ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, June 3, 2009

பிரதோஷ விரதம்
பிரதோஷ விரதம்


கந்தபுராணத்தில் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவ விரதங்களுள் பிரதோஷ விரதமும் ஒன்று. இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசித் திதியிலே அதாவது அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாவது நாளிலே இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகிறது. சிவதருமோத்திரம், சிவரகசியம் முதலிய நூல்களிலும் இவ்விரதமகிமைக் கதைகள் காணப்படுகின்றன.

மாலைப்பொழுது என்னும் கருத்தையுடைய பிரதோஷம் என்ற சொல்லால் அழைக்கப்படும் இவ்விரத வழிபாடும் மாலை நேரத்திற்குரியதே. சூரிய அஸ்தமனத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் அஸ்தமனத்துக்குப் பின் மூன்றேமுக்கால் நாழிகையுமாகச் சேர்ந்த ஏழரை நாழிகைப் பொழுது பிரதோஷ காலம் எனப்படும். அதாவது பிற்பகல் சுமார் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரையிலான மூன்று மணித்தியால காலமே பிரதோஷ காலமாகக் கொள்ளப்படும். இக்காலத்தில் சிவபிரானை விஷேஷமாக வழிபடுவதே இவ்விரதத்தின் முக்கியமான அம்சமாகும்.

முன்பு தேவர்கள் அசுரர்களோடு இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் அங்கிருந்து ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அஞ்சியோடிய போது பரமசிவனார் அவர்கள் மீதும், சர்வலோக ஆன்மாக்கள் மீதும் கருணை கொண்டு அந்த ஆலகால விஷத்தைத் தாமே அருந்தித் தமது கண்டத்தில் நிறுத்தியருளினார். (இதனால் சிவபெருமான் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.) பின்னர் பயம் நீங்கிய தேவர்கள் இறைவனை வழிபட்டு மீண்டும் கடைந்த போது அமிர்தம் தோன்றியது.

அத்தருணம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்
ணம் எம் பெருமான் இடபதேவரின் கொம்புகளுக்கிடையில் நின்று திருநடனம் செய்தருளினார். வளர்பிறைத் திரயோதசியும், சனிக்கிழமையும் கூடிய ஒரு நன்னாளில்தான் இந்த வைபவம் நிகழ்ந்தது. இதனால் தான் சனிப்பிரதோஷ விரதம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

ஆலகால விஷத்தை உட்கொண்டபின் அது ஜீவராசிகளை வருத்தாமலிருக்கும் பொருட்டு ஒரு கணநேரம் சிவபிரான் மௌனமாக இருந்தார். அப்போது தேவரும், முனிவரும் உணவருந்தாது பரமசிவனாரைப் பிரார்த்தித்து நி
ன்றனர். அந்தக் காலமே ஏகாதசியாகும்.

இதன் பின்னர் இறைவனின் அருளாணைப்படி திருப்பாற்கடலை மீண்டும் கடைந்தபோது அமிர்தம் தோன்றியது. அதனை அமரர் அருந்தினர். இக்காலமே துவாதசியாகும். இதன் பின் முன்னர் குறிப்பிட்டவாறு சிவபிரான் டமருகம் ஏந்தி நடனம் செய்யத் திருமால் குடமுழா என்ற வாத்தியத்தை முழக்கத் தேவேந்திரன் சுருதி சேர்த்து நிற்க
, தும்புருநாரதர்கள் இசைபாடக் கலைவாணி மகரவீணையை மீட்டிப் பாடத் திருமகளும் இணைந்து பாட நான்முகன் தாளம் போட, உமாதேவியாரும், தேவரும், முனிவரும் இந்தத் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் தரிசித்து நின்றனர். இக் காலமே திரயோதசியாகும்.

இம் மூன்று திதிகளும் சேர்ந்த மூன்று நாட்கள் பரமசிவனாருக்கு மிகச் சிறிய அளவுள்ள பிரதோஷ காலமா
கும்.

கணவரை இழந்த பதிவிரதைப் பெண்ணொருத்தி தனது சொந்த மகனும், வளர்ப்பு மகனாகிய ஒரு அரசகுமாரனுமாகிய இரு புதல்வர்களுடன் வாழ வழி தெரியாது வருந்தி வறுமையில் உழன்றபோது சாண்டில்ய முனிவரால் உபதேசிக்கப்பட்டு மூவருமாக இப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்டனர். அதன்பிரகாரம் அந்தணகுமாரன் அறிவாற்றலும் பொருளும் பெற்றான். அரசகுமாரன் அரசாட்சியைப் பெற்றான் என்று புராணம் உ
ரைக்கும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடிய இவ்விரதத்தை முனிவர்கள் பலரும் இந்திரனும் கைக்கொண்டு அரும்பேறுகள் பல பெற்றனர். கடன், வறுமை, நோய், துர்மரணம், பயம் இவற்றைப் போக்கவல்லது இது. முக்கியமாகப் புத்திர லாபம் தரவல்லது. புத்திரரை விரும்புவோர் இவ்விரதமிருப்பது வழக்கம்.

இவ்விரத நாளிலே நித்திய கர்மாநுஷ்டானங்கள் முடித்து பகல் முழுவதும் போசனம் இல்லாமல் இருந்து மாலை நாலரை மணிக்கு முன்னதாக ஸ்நானம் செய்து சாயம் சந்தியாவந்தனம், சிவபூஜை முதலியவற்றைச் செய்த பின் (மாலை நேரத்துக்குரிய நித்திய கர்மாநுஷ்டானங்கள்) வெள்ளை ஆடை தரித்துச் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து பிரதோஷ பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சி
வாலயத்தில் பிரதஷிணம்(பிரதட்சணம்) செய்து வழிபடுவதற்கென்று சிறப்பான விதிமுறையொன்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளது.

இடபதேவரை
முதலில் வணங்கி அங்கிருந்து இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்த பின் சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் இடபதேவரை வணங்கி வலமாகக் கோமுகைவரை சென்று மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கித் திரும்பி வலமாகக் கோமுகைவரை சென்று (இத்தடவை இடபதேவரைத் தரிசிக்காமல் செல்ல வேண்டும்) மறுபடி அங்கிருந்து திரும்பி இடபதேவரைத் தரிசிக்காமல் இடமாகச் சென்று சண்டேஸ்வரரை வணங்கித் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து அவரது இரண்டு கொம்புகளின் நடுவே சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து பிரணவத்தோடு கூட "ஹர ஹர" என்று சொல்லி வணங்க வேண்டும். பிரதோஷ காலத்தில் கோமுகையைத் தாண்டக்கூடாது என்பதே முக்கிய விதியாகும். இந்தப் பிரதஷிண முறைக்குச் சோமசூத்திரப் பிரதஷிணம் என்று பெயர்.

இவ்வாறு ஆலய வழிபாடு செய்த பின் வீடு திரும்பிப் பிரதோஷ காலம் முடிந்த பிறகு (இரவு ஏழரை மணிக்கு மேல்) சிவனடியார்களுடன் போசனம் செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் அன்ன நைவேத்தியத்துடன் காப்பரிசியும் நிவேதனம் செய்து அன்பர்களுக்கு வழங்க வேண்டும். காப்பரிசி என்பது பச்சரிசியையும் பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு நனைய வைத்து வடித்தெடுத்து அதற்குச் சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் சேர்த்துக் குழைத்துச் (உப்புச் சேராமல்) செய்வதாகும். இதனையே பிரதோஷ விரதத்துக்கு உணவாகக் கொள்ள வேண்டும். இது இயலாதவர்கள் சர்க்கரைச் சாதத்தை நிவேதனம் செய்து உண்ணலாம்.

பிரதோஷ காலத்தில் எவராயினும் என்ணெய் தேய்த்தல், குளித்தல், போசனம் செய்தல், தூங்குதல் முதலியன செய்தலாகாது. இவ்வேளையில் மந்திரஜபம், நூல் படித்தல் என்பனவும் செய்யாது மௌனமாக இறைவனைத் தியானிக்குமாறு புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்களுள் ஒன்றில் சனிக்கிழமையில் பிரதோஷம் வரும் நாளாகப் பார்த்து இவ்விரதம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஒரு வருட காலம் இந்தப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்ட பின் முறைப்படி விரதோத்யாபனம் செய்யலாம். விரும்பினால் தொடர்ந்து கைக்கொள்ளலாம். ஆனால் வருடா வருடம் விரத பூர்த்தியைச் செய்ய வேண்டும். 41, 55, 81, 97 என்ற எண்ணிக்கை வரும்வரை வளர்பிறைப் பிரதோஷம் மட்டும் அநுஷ்டிப்பார்கள் சிலர்.

இவ்விரதம் கைக்கொள்வோருக்கு கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் இவை யாவும் நீங்கி முக்தி சித்திக்கும் என்று ஆறுமுக நாவலரவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

" இரண நல்குர விரும்பவ மிரும்பசி யுரோகம்
அரணு றும்பயங் கிலேசங் கேதம்மவ மிருத்து
மரண வேதனை யிவையெலா மகற்றென வணங்கிப்
புராண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால் " - கடம்பவன புராணம்.search tags : Pirathosham, Pirathosam, Lord Shiva, Viratham, பிரதோஷம், பிரதோஷ விரதம், விரதம்.

-*-*-*-

2 comments:

Personal said...

Gud one pls continue posting useful Informations

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin