ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Saturday, June 20, 2009

அபிராமி அந்தாதி 51-60



அபிராமி அந்தாதி

பகுதி 51-60


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51

திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!


வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,-பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!


சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே. 53

ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.


இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!


மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே. 55

அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. 56

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.


ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? 57

ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
[ 'ஐயன் அளந்த படியிருநாழி’ என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு. ]

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58

அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. 59

அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்கமாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.


பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ-அடியேன் முடை நாய்த் தலையே? 60

ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையணிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 41-50


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin