ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Monday, June 29, 2009

குண்டலினி சக்திகுண்டலினி சக்தி


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே - சிவ வாக்கியர்.


" குண்டலினி அம்மா! மனிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி, ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.
நீயே பிராணனாகவும், வித்யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் இருந்து இந்த உடலுள் உறைகின்றாய்.
ஸுஷும்னா நாடியைத் திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடு. - குண்டலினி தியானம் -


எப்படி ஜீவாத்மா பரமாத்மா அம்சமோ, அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறாள். பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சமஷ்டி ரூபிணியான திரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே குண்டலினி சக்தி நம்முடைய சரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கிறாள். இதனாலேயே அம்பிகைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர் உண்டு.

எப்படிச் சக்தியில்லாவிட்டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் குண்டலினி இல்லாவிட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

பராசக்தியின் அம்சமான குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம் உண்டு பண்ணுவதுதான் சமயமத சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் "சமயாசாரதத்பரா" என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறது.

அப்படி சமாரஸ்யம் ஏற்படுத்திய போதிலும் குண்டலினி சக்தி மறுபடியும் மூலாதாரத்தை வந்தடையும் சுபாவமுள்ளவளாகையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் சகஸ்ராரத்திலேயே நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் ஸித்திப்பதாகும். இதுவே ஜீவன் முக்த நிலை.

குண்டலினியை வாழும் பாம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் குடியிருப்பதாகவும், அது மனிதர் கண்களுக்குப் படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.

இது அக்னி ஸ்வரூபமான சக்தி. மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும் பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.

இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகின்றது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.

இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷும்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்த பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்றமடைந்திருக்கிறான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்த போதிலும் அவன் அறிவு ஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.

படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்கமுடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.

அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான் எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கி குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டுமிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.

மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.


நன்றி : மயூரமங்கலம்


search tags : Article, Kundalini, Yogam, குண்டலினி, யோகம், கட்டுரைகள்

_*_*_*_

5 comments:

seidhi said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கோவி.கண்ணன் said...

//படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. //

இன்னொன்னு இருக்கு

பிறப்பு, வாழ்வு, இனப்பெருக்கம், முடிவு !

அடியார் said...

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அடியார்,
இந்த பதிவுக்கு நான் கருத்து சொல்ல விரும்ப வில்லை. காரணம் இதை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

//பிறப்பு, வாழ்வு, இனப்பெருக்கம், முடிவு !//

இனபெருக்கம் என்பது தனி செயல் அல்ல.
ஒரு பிறப்பின் முன் நிகழுவது. வாழ்வு எனும் செயலின் ஒரு அங்கமாக இருக்கிறது.

பிறப்பு-வாழ்வு-முடிவு என்பதே சரி.

உண்ணுதல், தூங்குதல் போல வாழ்க்கை செயல்தான் இனப்பெருக்கமும்.

இதை தனித்து சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன்.

அடியார் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்வாமி....

தங்கள் கருத்தை நான் வழிமொழிகின்றேன்...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin