ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Monday, June 1, 2009

அபிராமி அந்தாதி 1-10



அபிராமி அந்தாதி

பகுதி - 1-10

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்...


காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-

கார் அமர் மேனிக் கணபதியே-நிற்கக் கட்டுரையே.


கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக் கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.


உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே. 1


உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. 2


அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே- வெருவிப்

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.


மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4


மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்

திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. 5


அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய வி„ஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே-

முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே

பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. 6


செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,

மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்

துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே. 7

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!


சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்

கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே 8


என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.


கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,

முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. 9


அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து

அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. 10


அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையேயாகும்.


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்


search tags : Abirami Anthathi, Abirami Paddar, Amman, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர், அம்மன்

-----

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin