ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, July 8, 2009

அபிராமி அந்தாதி 81-90



அபிராமி அந்தாதி

பகுதி 81-90


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அணங்கே-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. 81

ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகள் எல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? 82

ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).


விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே. 83

அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வˆƒஜ்ர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)


உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84

ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. 85

ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என் கண் முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).


மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86

ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே. 87

ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)


பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே. 88

ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.


சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே. 89


அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90

ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்து ம் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 71-80


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin