ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Saturday, June 6, 2009

திருக்குறள் 41-50



திருக்குறள் 41-50

அறத்துப்பால்

இல்வாழ்க்கை



இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. - 41

இல்லறத்தோடு பொருந்தி வாழுபவன் எனச் சொல்லப்படுபவன் அற இயல்புகளை உடைய மூவர்க்கும் அவர்களின் நன்னெறிகளுக்கு நிலைபெற்ற துணையாவான்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. - 42

வாழ்வைத் துறந்துவிட்ட துறவிகளுக்கும், வறுமையில் உள்ள ஏழைகளுக்கும், ஆதரவற்று இறந்து போனவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன் துணையாவான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - 43

தென்புலத்தவராகிய மூதாதையர்களைப் பூசித்தல், தெய்வ வழிபாடு, உபசரிப்பு, தன் குடும்பம் என்னும் ஐந்நெறிகளையும் வழுவாது செய்பவனே இல்லறச் சிறப்புடையவனாவான்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

சேர்க்கக் கூடிய பொருட்களை பழி, குற்றம் ஏற்படாத வண்ணம் சேர்த்துச் செலவு செய்து, பலருக்கும் பகுத்து உண்டு செயல்படுபவனது இல்வாழ்க்கை உலகில் என்றும் குறைவு இல்லாது நிலைத்து நிற்கும் இல்வாழ்க்கையாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - 45

ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அவ்வாழ்வின் பண்பும் பயனும் அதுவேயாகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன். - 46

அறநெறியின்படி ஒருவன் தன் இல்வாழ்வை அமைப்பான் ஆயின் அவன் பிற வழிகளில் சென்று பெறுகின்ற இன்பம்தான் என்ன? ஏதுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. - 47

இல்லறத்தின் இயல்புகளில் குறையாது சரியாக வாழுபவன் என்பவன், புலனின்பங்களை விட்டு வாழ முயல்கின்றவர்களிலும் மேம்பட்டவனாவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48

அறநெறியில் தானும் நடந்து, பிறரையும் பின்பற்றி நடக்கச் செய்பவனது இல்வாழ்க்கை, தவம் புரிபவரையும் விஞ்சும் வலிமை உடைய வாழ்க்கையாகும்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. - 49

அறம் என பெருமை செய்யப்படுவதே இல்லறம்தான் அந்த இல்லறமும் பிறர் பழித்துக் கூறாவண்ணம் அமைவது மேலும் நன்மையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். - 50

இல்லற நெறியில் இருந்து பிறழாமல், இவ்வுலகத்தில் வாழ வேண்டிய நெறிமுறைகளோடு வாழுபவன் வானத்தில் உறைகின்ற தெய்வத்திற்குச் சமமாக மதிக்கப்படுவான்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 31-40


search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin