ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Monday, July 6, 2009

அபிராமி அந்தாதி 71-80



அபிராமி அந்தாதி

பகுதி 71-80


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? 71

அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?


எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. 72

ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையை உடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!


தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73

ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.


நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74

முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.


தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75

பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. 76

ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!


பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி-என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77

ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி
வணங்கி வழிபடுகின்றனர்.


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே. 78

என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப்பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.


விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? 79

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).


கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்-ஆடகத் தாமரை ஆரணங்கே. 80

ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளை எல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 61-70


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin