ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Saturday, June 27, 2009

இராமாயணம்-7


இராமாயணம்

பகுதி - 7

(முன்னைய பாகம் : செல்க)


வேள்வி காவல்:-

மூவரும் கோமதி என்ற நதி சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். விசுவாமித்திர முனிவருடைய தமக்கையும் ரிசீகமுனிவருடைய மனைவியுமாகிய கௌசீகை என்பவள் உலகத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாக ஆனாள். அந்த நதியின் அருமை பெருமைகளை முனிவர் இராமருக்குக் கூறி பின் அங்கிருந்து புறப்பட்டுச் சித்தாசிரமத்தை அடைந்தார்கள. அந்த ஆசிரமம் கற்புடைய மங்கையரின் உள்ளம்போல் தூய்மையாக இருந்தது.

திருமால் அங்குப் பலகாலம் தவம் செய்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் கவர்ந்துகொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியக அவதரித்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். பெருங்கொடையாளியாகிய அவனை வலிமையால் அடக்க முடியாது. அவனைத் தானத்தில் வெல்ல வேண்டும் என்று கருதி யாகசாலையை அடைந்தார். அவருடைய குறுகிய வடிவத்தைக் கண்டு எல்லாரும் எள்ளி நகையாடினார்கள்.

அசுர குரவாகிய சுக்கிராசாரியார், மகாபலி! இந்தக் குறளன் திருமால் என உணர்வாய். உன்னை மாயம் செய்து அடக்க வந்திருக்கிறான். எச்சரிக்கை! என்றார்.

மகாபலி, குருவே! மாய்ந்தவர் - மாய்ந்தவர் அல்லர். ஈந்தவர்தான் என்றும் வாழ்ந்தவர்கள். கொடுக்கும்போது தடுக்கின்றவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று கூறி வாமன மூர்த்தியை வந்தனை வழிபாடு செய்து, உமக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். வாமன மூர்த்தி, அள்ளிக் கொடுக்கும் வள்ளலே! என் காலால் மூவடி மண்தானம் வேண்டும் என்றார்.

மகாபலி புன்முறுவல் பூத்து மூவுலகத்துக்கும் தலைவனாகிய என்னிடம் மூன்று நகரங்களைக் கேட்கலாமே? உமது காலால் மூவடி என்றால் அது சிறிய பொருள்தானே? என்றான்.

வாமனர், என் காலால் மூவடி மண் கொடுத்தால் போதும் என்றார்.

அவர் கையில் தண்ணீரைத் தாரை வார்த்து, மூவடி மண் அளந்த கொள்ளும் என்றான்.

சிறிய குறள்வடியில் இருந்த அவர் உயர்ந்தவர் உதவியொப்ப, மூதண்ட கூட முகடு முட்ட வளர்ந்தார், அவருடைய பேருருவைக் கண்டு அதியித்தவர்கள், அஞ்சினார்கள். திருமால் ஓரடியால் விண்ணுலகத்தையும் ஓரடியால் மண்ணுலகத்தையும் அளந்து. மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்றார்.

மகாபலி, தங்கள் மூன்றாவது அடிக்கு இடம் என் சென்னி என்றான்.

வாமன மூர்த்தி அவனுடைய தலையில் திருவடியை வைத்து அதல உலகத்திலேயே இருந்தினார்.

ரகுநந்தனா! இத்தகைய வித்தகரான வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார் முனிவர். அந்தச் சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் ஒன்றுபட்டு உறவாடின. நுலிவாரும் மெலிவாரும் பகையின்றி ஒன்றுபட்டு நின்றனர்.


மாரீசன், சுபாகு வதம்:-




மாமுனிவர், இராமா! இனி நான் யாகத்தைத் தொடங்குவேன், தாடகையின் புதல்வர்களாகிய சுபாகுவும் மாரீசனும் அவர்களுடைய சேனைகளான அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசங்களையும் யாகத்தில் சொரிந்து அசுத்தப்படுத்தி இடர் புரிவார்கள். இனி நான் மௌன நிலையில் இருந்து யாகம் புரிவேன். அரக்கர்களை வதைத்து யாகத்தை நிறைவேற்றுவாயாக என்று கூறி யாகத்தைத் தொடங்கினார்.

முனிவர்கள் பலர் வேதமந்திரங்கள் கூறியும், யாகத்துக்கு உரிய திரவியங்களைச் சேகரித்துத் தந்தும் உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது. இராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் ஆயிரம் அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசத்தையும் கல்லையும் மண்ணையும் சொரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருட்கள் விழாதவண்ணம் செய்தார். ஒரு சிறந்த அம்பினால் சுபாகுவைக் கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். மாரீசனை அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். அரக்கர்களைக் கண்டதுண்டங்களாக வதைத்து மாய்த்தார். பலர் ஓடி ஒளிந்தார்கள்.

தேவர்கள் பொருட்டு யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. எட்டு நுதலையுடைய பிரம தேவனாலும் செய்தற்கரிய யாகம் பரம மங்களமாக நிறைவேறியபின் முனிவர்கள் அவபிருது ஸ்நானம் செய்தார்கள்.

விசுவாமித்திரர் இராமரைக் கண்குளிரக் கண்டு, ரகுநாதா! எல்லாவுலகங்களையும் உன் உதரத்துள் வைத்துக் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியைக் காத்தருளியதில் என்ன வியப்பு? இராகவா! உன் நாமம் வாழ்க, உன் புகழ் ஓங்குக! என்று கூறினார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 6


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin