ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, June 17, 2009

இராமாயணம்-4இராமாயணம்

பகுதி - 4

(முன்னைய பாகம் : செல்க)


திரு அவதாரம் :-

சித்திரை மாதம் நவமி திதி புனர்வசு நட்சத்திரம் கடக லக்கினத்தில் இராமபிரான் திரு அவதாரம் செய்தார்.

ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்(து)
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.

மறுநாள் பூச நட்சத்திரத்தில் பரதரும். அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணரும் சத்ருக்னரும் தோன்றினார்கள்.

மன்னவர்க்கு மகப்பேறு உண்டானதால் வரம்பில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அன்னதானமும், சொர்ண தானமும் வஸ்திர தானமும், பூதானமும், கோ தானமும் அள்ளி, அள்ளி தான தருமங்கள் செய்தார். ஏழாண்டுகள் வரியில்லை என்று பறை அறையச் செய்தார். கருவூலத்தைத் திறந்து எல்லாரும் அங்குள்ள நிதிகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆலயங்களைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார்.

எல்லாரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் நீந்தியது. வசிட்ட முனிவர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்னன் என்று பெயர் சூட்டினார். நான்கு வேதங்களைப் போல் நான்கு குமாரர்களும் இனிது வளர்ந்தார்கள். ஐந்து வயதுக்கு மேல் அவர்கள் வசிட்டருடைய ஆசிரமத்தில் வளர்ந்து கலை பயின்றார்கள்.

இராமர் வசிட்டருடைய குடிசையில் வளர்ந்தபடியினால் ஞானம் வளர்ந்தது. மாற்றாந் தாயாகிய கையேகி, கானகம் போ என்றவுடன் உடுத்த உடையுடன் காட்டுக்குப் போனார். அரண்மனையில் வளர்ந்திருந்தல் அட்வகேட் வீட்டுக்குப் போயிருப்பார். இராமர் தானே வலிந்து சென்று வறியவர்க்கு உதவி செய்வார். அவர்களுடைய குறைகளைக் கேட்டு நிறைவு செய்வார்.

விசுவாமித்திரர் வருகை :-

இராமருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியது. சகல கலைகளிலும் வல்லவராக, மக்களுக்கு நல்லவராக விளங்கினார். சக்ரவர்த்தி அரசவையில் இந்திர பகவானைப் போல் சுந்தர வடிவுடன் வீற்றிருந்தார். வசிட்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.

உலகத்தை இரண்டாவதாக சிருஷ்டிக்கத் தொடங்கினவரும், காயத்ரி மந்திரத்துக்கு அதிதேவரையும், அளவற்ற தவம் செய்தவருமாகிய விசுவாமித்திர முனிவர் அங்கு எழுந்தருளினார்.

கடைக்காவலன் ஓடிவந்து மன்னர் பெருமானை வணங்கி, வேந்தர் பெருமானே விசுவாமித்திர முனிவர் வருகின்றார் என்று கூறினான். சக்ரவர்த்தி பிரமதேவரை எதிர்கொள்ளச் செல்லும் இந்திரபகவானைப்போல் பூசைக்குரிய சாதனங்களுடன் எதிர் சென்று, என் குலம் செய்த புண்ணியம் என்று வலம் செய்து வணங்கி, அவரை அழைத்துக்கொண்டு போய் மணித்தவிசில் இருத்தி, களபகஸ்தூரி சந்தனங்களாலும் மலர்களாலும் பாதபூசை செய்தார்.

நாம் ஓர் அதிகாரியைப் பார்க்கப் போவோமானால் அவரது அருகில் உள்ளவரைப் புகழுரை கூறி, அவரை நம் வசமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் அதிகாரியிடம் கூறிய கோரிக்கையை அவர் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிடுவார். இந்த உலகியல் ஞானத்தை உடைய விசுவாமித்திரர், வசிட்டரை வணங்கித் தசரதரைப் பார்த்துக் கூறுகின்றார்.

தசரதா! வசிட்டரைக் குருநாதராகப் படைத்த உன் தவம் அளவிடற்கரியது. வசிட்ட முனிவருடைய கருணை உனக்கிருப்பதால் உனக்கு அனைத்து கருமங்களும் எளிதில் சித்தியாகும். மன்னர் மன்னரே! நேற்று நான் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தேன். இந்திரனே! சுகமா ? என்று கேட்டேன். இந்திரன் தசரதருடைய கருணையினால் சுகமாக இருக்கிறேன் என்றான். இந்திரனுடைய பொன்னுலகைச் சம்பராசுரன் கவர்ந்து கொண்டான். தசரதர், கைகேயி தேர் நடாத்தச் சென்று சம்பராசுரனைக் குலத்தோடு அழித்துப் பொன்னுலகை இந்திரனுக்கு அளித்தார். அந்த வெற்றித்திறத்தை விசுவாமித்திரர் இங்கே குறிப்பிடுகின்றார்.

தசரதா! உன்னைப் போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. நீ சத்திய சம்பந்தன். பரோபகாரி. நல்லற மூர்த்தி, நற்குண சீலன். உனக்கு எல்லாம் தெரியும். இல்லை என்ற கேட்பவருக்கு இல்லையென்று சொல்லத் தெரியாது. அளவற்ற பெருமையுடைய அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு ஓர் இடையூறு வந்தால் மலைகள் தோறும் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானிடம் சென்று முறையிடுவோம். கயிலை மலை சென்று கண்ணுதற் பெருமானிடம் முறையிடுவோம். திருப்பாற்கடலில் சென்று அரவணையில் அறிதுயில் புரிகின்ற அரிமுகுந்தனிடம் முறையிடுவோம். சத்தியலோகம் சென்று பரம தயாளமூர்த்தியாகிய பிரம தேவரிடம் முறையிடுவோம். பொன்னுலகம் சென்று அமராவதியை அரசு புரிகின்ற இந்திரனிடம் முறையிடுவோம். இங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம் முறையிடுவோம். எங்களக்கு உன்னைத் தவிர புகலிடம் ஏது? என்று இனிய வசனங்களால் கனியமுதம் போல் கூறினார்.

புகழுரைக்கு மயங்காதார் யார்? கரடியைக் கண்ணாடிக் காட்டிப் பிடிக்க வேண்டும். சிங்கத்தைத் தோல்வலை போத்திப் பிடிக்க வேண்டும். யானையைக் குழி தோண்டிப் பிடிக்க வேண்டும். பெரிய மனிதர்களைப் புகழுரையால் வசம் செய்ய வேண்டும். இந்த யுக்தியைத் தெரிந்த விசுவாமித்திரர் தசரதரைத் தன்மை நவிற்சியால் புகழ்ந்து பேசினார். தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! என்னிடத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது தேவரீருடைய ஆசீர்வாதத்தினால்தான். நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். செய்கின்றேன் என்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 3


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin