ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, June 26, 2009

அபிராமி அந்தாதி 61-70



அபிராமி அந்தாதி

பகுதி 61-70

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே. 61

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. 62

ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.


தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்-சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63

ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.


வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.


ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 65

ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!


வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. 66

ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.


தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. 67

அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.


பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. 68

ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, 69

ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.


கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70

ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம், இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 51-60


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin