசர் கூறினார்.
ஒரு சில நிமிடங்களின் பின் அரசர் முதலமைச்சரை வரவழைத்து ஏனையோருக்கு கூறியவற்றைக் கூறினார். பின்னர் தளபதியை வரவழைத்து அமைச்சர்கள் தம்மைக் காண இருக்கும் பூஞ்சோலைக்கு இட்டுச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் விடுதிகளும் கூடாரங்களும் அமைக்கும்படியும் அதில் சுவைமிகுந்த சிற்றுண்டிகளும், மனதைக் கவரும் பொருட்களும், களியாட்டங்களும் ஏற்பாடு செய்யும்படி கூறினார். பின் அனைத்து அமைச்சர்களுக்கும் கால்நடையாக வந்தே தம்மைக் காணவேண்டும் என செய்தி அனுப்பினார்.
அரசர் குறித்த நாளும் வந்தது. முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வாறு இவர்கள் நடந்து செல்லும் போது முதலமைச்சரைத் தவிர மீதி அனைவரும் சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கும் கூடாரங்களுக்கும் சென்று இன்புற்று இருந்தனர். சிற்றுண்டிகள் மற்றும் களியாட்டங்கள் என அனைத்துமே இலவசமாக இருந்தமையால் மிகவும் ஆனந்தமாக இருந்தனர். அரசரைச் சந்திக்க இன்னும் நேரம் உண்டு என கூறிக்கொண்டு சாலையில் இருந்த அனைத்து களியாட்ட இடங்களுக்கும் சென்றனர். இவ்வாறாக நேரம் சென்று கொண்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்க, முதலமைச்சரோ இவை எவற்றிலும் தன் கவனத்தைச் சிதறவிடாது அரசர் ஆணையை மனதிற் கொண்டு நேரே பூஞ்சோலை விடுதியை தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே சென்றடைந்தார். ஏனைய அமைச்சர்களில் சிலர் அரை மணித்தியாலம், சிலர் ஒரு மணித்தியாலம் பிந்தியே வந்தனர். சிலரோ வராது இருந்துவிட்டனர்.
அடுத்த நாள் அனைத்து அமைச்சர்களையும் அழைத்தார். அவர்களிடம் " இந்த அடிமையை(முதலமைச்சரைச் சுட்டிக் காட்டி) ஏன் முதலமைச்சராக்கினேன் என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்குமெனெ எண்ணுகிறேன். இந்த உயர்ந்த பதவிக்குத் தகுந்த அதி உத்தம குணங்கள் பொருந்தியவர் இவர் என்பதனை அறிந்தே முதல் அமைச்சர் பதவியை இவருக்கு அளித்தேன் " எனக் கூறினார். அமைச்சர்கள் வெட்கத்தில் தலை குனிந்தபடி அரசனுடைய முடிவை வரவேற்றனர்.
இது போன்றே, உண்மையான ஞானிகளும், துறவிகளும், பக்தர்களும் இறைவனையன்றி வேறு ஒருவரையும் மனதில் சிந்திக்க மாட்டார்கள். இறைவனை அடையும் நேர்வழியில் செல்வார்கள். வீதியோரக் கவர்ச்சிக்கு ஒப்பான மாயையில் சிக்கமாட்டார்கள். உயிருக்கு உறுதுணையான இறைவனையே நாடுவார்கள். அதனால் மனதில் நல்ல எண்ணங்களோடு, சமுதாயத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள். காரணம் இறைவனையே சதா சிந்திக்கும் மனதில் நல்ல எண்ணங்களே எப்போதும் தோன்றும்.
search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 week ago
1 comment:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
Post a Comment