ஆன்மிகக் கதைகள் - 1
எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.
ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.
" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.
அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.
ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.
search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 day ago
2 comments:
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய் என்பதை நினைவூட்டும் கதை. தற்போது உள்ள அறிவியல் சமுதாயத்தில் ஆன்மீக சிந்தனை நிறைந்த உரையாடல் என்றுமே பிற்போக்கு தனமாகவே சித்தரிக்கபடுகிறதே?.
இருந்தாலும் மனதில் நல்ல சிந்தனை தோன்ற சுற்றத்தாரும் முக்கியம் என்பது என்னுடைய கருத்து.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு...
அறிவியல் கூட ஆன்மிகத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது. பல கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரரான ஐன்ஸ்டீன் கூட மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டெனக் கூறினார். அவர் கூறிய அந்த அப்பாற்பட்ட சக்திதான் நாம் கூறும் தெய்வசக்தி. வாழ்க்கையின் பல பாடங்களைக் கற்றறிந்த பின் பலரும் தெய்வத்தின் சக்தியை நன்றாக உணர்ந்து விடுவார்கள். நமக்கு நன்றாகத் தெரிந்த ஓர் உதாரணம் கவியரசர் கண்ணதாசன். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலில் தங்கள் கேள்வியினை விளக்கியுள்ளார்.
" இளங்கன்று பயமறியாது " என்பார்கள். அதுபோலத்தான் அறிவியல் சக்தி என ஆர்ப்பரிப்போர், ஒரு கட்டத்தில் அறிவியல் சக்தியைத் தாண்டிய சக்தி ஒன்று உண்டென்பதை உணர்வார்கள். பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானத்தை மிஞ்சியது மெஞ்ஞானம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் கருத்தை நாம் ஆராய வேண்டியதில்லை. தற்போது பிற்போக்குதனமாகச் சித்தரிப்பவர்கள் ஒருநாள் நிச்சயம் உண்மையினை உணர்வார்கள்.
தாங்கள் கூறியது போல சுற்றத்தாரும் மனதில் நல்ல சிந்தனை தோன்ற ஒரு விதத்தில் அவசியமே. காரணம் இன்று ஒரு மனிதனுடைய அனைத்து செயல்களையும் சுற்றமும், சமூகமுமே நிர்ணயிக்கின்றது.
ஆனால், நாம் கடுமையான முயற்சி செய்தால், சுற்றமோ, சமூகமோ நம் செயல்களை எந்த விதத்திலும் மாற்றமுடியாது. அதற்கு நம் மனதை நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.
Post a Comment