ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Saturday, May 9, 2009

கொன்றை வேந்தன்



ஔவையாரின் கொன்றை வேந்தன். ஆத்திசூடி போலவே பல நல்ல கருத்துக்களைக் கொண்டது.

கொன்றை வேந்தன்



கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.


இப்பதிவுடன் தொடர்புடைய பதிவு : ஆத்திசூடி (பதிவிற்கு செல்ல ஆத்திசூடி மேல் அழுத்துங்கள்)


search tags : owayar, auvayar, kontrai venthan, aathi soodi, கொன்றை வேந்தன், ஔவையார், ஆத்திசூடி

Friday, May 8, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்



நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் கூறிய பொன்மொழிகளில் இருந்து சில உங்களுக்காக.

சத்தியம் என்பது பற்றி பரமஹம்சர் கூறுவதாவது:

* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

* உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

* இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.

* முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.



search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, sathyam, சத்தியம், ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

Sunday, May 3, 2009

ஆத்திசூடி

ஔவையாரின் ஆத்திசூடி. பல நல்ல கருத்துக்களின் கோவை இது. நம் வாழ்வு சிறப்படைய வழிகாட்டும் அற்புதக் கருத்துகள் நிறைந்தது. வாருங்கள் நாமும் படித்து அதன் வழி நடந்து வாழ்வினை சிறப்பாக்குவோம்.

ஆத்திசூடி


கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்

32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.


search tags : owayar, ouvayar, aathisoodi, ஔவையார், ஆத்திசூடி

Saturday, May 2, 2009

கந்தர் அனுபூதி

கந்தர் அனுபூதி
(அருணகிரி நாதர் அருளியது)


காப்பு

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. 1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே. 6

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே. 16

யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே. 17

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே. 18

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே. 19

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே. 20

கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே. 21

காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ 22

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே. 24

மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே. 25

ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே. 26

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே. 27

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே. 28

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே. 32

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே. 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே. 34

விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே. 35

நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே. 36

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே. 37

ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே. 38

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே. 39

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே. 40

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே. 41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே. 42

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே. 43

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே. 44

கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே. 45

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51

திருச்சிற்றம்பலம்.


search tags : kanthar anupoothi, arunakirinathar, arunagirinathar, கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர்.

Friday, May 1, 2009

திருக்குறள் 1-10 (பொருளோடு)

திருக்குறள் - 1-10

அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் அடிப்படையாவது, முதன்மையாவது 'அ' கரம் எனும் எழுத்து. அது போல இவ் உலகிற்கு எல்லாம் முதன்மையானவன், அடிப்படையானவன் இறைவன்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

உண்மை அறிவாக விளங்கும் இறைவனின் தூய திருவடிகளைத் தொழுதலே கல்வி நூல்களைக் கற்றதின் பயனாகும்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களின் இதயமலரில் அமர்ந்திருக்கும் இறைவனின் மாண்புமிக்க திருவடிகளை இடைவிடாது சேர்ந்து நினைப்பவர் இன்பம் குறையாது இவ்வுலகின் கண் நிலைத்து வாழ்வர்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன். அந்த இறைவனின் திருவடிகளையே எண்ணிப் பொருந்துபவர்களுக்கு என்றும் எங்கும் எத்துன்பமும் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனின் பொருள் பொதிந்த உண்மைப் புகழைப் புரிந்து அவனை விரும்புகிறவர்களிடம் அறிவினை மயக்கி இருள் தருகின்ற தீவினை நல்வினை என்ற இரு வினைகளும் அணுகா.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின்பால் எழும் தாகங்களை அழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறிகளின்பால் முறையுடன் ஒழுகுபவர் என்றென்றும் நிலைத்து வாழ்வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றக் அரிது.

எந்த வகையிலும் யாராலும் தனக்கு நிகராக ஒப்புவமை காட்ட முடியாத இறைவனின் திருவடிகளை எண்ணித் துதிப்பார்களைத் தவிர, மற்றவர்கள் தங்கள் மனதில் எழும் துன்பச் சுமைகளை மாற்றல் இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.

அறக் கடலாகத் திகழும் இறைவனின் திருவடிகளை எண்ணிச் சேர்ந்தவர்களைத் தவிர, பிறர் பொருட்கடல், இன்பக்கடலாகிய பிற கடல்களை நீந்திக் கடக்க இயலாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உணர்ச்சிகளை உணராத கொள்கையற்ற உடல் பொறிகள் பயனற்றவை. அவை போல் எட்டுக் குணங்களின் இருப்பிடமாகத் திகழும் இறைவனை வணங்காத தலைகளும் பயனற்றவை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.

இறைவன் திருவடிகளை எண்ணித் துதிப்பவர் மட்டுமே பிறப்பு எனும் பெரிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு எண்ணாதவர் அக்கடலுள் வீழ்ந்து இன்னல் அடைவர்.


search tags : Thirukuaral, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்

Thursday, April 30, 2009

உலக நியதி

உலக நியதி

பட்டினத்தாரின் கருத்து நிறைந்த ஒரு பாடல் இது. ஒவ்வொரு வரிகளும் உண்மை. பாடலைக் காண்போம் வாருங்கள்.

நீ எதை அதிகமாய் விரும்பிகிறாயோ...
அதை ஒரு நாள் வெறுக்க வைப்பதும்
எதை நீ வெறுக்கிறாயோ - அதை
ஒரு நாள் விரும்ப வைப்பதுமே
இறைவனின் லீலையாகும். அதனால்
ஒன்றை விரும்பும் போதே, அதை ஒரு நாள்
வெறுக்க வேண்டி வரும் என்பதையும்
நினைவில் வைத்துக் கொண்டால்
விருப்பும் - வெறுப்பும் சமநிலைப்பட்டு
இன்பமும் துன்பமும் இல்லாமல் போய்விடும்
இறந்து கிடக்கும் பிணத்தின் மீது
இறக்கப்போகும் பிணங்கள்
விழுந்து அழுவதில் அர்த்தமில்லை.

மிகுந்த அர்த்தம் பொதிந்த ஒரு பாடல். இந்தப் பாடலின் அர்த்தத்தினை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். இருப்பினும் சில விடயங்களில் இது பொருந்தவில்லை. என் பெற்றோர், நான் வணங்கும் தெய்வங்கள், நல்லோர் இவர்கள் மேல் நான் கொண்ட நேசம் ஒருநாளும் மாறியதில்லை. ஆனால் வேறு நான் நேசித்த அநித்ய பொருட்களையும், சில பழக்கவழக்கங்களையும் வெறுத்திருக்கிறேன். அநித்ய பொருட்கள் என்றால் நிலையில்லாத பொருட்கள்.

விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவருதல் சாத்தியமா. ஆம். ஞானிகள் விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகவே எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் நம்மால் எப்படி விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவர முடியும்?. தியானத்தின் மூலமும், வாழ்க்கையின் படிப்பினைகள் மூலமும்தான். இதுவரை நான் முயற்சி செய்ததில் ஒரு 10% தான் முன்னேறியுள்ளேன். ஆனால் இந்தப் 10% தால் நான் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளேன். ஆக விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள். முயற்சியில் ஈடுபடும் போதே நிம்மதியினையும், சாந்தியினையும் அடைவீர்கள்.

இறந்தவர்களைக் கண்டு இறக்கப் போகும் நாம் அழுவது விந்தைதான். பிறப்பினையும் இறப்பினையும் முழுதுமாக உணர்ந்து கொண்டால்தான் ஒரு துக்கவீட்டில் கூட மனம் சஞ்சலமில்லாமல் இருக்கமுடியும். பூமியில் நிலையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை என்பதை மனதில் கொண்டால் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். துக்கவீட்டிற்குச் சென்றால் மனம் துக்கமடையும், அப்போதெல்லாம் இந்தப் பாட்டினை நினைவிற் கொள்வேன், மனம் அமைதியாகிவிடும். மனம் அமைதியாக இருந்தால்தான் அந்த துக்கவீட்டில் துக்கத்தில் ஆழ்ந்திருப்போரை நாம் அமைதிப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யமுடியும். மாறாக நாமும் அவர்களோடு துக்கத்தில் ஆழ்ந்து விட்டால் நம்மைத் தேற்றவே ஒருவர் வரவேண்டி இருக்கும்.


search tags : katurai, artcle, கட்டுரை, பயனுள்ளவை, பட்டினத்தார், patinathar

Wednesday, April 29, 2009

ஆன்மிகக் கதைகள் - 2

ஆன்மிகக் கதைகள் - 2

- அரசனும் அடிமையும் -


அரசன் ஒருவருக்கு ஓர் அடிமை மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் சேவை செய்து வந்தான். தனது அரசனை எப்போதும் போற்றியபடியும், எந்த நேரத்திலும் சேவைபுரியத் தயாராக இருந்தான். அவ்வடிமையின் உண்மைத்தன்மையை நன்றாக உணர்ந்த அரசர் அவனைத் தன் முதலமைச்சராக நியமித்தார். இவ்வாறு அடிமையாக இருந்த ஒருவன் இரவோடிரவாக முதலமைச்சராக மாறியதைக் கண்ட மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அடிமையான முதலமைச்சர் மீது பொறாமை கொண்டனர்.எல்லா அமைச்சர்களும் இந்த விடயம் காரணமாக ஒன்று கூடி தமது இந்த மனக்குறையை அரசனிடம் கூறினர். இவர்களுடைய மனக்குறையை மிகவும் அமைதியாகக் கேட்டு விட்டு "இன்றிலிருந்து ஒரு கிழமை முடிய நீங்களும் முதலமைச்சரும் எம்மை இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள பூஞ்சோலையில் உள்ள விடுதியில் சரியாக மாலை 4 மணிக்கு என்னை வந்து சந்திக்க வேண்டும். எவர் ஒருவர் என்னை வந்து முதலாவதாகச் சந்திக்கிறாரோ அவரே எம்மீது உண்மையான அன்பும் மரியாதையும் உள்ளவர்" என அரசர் கூறினார்.

ஒரு சில நிமிடங்களின் பின் அரசர் முதலமைச்சரை வரவழைத்து ஏனையோருக்கு கூறியவற்றைக் கூறினார். பின்னர் தளபதியை வரவழைத்து அமைச்சர்கள் தம்மைக் காண இருக்கும் பூஞ்சோலைக்கு இட்டுச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் விடுதிகளும் கூடாரங்களும் அமைக்கும்படியும் அதில் சுவைமிகுந்த சிற்றுண்டிகளும், மனதைக் கவரும் பொருட்களும், களியாட்டங்களும் ஏற்பாடு செய்யும்படி கூறினார். பின் அனைத்து அமைச்சர்களுக்கும் கால்நடையாக வந்தே தம்மைக் காணவேண்டும் என செய்தி அனுப்பினார்.

அரசர் குறித்த நாளும் வந்தது. முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வாறு இவர்கள் நடந்து செல்லும் போது முதலமைச்சரைத் தவிர மீதி அனைவரும் சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கும் கூடாரங்களுக்கும் சென்று இன்புற்று இருந்தனர். சிற்றுண்டிகள் மற்றும் களியாட்டங்கள் என அனைத்துமே இலவசமாக இருந்தமையால் மிகவும் ஆனந்தமாக இருந்தனர். அரசரைச் சந்திக்க இன்னும் நேரம் உண்டு என கூறிக்கொண்டு சாலையில் இருந்த அனைத்து களியாட்ட இடங்களுக்கும் சென்றனர். இவ்வாறாக நேரம் சென்று கொண்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்க, முதலமைச்சரோ இவை எவற்றிலும் தன் கவனத்தைச் சிதறவிடாது அரசர் ஆணையை மனதிற் கொண்டு நேரே பூஞ்சோலை விடுதியை தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே சென்றடைந்தார். ஏனைய அமைச்சர்களில் சிலர் அரை மணித்தியாலம், சிலர் ஒரு மணித்தியாலம் பிந்தியே வந்தனர். சிலரோ வராது இருந்துவிட்டனர்.

அடுத்த நாள் அனைத்து அமைச்சர்களையும் அழைத்தார். அவர்களிடம் " இந்த அடிமையை(முதலமைச்சரைச் சுட்டிக் காட்டி) ஏன் முதலமைச்சராக்கினேன் என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்குமெனெ எண்ணுகிறேன். இந்த உயர்ந்த பதவிக்குத் தகுந்த அதி உத்தம குணங்கள் பொருந்தியவர் இவர் என்பதனை அறிந்தே முதல் அமைச்சர் பதவியை இவருக்கு அளித்தேன் " எனக் கூறினார். அமைச்சர்கள் வெட்கத்தில் தலை குனிந்தபடி அரசனுடைய முடிவை வரவேற்றனர்.

இது போன்றே, உண்மையான ஞானிகளும், துறவிகளும், பக்தர்களும் இறைவனையன்றி வேறு ஒருவரையும் மனதில் சிந்திக்க மாட்டார்கள். இறைவனை அடையும் நேர்வழியில் செல்வார்கள். வீதியோரக் கவர்ச்சிக்கு ஒப்பான மாயையில் சிக்கமாட்டார்கள். உயிருக்கு உறுதுணையான இறைவனையே நாடுவார்கள். அதனால் மனதில் நல்ல எண்ணங்களோடு, சமுதாயத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள். காரணம் இறைவனையே சதா சிந்திக்கும் மனதில் நல்ல எண்ணங்களே எப்போதும் தோன்றும்.



search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

Related Posts Widget for Blogs by LinkWithin