ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label ஆன்மிகக் கதைகள். Show all posts
Showing posts with label ஆன்மிகக் கதைகள். Show all posts

Thursday, July 9, 2009

எந்நாளும் ஏகனோடிரு



எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)

ஆன்மிகக் கதைகள் - 6


ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் அழுவதைப் பார்த்தார்.

உடன் அவன் அருகிற் சென்று " சகோதரனே ஏன் அழுகின்றாய்? " என்று விசாரித்தார்.

அதற்கு அவன் " இந்தத் திரிகல்லில் அகப்பட்டு நெரியும் அரிசி போல நானும் இவ்வுலகில் அகப்பட்டுக்கொண்டேன். அதனை நினைத்து அழுகின்றேன் " என்றான்.

அதற்கு அச்சந்நியாசியார் அவனை நோக்கி " திரிகல்லின் மேலே உள்ள சுழற்றும் கல்லை எடுத்துவிட்டு நடுவில் உள்ள கட்டைக்கருகில் உள்ள அரிசிகளைக் கவனி. கட்டைக்கருகில் உள்ள அத்தனை அரிசிகளும் நெரிபடாமல், முழு அரிசிகளாகவே இருக்கின்றன. இதோ பார்! நீயும் இறைவனை-ஏகப்பொருளை-ஏகனை சதா நேரமும் மனதில் தியானித்தவண்ணம் இருந்தாயானால் உலக வலைக்குள் சிக்கித் தவிக்கமாட்டாய். இறைவனுக்கே ஆட்பட்டுவிடுவாய்! அவ்வாறு வாழ்ந்தால் திரிகல்லின் கட்டைக்கருகில் காணப்படும் அரிசி போல நீயும் காப்பாற்றப்படுவாய். உலகில் சம்பவிக்கும் துரதிஷ்டங்கள், துன்பங்கள் வந்து உன்னைப் பற்றாது " என்றார்.

இதைக் கேட்ட அவன் உள்ளம் தெளிந்தது.


நீதி : இறைவன் மேல் மனதை நிறுத்தி, செய்யும் வேலைகளை அவருக்குச் செய்வதாகவே நினைத்து செய்யும் போது, இவ்வுலக மாயைகள் ஒருவனை எந்த விதத்திலும் துன்பத்தில் ஆழ்த்தாது. மாறாக இறைவனை மறந்து நான் என்ற அகங்காரத்தில் வேலைகளில் ஈடுபடும்போது துன்பங்கள் நம்மை எளிதில் சூழ்ந்துவிடும்.

எனவே இறைவனை நம் மனதில் எப்போதும் இருந்தி, இந்த உலக மாயைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ்ந்திடுவோம்.


நன்றி : சுவாமி இராமதாஸ் அருளுரைகள்


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-5


search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்

_*_*_*_

Thursday, June 25, 2009

சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்



சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்

ஆன்மிகக் கதைகள் - 5


வேடிக்கையில் விருப்பமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பல கண்ணாடிகளைத் தனது அறையின் நாலாபக்கச் சுவர்களிலும், அறையின் மேற்பலகைகளிலும் பதித்து வைத்திருந்தான். ஒரு அங்குல இடைவெளி கூட இல்லாமல் கண்ணாடிகளைப் பதிந்திருந்தான். அப்படிப்பட்ட அந்த அறையில் சென்று கதவினை மூடிக் கொண்டு, மின் விளக்கின் விசையினைத் தட்டி ஒளிரவிட்டான். அறை மத்தியில் நின்று தனது விம்பங்கள் பலநூறு வடிவத்தில் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தான். இக் காட்சியை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பல கோணங்களில் நின்று வெகுவாக இரசித்தான். இவ்வாறு சில நிமிடங்கள் பார்த்த பின்னர் கதவினை மூடுவதற்கு மறந்து வெளியே சென்றான்.

சில நிமிடங்களில் இவன் வளர்த்து வந்த நாய், பூட்டப்படாதிருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள் சென்றது. தனது விம்பத்தைக் கண்ணாடியிற் கண்டது. அதன் விம்பங்களை வேறு நாய்கள் என நினைத்து அவற்றோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. அகோரமாகச் சண்டை போட்டது. இதனால் களைப்படைந்து, இளைத்து ஈற்றில் இறந்து விட்டது.

இவ்வாறுதான் மனிதனும் பிற மனிதர்களைத் தன்னிலும் வேறுபட்டவனாக நினைக்கின்றான். வீணே சண்டைகள் போடுகின்றான். இன்னும் எத்தனையோ தீமைகளைப் புரிகின்றான். இதனால் தானும் அழிந்து மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றான். அறிவீனத்தால் அழிந்த நாயிற்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகின்றது.

எப்போது மற்றைய மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்கின்றானோ, அப்போது பல பிரச்சனைகள் அடியோடு ஒழிந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தனது பிரதிபிம்பம் என நினைக்க வேண்டும். அதாவது மன்னுயிரயும் தன்னுயிர் போலவே நேசிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் இவ்வுலகமே சொர்க்கபுரியாக மாறிவிடும்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-4

search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்

_*_*_*_

Sunday, June 14, 2009

இறைநாமத்தின் சக்தி



இறைநாமத்தின் சக்தி

ஆன்மிகக் கதைகள் - 4


ஒரு பெண் அடியாள் தனது குருவுக்குத் தொண்டு செய்து வந்தாள். குரு எவ்வாறு சிரத்தையுடன் இறை நாமத்தை உச்சரிப்பாரோ அவ்வளவு பக்தியுடன் இப் பெண் அடியாளும் ஜெபித்துவந்தாள். பசுவின் சாணியைப் பிடித்து காயவைத்து விறகாகப் பாவிப்பதற்குத் தினமும் வேலை செய்வாள். இவ்வாறு செய்து வெயிலில் காய்வதற்காக ஒரு நாள் வைத்தாள்.

அயலில் உள்ள வேறு ஒரு பெண் இதே வண்ணம் சாணி தட்டி, அடியவளின் சாணி உருண்டைகளுக்கு அருகில் காய வைத்தாள். ஏதோ ஒருவிதமாக இருவரினதும் சாணி உருண்டைகளும் கலந்து விட்டன. அயலவள் தனக்குரிய சாணி உருண்டைகளோடு அடியவளின் சாணி உருண்டைகளிற் சிலவற்றை எடுக்க எத்தனித்தாள்.

இதனைக் கேள்வியுற்ற குருவானவர், " எனது அடியாள் உருட்டிய சாணி உருண்டைகளை மிக இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் " என்று கூறிவிட்டு ஒவ்வொரு சாணி உருண்டைகளையும் எடுத்துத் தனது காதருகே வைத்தார். சிலவற்றில் இறைவனது நாமம் ஒலிப்பது கேட்டது. எதனிடம் இறை நாமம் ஒலிப்பது கேட்க முடியுமோ அவைகளை வேறாக்கினார். இவ்விதம் இரு பெண்களுக்குமிடையில் வந்த பிணக்கை நீக்கிவிட்டார்.

என்ன விந்தை; பெண் அடியாள் நின்றும், இருந்தும், கிடந்தும் எத்தொழிலைச் செய்தாலும் இறை நாமத்தை இடைவிடாது உச்சரித்த வண்ணமாகவே இருப்பதனால் அச்சொற்களைச் சாணியின் ஈரலிப்புத்தன்மை ஈர்த்தது. அது காரணமாக அச்சொற்கள் எதிரொலித்த வண்ணமிருந்தன.

இது போலத்தான் நாம் எத்தனை தடவை இறைவனது நாமத்தை உச்சரிக்கின்றோமோ அத்தனையும் நமக்கு நன்மையே. பின்னர் நீங்கள் உச்சரிக்காது இருக்கும் நேரத்தில் கூட மனதில் அதன் எதிரொலியை உங்களால் உணரமுடியும்.

ஆலயங்களில் அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்து விக்கிரகத்திற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்வார். அவ் விக்கிரகம் அம் மந்திரத்தினை ஈர்த்து, அதற்கான சக்தியையும் வெளிவிடும். இன்றும் சிறப்பாக, நியமத்தோடு பூஜை செய்யப்படும் விக்கிரகங்கள் மிகுந்த சக்தியோடு விளங்குவதைக் காணலாம்.


நன்றி : சுவாமி ராமதாஸ் அருளுரைகள்


search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

_*_*_*_

Monday, May 18, 2009

உண்மையான சந்நியாசம்




உண்மையான சந்நியாசம்

ஒரு புருஷனும் அவன் மனைவியும் சந்நியாசம் பெற்றுக் கொண்டு, தீர்த்த யாத்திரைக்காக ஒன்று சேர்ந்து சென்றனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்கள். முன்னதாக அக் கணவனும், பின்னே அவன் மனைவியுமாகச் சென்றனர். சற்றுத் தூரம் செல்கையில் முன்னே சென்ற கணவனுக்கு ஒரு வைரக்கல் தென்பட்டது.
ஒரு வேளை அந்த வைரக்கல்லைத் தன் மனைவி கண்டு, அதன் மேல் ஆசை கொண்டு தன் சந்நியாச பலத்தை இழந்துவிடுவாளோ என சிந்தித்தான். அதை அவள் கண்களில்படாமல் புதைத்து விடலாம் என முடிவெடுத்தான். அவள் அருகில் வருவதற்குள் புதைக்கவேண்டுமே என அவசர அவசரமாகத் தரையைத் தோண்டினான். ஆனால் மனைவி அருகில் வந்துவிட்டாள். " சுவாமி எதற்காக இத்தனை அவசரமாகத் தரையைத் தோண்டுகின்றீர்கள் ?" எனக் கேட்டாள். அவளிற்கு உண்மையைச் சொல்லாமல் ஏதோ மறைமுகமாகப் பதில் சொன்னான். இருப்பினும் அவன் மனைவிக்கு அவன் மனக்கருத்தைப் பற்றியும், வைரத்தினைப் பற்றியும் நன்றாக விளங்கியது. அதனால் அவன் மனதிற்படும்படி இப்படிக் கேட்டாள். " சுவாமி! வைரத்துக்கும், சாதாரண கல்லுக்கும் உள்ள வித்தியாசம் தங்களுக்கு இன்னும் தெரிகிறதானால் தாங்கள் ஏன் உலகத்தைத் துறந்து வந்தீர்கள்?. "

இது ஸ்ரீ ராம கிருஷ்ணரின் கதைகளில் ஒன்று. எத்தனை அர்த்தம் பொதிந்த கதை. இன்று பலர் இந்தக் கதையில் வரும் புருஷனைப் போலத்தான் இருக்கிறார்கள். மனதில் உலக ஆசைகளோடே துறவறம் மேற்கொள்கிறார்கள். இப்படியானவர்களால்தான் போலிச் சாமியார்கள் அதிகரித்துவிட்டனர். இப்படியான போலிச் சாமியார்களால், உண்மையான சாமியார்களின் நற்பெயர் கூடக் களங்கமாகிவிடுகிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், துறவறம் மேற்கொள்வது அத்தனை சுலபமானது இல்லை.


நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்


search tags : sree ramakrishna paramahamsae, Aanmikam, Saivam, Aanmika kathaigal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சைவம், ஆன்மிகம், ஆன்மிகக் கதைகள்.

Wednesday, April 29, 2009

ஆன்மிகக் கதைகள் - 2

ஆன்மிகக் கதைகள் - 2

- அரசனும் அடிமையும் -


அரசன் ஒருவருக்கு ஓர் அடிமை மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் சேவை செய்து வந்தான். தனது அரசனை எப்போதும் போற்றியபடியும், எந்த நேரத்திலும் சேவைபுரியத் தயாராக இருந்தான். அவ்வடிமையின் உண்மைத்தன்மையை நன்றாக உணர்ந்த அரசர் அவனைத் தன் முதலமைச்சராக நியமித்தார். இவ்வாறு அடிமையாக இருந்த ஒருவன் இரவோடிரவாக முதலமைச்சராக மாறியதைக் கண்ட மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அடிமையான முதலமைச்சர் மீது பொறாமை கொண்டனர்.எல்லா அமைச்சர்களும் இந்த விடயம் காரணமாக ஒன்று கூடி தமது இந்த மனக்குறையை அரசனிடம் கூறினர். இவர்களுடைய மனக்குறையை மிகவும் அமைதியாகக் கேட்டு விட்டு "இன்றிலிருந்து ஒரு கிழமை முடிய நீங்களும் முதலமைச்சரும் எம்மை இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள பூஞ்சோலையில் உள்ள விடுதியில் சரியாக மாலை 4 மணிக்கு என்னை வந்து சந்திக்க வேண்டும். எவர் ஒருவர் என்னை வந்து முதலாவதாகச் சந்திக்கிறாரோ அவரே எம்மீது உண்மையான அன்பும் மரியாதையும் உள்ளவர்" என அரசர் கூறினார்.

ஒரு சில நிமிடங்களின் பின் அரசர் முதலமைச்சரை வரவழைத்து ஏனையோருக்கு கூறியவற்றைக் கூறினார். பின்னர் தளபதியை வரவழைத்து அமைச்சர்கள் தம்மைக் காண இருக்கும் பூஞ்சோலைக்கு இட்டுச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் விடுதிகளும் கூடாரங்களும் அமைக்கும்படியும் அதில் சுவைமிகுந்த சிற்றுண்டிகளும், மனதைக் கவரும் பொருட்களும், களியாட்டங்களும் ஏற்பாடு செய்யும்படி கூறினார். பின் அனைத்து அமைச்சர்களுக்கும் கால்நடையாக வந்தே தம்மைக் காணவேண்டும் என செய்தி அனுப்பினார்.

அரசர் குறித்த நாளும் வந்தது. முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வாறு இவர்கள் நடந்து செல்லும் போது முதலமைச்சரைத் தவிர மீதி அனைவரும் சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கும் கூடாரங்களுக்கும் சென்று இன்புற்று இருந்தனர். சிற்றுண்டிகள் மற்றும் களியாட்டங்கள் என அனைத்துமே இலவசமாக இருந்தமையால் மிகவும் ஆனந்தமாக இருந்தனர். அரசரைச் சந்திக்க இன்னும் நேரம் உண்டு என கூறிக்கொண்டு சாலையில் இருந்த அனைத்து களியாட்ட இடங்களுக்கும் சென்றனர். இவ்வாறாக நேரம் சென்று கொண்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்க, முதலமைச்சரோ இவை எவற்றிலும் தன் கவனத்தைச் சிதறவிடாது அரசர் ஆணையை மனதிற் கொண்டு நேரே பூஞ்சோலை விடுதியை தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே சென்றடைந்தார். ஏனைய அமைச்சர்களில் சிலர் அரை மணித்தியாலம், சிலர் ஒரு மணித்தியாலம் பிந்தியே வந்தனர். சிலரோ வராது இருந்துவிட்டனர்.

அடுத்த நாள் அனைத்து அமைச்சர்களையும் அழைத்தார். அவர்களிடம் " இந்த அடிமையை(முதலமைச்சரைச் சுட்டிக் காட்டி) ஏன் முதலமைச்சராக்கினேன் என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்குமெனெ எண்ணுகிறேன். இந்த உயர்ந்த பதவிக்குத் தகுந்த அதி உத்தம குணங்கள் பொருந்தியவர் இவர் என்பதனை அறிந்தே முதல் அமைச்சர் பதவியை இவருக்கு அளித்தேன் " எனக் கூறினார். அமைச்சர்கள் வெட்கத்தில் தலை குனிந்தபடி அரசனுடைய முடிவை வரவேற்றனர்.

இது போன்றே, உண்மையான ஞானிகளும், துறவிகளும், பக்தர்களும் இறைவனையன்றி வேறு ஒருவரையும் மனதில் சிந்திக்க மாட்டார்கள். இறைவனை அடையும் நேர்வழியில் செல்வார்கள். வீதியோரக் கவர்ச்சிக்கு ஒப்பான மாயையில் சிக்கமாட்டார்கள். உயிருக்கு உறுதுணையான இறைவனையே நாடுவார்கள். அதனால் மனதில் நல்ல எண்ணங்களோடு, சமுதாயத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள். காரணம் இறைவனையே சதா சிந்திக்கும் மனதில் நல்ல எண்ணங்களே எப்போதும் தோன்றும்.



search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

Monday, April 27, 2009

ஆன்மிகக் கதைகள் - 1

ஆன்மிகக் கதைகள் - 1

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.


search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

Related Posts Widget for Blogs by LinkWithin