இராமாயணம்
பகுதி - 8
சீதையின் பிறப்பு:-
பத்மாட்சன் என்ற பார்த்திபன் இந்தப் பரத கண்டத்தை ஆட்சி புரிந்தான். அவன் மகப்பேறு வேண்டி மாதவனை வேண்டி மாதவம் புரிந்தான். திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
ஆரா அமுதம் அளித்த நாராயணா! திருமகள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.
திருமால் ஒரு மாதுளங்கனியை அவனுக்கு அளித்தார். அவன் அதைப் பிரித்தபோது ஒரு பாதி முத்துகளும், மற்ற பாதியில் இலட்சுமியும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான். மாதுளங்கனி போன்ற நிறமுடைய அம்மங்கைக்குப் பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்குச் சுயம்வரம் வைத்தான்.
சுயம்வரம் என்றால் பெண் தானே மணமகனை வரிப்பது. 56 சிற்றரசர்களும் சுயம்வரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாட்சி தந்தையைப் பார்த்து, அப்பா! நான் திருமாலை மணந்துகொள்ளத் தவம் செய்கிறேன். சுயம்வரம் எப்படி அமைத்தீர்கள்? என்று கேட்டாள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே! விண்ணில் தெரிகின்ற நீலநிறத்தை எவன் உடம்பில் பூசிக்கொள்வானோ! அவன் என் மகளுக்கு மாலை போட வேண்டும். இது என் மகளின் விருப்பம் என்றான்.
இது ஆகாத காரியம் என்று அரசர்கள் சீறி, பத்மாட்சன் மீது போர்தொடுத்தார்கள். போரில் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்துகொண்டிருந்தாள். வானவீதியிலே விமானத்தில் சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியைக் கண்டு காதல் கொண்டு பத்மாட்சியைத் தனக்குத் தருமாறு கேட்டான்.
பத்மாட்சன், பெண்ணைத் தருவதில் தடையில்லை. வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான்.
இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் மறைந்துவிட்டாள். அந்த நகரத்துக்கு இராவணன் தீ வைத்தான். அந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.
மற்றொருநாள் இராவணன் வான்வழியே செல்லும் பொழுது நகரம் எரிந்து கொண்டேயிருப்பதையும், அதன் அருகில் பத்மாட்சி தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டுத் தீயை அணைத்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தைக் கண்டு எடுத்து, அதனை வண்டோதரிக்குத் தரவேண்டுமென்று பெட்டியில் வைத்துக் கொண்டான். பல அலுவல் காரணமாக அதனை மறந்து விட்டான்.
ஒருநாள், வண்டோதரி! பெண் மாணிக்கமாகிய உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்தேன் என்று கூறிப் பெட்டியைத் திறந்தான்அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி, மயக்கும் கள்ளி! என்ன என்ன வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, வாளை எடுத்து வெட்டுவதற்கு ஓங்கினான்.
வண்டோதரி கணவனார் கரத்தைப் பற்றித் தடுத்து, பெருமானே! இந்தக் குழந்தையை வெட்டாதீர்கள். மாறி மாறிப் பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாக மாறி உன்னைக் கொன்றுவிடுவாள். இந்தப் பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். பெட்டியை மூடி அரக்கர்களின் கையிலே கொடுத்து, இமயமலைச் சாரலிலே புதைத்து விடுங்கள் என்றான். அவ்வாறே அவர்கள் புதைத்து விட்டார்கள்.
சிலர் இலங்கையிலே சீதை பிறந்தாள் என்றும், சீதை பிறக்க இலங்கை அழியும் என்றும் கூற, இராவணன் பெட்டியில் குழந்தையை வைத்துக் கடலில் விட்டுவிட, மிதிலாபுரியில் கரை தட்டியது என்று கூறுவார்கள். மிதிலாபுரிக்கும், கடலுக்கும் சம்பந்தமே இல்லை. மிதிலாபுரி இப்பொழது ஜனக்பூர் என்று வழங்குகிறது. அதற்குப் பாட்னாவிலிருந்து ஜீப்பில் போகவேண்டும் நேபாளத்தின் பார்டரில் இந்த நகரம் இருக்கின்றது.
மிதிலாபுரியை அரசு புரிகின்ற சீரத்துவஜ ஜனகர் பரமஞானி மரவுரியைத் தன்கொடியில் எழுதிக் கட்டியதினால் சீரத்துவஜ ஜனகர் என்று பெயர் பெற்றார். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தார். மகாலட்சுமியே குழந்தையாக விளங்கிக் கொண்டிருந்தாள. ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார். தான தருமங்கள் செய்தார்.
பின்னர், ஆறுமாதம் கழித்து ஜனகருடைய மனைவி ஸுநயனி கருவுற்று வேறு ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பேர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்தார்கள்.
ஒருநாள் இந்த நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள. சீதாதேவி வீசிய பந்து ஜனகர் பூசை செய்கின்ற சிவன் வில்லின் அடியில் சிக்கிக் கொண்டது.
சீதை, ஊர்மிளை! பந்தை எடுத்துப் போடு என்றாள்.
ஊர்மிளை, அக்கா! பந்து சிவ தனுசின் கீழே அகப்பட்டுக் கொண்டது. அது அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள்.
என்னம்மா! ஒரு பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேரா? என்று கூறி, அன்னம்போல் நடந்து இடக்கையில் வில்லை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்துக் கொடுத்தாள். பழையபடியே வில்லை எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் பூசை செய்யவந்த ஜனகர் வில் மேடையில் இல்லாமல் மூலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்று கேட்டார்.
சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை. சீதா தேவி தன் தங்கையுடன் பந்து விளையாடினார்கள் என்றான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்ற கேட்டார்.
அப்பா நான்தான் எடுத்து வைத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, வில்லை இடக்கையால் எடுத்து மேடையில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி ஜனகருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய வில்லை, இந்த ஐந்து வயது குழந்தை அநாயாசமாக இடக்கையால் எடுத்து வைத்ததே! இந்தப் பெண்ணை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்ற சிந்தித்தார்.
தொடரும் ...
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 7
search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்
_*_*_*_
No comments:
Post a Comment