ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Monday, June 22, 2009

இராமாயணம்-6



இராமாயணம்

பகுதி - 6

(முன்னைய பாகம் : செல்க)


கானகத்தில் தங்குதல்:-


அசோகங்கொழுந்து, மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து அரச குமாரர்களைப் படுக்க வைத்தார். கிழக்கே தலைவைத்துப் படுப்பது நல்லது. கண்கள் இடப்பக்கம் கீழே இருக்குமாறு படுத்தால் பிராண வாயு சூரிய நாடியிற் செல்லும். நாடியில் ஜெபம் செய்துகொண்டே இராமர் கண்ணுறங்கி விட்டார். இராமருடைய கால்மாட்டில் இளைய பொருமாள் படுத்துக் கண்ணுறங்கினார். உலக சொத்தாகிய அரச குமாரர்களை அரக்கர்களும், பேய்களும், விலங்குகளும் வாழ்கின்ற காட்டில் உறங்க வைத்துவிட்டு, முனிவருக்கு உறக்கம் வருமா? இராமருடைய தலைமாட்டில் அமர்ந்த இராமரையே உற்று நோக்கி கொண்டிருந்தார். இராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்துகொண்டிருந்தது. மற்றவர்கள் உறங்கினால் கருணையா வழியும்?

இராமா! உன் தந்தையாகிய தசரதன் நான் உரட்டிய உரட்டலுக்குப் பயந்து இந்தப் பொல்லாத கானகத்தில் உன்னை எவ்வாறுதான் அனுப்பினானோ? அவன் கல்மனம் படைத்தவன் போலும். நீ எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரன் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு அனுப்பியிருக்கமாட்டேனே. நீ பாற்கடலில் பாம்பணையில் துயின்ற பரம்பொருள் அல்லவா? உலகம் உய்ய மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும்
இல்லாத இந்த வெய்ய கானகத்தில் பெறுந்தரையில் உறங்குகின்றாயே.. என்று மனதிற்குள் கூறிக்கொணடு கண்விழித்துக் கொண்டிருந்தார்.

விடியற்காலையில் மூவரும் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திர ஜெபம் செய்து புறப்பட்டார்கள். வழியில் சிறந்த ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணரைப் பார்த்து, ரகு குல ரத்தினங்களே! இது மூவரும், தேவரும் யாவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் யோகம் செய்த ஆசிரமாகும். சிவமூர்த்தியே தவநிலையில் நின்ற இந்த ஆசிரமம் மிகவும் வலிமை வாய்ந்தது. அளவிடற்கரிய மகிமை உடையது. சிவமூர்த்தியின் யோகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவமூர்த்தியின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்ற இருந்தபடியால் இது அங்கதேசம் என்று வழங்கப்படுகிறது என்று கூறினார்.அன்று அங்குச் சிவசிந்தையுடன் தங்கினார்கள்.


தாடகைவதம்:-

மறுநாள் மூவரும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். வழியில் கொடிய பாலைவனம் தென்பட்டது. தாங்கமுடியாத வெப்பமுடைய அக்கானகத்தில் பசி தாகத்தால் அரச குமாரர்கள் அல்லல் பட்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுக்கு பலை, அதிபலை என்று இரண்டு விஞ்ஞைகளை உபதேசித்தார். அவர்களுக்கு அப்பொழுது பதினாயிரம் யானை பலம் உண்டாயிற்று. பசி தாகங்கள் மறைந்தன.

இராமர் முனிவரை நோக்கி, " குருநாதா! இந்தக் கானகம் புல் பூண்டு இல்லாமல் பாலைவனமாக இருப்பதற்கு என்ன காரணம்? சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்ததா? என் தந்தையாருடைய ஆட்சியில் இப்படிக் அழியக் கூடாதே! " என்று வினாவினார்.

விசுவாமித்திர முனிவர் கூறுகின்றார். " இராகவா, இதுதான் தாடகை வாழ்கின்ற கானகம். உலோபகுணம் ஒன்றே ஆயிரமாயிரம் நற்குணங்களை அழிப்பதுபோல் தாடகை ஒருத்தியே இந்த வளமான கானகத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். "

சகேது என்ற யட்சன் பிரமதேவரை வேண்டித் தவம் செய்து ஆயிரம் யானை பலத்துடன் ஒரு பெண் மகளைப் பெற்றான். அவளுக்குத் தாடகை என்று பெயர் சூட்டினான். அவள் சுந்தன் என்ற யட்சனைத் திருமணம் செய்த கொண்டாள். அவளுக்குச் சுபாகு, மாரிசன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள்.

தாடகையின் கணவனாகிய சுந்தன், அகஸ்தியரின் சிவபூசைக்குரிய பூமரங்களை ஒடித்துவிட்டான். அவர் தழல் எழ விழித்தார். அவன் சாம்பலாகினான. இதனை அறிந்த தாடகையும், அவளுடைய மக்களும் அகஸ்தியரை வணங்கிக் குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு, அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி எறிந்து ஆரவாரம் செய்தார்கள். அகஸ்தியர் சினந்து, நீங்கள் அசுரர்களாகப் போகக் கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் அரக்கர்களாக மாறி முனிவர்களுக்கு எண்ணில்லாத கொடுமை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

அவள் மலைப்பாம்புகளைக் கையில் வளையல்களாக அணிந்தகொண்டிருப்பாள் சூலத்தை ஏந்திக் கொண்டிருப்பாள்.

இராமா! தாடகையும், அவள் புதல்வர்களும் சதா முனிவர்களுக்குக் கொடுமை விளைவித்து வருகின்றார்கள். உலக நலன் கருதி நான் செய்யும் வேள்விகளைத் தடுத்துக் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை இராவணனிடம் உறவு கொண்டு அவன் ஏவலினால் அளவற்ற கொடுமைகளைச் செய்து வருகின்றாள் என்றார்.

தாடகை மனிதர்கள் வரும் வாசனையை மோப்பத்தால் உணர்ந்து ஆலகால விஷம் போலவும், வடமுகாக்கினி போலவும் சீறி எழுந்தாள். இராமர் அவளைப் பெண் என்று கருதிப் போர செய்யத் தயங்கி நின்றார்.

விசுவாமித்திரர் இராமனைப் பார்த்து, ரகுவீரா! இவளைப் பெண் என்று கருதாதே. எத்தனை எத்தனை கொடுமை உளவோ அத்தனையும் செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டிருக்கின்றாள். அது கருணையினாலன்று. நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால், சாறு சீங்கிய கோது என்ற எங்களை விட்டிருக்கின்றாள். ஆதலால், இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார்.

தாடகை, இராமன்மீது ஒரு சூலத்தை ஏவினாள். இராமர் அதனைப் பொடியாக்கினார். ஆன்றோர்கள் வாக்கே மறை மொழி என்றெண்ணி இராமர் தாடகைமீது சிறந்த அம்பினை ஏவினார். தாடகை மாண்டு விழுந்தாள். தேவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். இராமபிரானக்குச் சிறந்த பாணங்களைத் தருமாறு தேவர்கள் விசுவாமித்திரரிடம் வேண்டினார்கள்.

விசுவாமித்திரர் தவஞ்செய்து சிவபெருமானிடம் பெற்ற 500 வகையான அஸ்திரங்களையும், அதனைத் திருப்பியழைக்கின்ற உபசம்மாரங்களையும் இராமருக்கு முனிவர் பெருமான் உபதேசித்தருளினார்.

அந்த அஸ்திரதேவதைகள் இராமர் முன் தோன்றி, நீர் அழைக்கின்றபோது நாங்கள் வந்து உனக்கு உதவி புரிவோம் என்று கூறி மறைந்தன.

இராமரால் விசுவாமித்திரர் அடைந்த பயன் பத்துச் சதமாகம், விசுவாமித்திரரால் இராமர் அடைந்த பயன் 90 சதமாகும். ஜபம்
புரிபவனுக்கு ஜெபமாமலை வேண்டும். பூஜை புரிபவனுக்கு நல்ல நாதமுள்ள மணி வேண்டும். எழுதுகின்றவனுக்கு எழுதுகோல் வேண்டும். இந்த அஸ்திர லாபத்தை முனிவரால் இராமர் பெற்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 5


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin