ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, June 7, 2009

அம்மன் mp3 பாடல்கள்-3



அம்மன் mp3 பாடல்கள்

பகுதி - 3 (கலவையான பாடல்கள்)


துர்க்கை அம்மனின் இனிமையான பாடல்களை இப்பதிவில் நீங்கள் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள். (தரவிறக்கும் முன்னர் பாடலைக் கேட்கும் வசதியும் உள்ளது, பாடலைத் தரவிறக்கும் தளத்தில் இதற்கான வசதியுண்டு)


* ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி துர்க்காதேவி : தரவிறக்க (Download)

* ரக்க்ஷ்ஷ ரக்க்ஷ்ஷ ஜெகன்மாதா சர்வசக்தி : தரவிறக்க

* மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி : தரவிறக்க

* கலைவாணி நின்கருணை தேன்மழையே விளையாடும் : தரவிறக்க

* ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி : தரவிறக்க

* தாமரைப்பூவில் அமர்ந்தவளே செந்தூரத் திலகம் : தரவிறக்க

* ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம் : தரவிறக்க

* அழகிய மயிலே அபிராமி அஞ்சுகமொழியே அபிராமி : தரவிறக்க

* காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா : தரவிறக்க

* கருணையின் உருவமே கலைகளின் வடிவமே : தரவிறக்க

* ஆதிபரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு : தரவிறக்க

* கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி : தரவிறக்க

* காஞ்சிக் காமாட்சி உனைக் காணும் திருக்காட்சி : தரவிறக்க

* கற்பகமே உனையன்றித் துணை யாரம்மா : தரவிறக்க


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அம்மன் mp3 பாடல்கள் - 2


search tags : Amman mp3 Songs, Amman mp3 Paadalgal, Devotional Songs, அம்மன் பாடல்கள், அம்மன் mp3 பாடல்கள், சுவாமி பாடல்கள்

_*_*_*_

Saturday, June 6, 2009

திருக்குறள் 41-50



திருக்குறள் 41-50

அறத்துப்பால்

இல்வாழ்க்கை



இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. - 41

இல்லறத்தோடு பொருந்தி வாழுபவன் எனச் சொல்லப்படுபவன் அற இயல்புகளை உடைய மூவர்க்கும் அவர்களின் நன்னெறிகளுக்கு நிலைபெற்ற துணையாவான்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. - 42

வாழ்வைத் துறந்துவிட்ட துறவிகளுக்கும், வறுமையில் உள்ள ஏழைகளுக்கும், ஆதரவற்று இறந்து போனவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன் துணையாவான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - 43

தென்புலத்தவராகிய மூதாதையர்களைப் பூசித்தல், தெய்வ வழிபாடு, உபசரிப்பு, தன் குடும்பம் என்னும் ஐந்நெறிகளையும் வழுவாது செய்பவனே இல்லறச் சிறப்புடையவனாவான்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

சேர்க்கக் கூடிய பொருட்களை பழி, குற்றம் ஏற்படாத வண்ணம் சேர்த்துச் செலவு செய்து, பலருக்கும் பகுத்து உண்டு செயல்படுபவனது இல்வாழ்க்கை உலகில் என்றும் குறைவு இல்லாது நிலைத்து நிற்கும் இல்வாழ்க்கையாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - 45

ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அவ்வாழ்வின் பண்பும் பயனும் அதுவேயாகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன். - 46

அறநெறியின்படி ஒருவன் தன் இல்வாழ்வை அமைப்பான் ஆயின் அவன் பிற வழிகளில் சென்று பெறுகின்ற இன்பம்தான் என்ன? ஏதுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. - 47

இல்லறத்தின் இயல்புகளில் குறையாது சரியாக வாழுபவன் என்பவன், புலனின்பங்களை விட்டு வாழ முயல்கின்றவர்களிலும் மேம்பட்டவனாவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48

அறநெறியில் தானும் நடந்து, பிறரையும் பின்பற்றி நடக்கச் செய்பவனது இல்வாழ்க்கை, தவம் புரிபவரையும் விஞ்சும் வலிமை உடைய வாழ்க்கையாகும்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. - 49

அறம் என பெருமை செய்யப்படுவதே இல்லறம்தான் அந்த இல்லறமும் பிறர் பழித்துக் கூறாவண்ணம் அமைவது மேலும் நன்மையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். - 50

இல்லற நெறியில் இருந்து பிறழாமல், இவ்வுலகத்தில் வாழ வேண்டிய நெறிமுறைகளோடு வாழுபவன் வானத்தில் உறைகின்ற தெய்வத்திற்குச் சமமாக மதிக்கப்படுவான்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 31-40


search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்

_*_*_*_

Friday, June 5, 2009

இராமாயணம்-2



இராமாயணம்

பகுதி - 2

(முன்னைய பாகம் : செல்க)


கங்கைக்கரையில் தர்மாங்கதர் என்ற ஓர் அந்தண முனிவர், "ஓம் நமோ நாராயணாய" என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். ஓர் அக்கிரகாரத்தில் ஓர் அந்தணர் வாழ்ந்தார். அவர் மிகவும் சாந்தசீலர். சந்தனம் போல குளிச்சியாக இருப்பவர். இவருடைய மனைவி பெயர் கலகை. இவள் அக்கினித் திராவகம் போன்றவள். நெருப்பு மலை போல் கணவன் மீது சீறிச் சீறி விழுவாள். அவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்யமாட்டாள். ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்வாள்.

கலகை! எனக்கு சீதளத்தால் நீர்க்கொண்டிருக்கின்றது. மிளகுக் குழம்பு வை! என்றார். அவள் நீற்றுப் பூசணிக்காய் மோர்க்குழம்பு வைத்தாள். அது சீதளத்தை அதிகரிக்கச் செய்தது.

மற்றொரு நாள், கலகை! குடு அதிகமாகிச் சீதபேதியாகின்றது. மிளகாய் இல்லாமல் மிளகு ரசம் வை! என்றார். அவள் கத்திரிக்காயும், பச்சை மிளகாயும் கடைந்து வைத்தாள். கலகை! கண் எரிகின்றது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்றார். அவள் குளிர்ந்த நீரைத் தலையில் விட்டுக் கொதித்து நின்றாள். கலகை! உறக்கம் வருகின்றது. நான் படுக்க வேண்டும் என்றார். படுக்கின்ற இடத்தில் தண்ணீரை வார்த்துக் குளமாக்கிப் படுக்க விடாமல் அவள் செய்து விட்டாள். இவ்வாறு எல்லவற்றுக்கும் எதிர்மறையாகச் செய்து வந்தாள். இதனால் வெறுப்படைந்து வேதியர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றார். ஏதிரில் ஓர் ஆப்த அன்பர் வந்தார். அவர் ஐயரே! எங்கே போகிறீர்? என்று கேட்டார்.

மனைவியின் துன்பம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் பேய். ஆதனால் வீட்டைவிட்டு வெளியேறிப் போகின்றேன் என்றார்.

பேய் வேப்பிலை அடித்தால் ஓடிப்போகுமே என்றார் அன்பர்.

இவள் மிருகம் என்றார்.

மிருகங்களையெல்லாம் சர்க்கஸில் அடக்கி ஆளுகின்றார்களே! ஒரு பெண்ணை உன்னால் அடக்கி ஆளமுடியவில்லையே! என்றார் அன்பர்.

இவள் பூதம் என்றார்.

பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களை நாம் அடக்கி ஆள்கிறோமே! இந்தப் பெண் பிள்ளையை அடக்கி ஆளமுடியவில்லையா? அவள் என்னதான் செய்கிறாள் ? விவரமாகச் சொல் என்றார்.

ஐயா! அவள் செய்யும் கொடுமை ஒன்றா, பத்தா, நூறா, ஆயிரமா? லட்சோப லட்சம் குற்றங்கள் செய்கிறாள். அவற்றை நான் எங்ஙனம் சொல்வேன்? சுருக்கமாகச் சொல்லுகிறேன். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள்.

அன்பரே! நான் சொல்வதைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை, வேண்டும் என்று சொல்லுங்கள். "முயற்சி உயர்ச்சி தரும்" என்று கூறினார்.

அந்தணர் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு அகோரப்பசி. கலகை! இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார்.

அவள் கோபத்துடன், உனக்காகச் சமைத்து வைத்திருக்கிறேன். சாப்பிடு என்று உணவு கொடுத்தாள்.

கலகை! நான் உடுத்திய வேட்டியை நீ தொடக் கூடாது. உன் கை படக்கூடாது.

அவள், உனக்கு ஆசாரம் மிகுந்து விட்டதா? ஞானம் முதிர்ந்துவிட்டதா? நான் இன்று முதல் உன் வேட்டியைத் தோய்த்துப் போடுவேன். நீ செய்வதைச் செய் என்று கூறி அவருடைய உடைகளைத் தூய்மையாகத் தோய்த்து உயர்ந்த கொடியில் உலர்த்தி விடுவாள்.

கலகை! உன்மேல் பட்ட காற்று என்மேல் படக்கூடாது என்றார். அவள், உனக்கு இவ்வளவு உயர்வு வந்துவிட்டாதா? என்று சீறிவிழுந்து சிறிய விசிறியை எடுத்துச் சுகமாக வீசிவிட்டாள்.

கலகை! எண்ணெய் தேய்த்துக் குளிக்க மாட்டேன் என்றார். அவள் நமது நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் தேய்த்துக் குளித்துத்தானாக வேண்டும் என்று கூறி எண்ணெயைக் கொண்டு வந்தாள்.

சரி, நானே எண்ணை தேய்த்துக் கொள்கிறேன். நீ போ என்றார்.

அவள் ஏன்? நான் எண்ணெய் தேய்த்தால் என்ன குற்றம்! நான்தான் தேய்ப்பேன். வாயை மூடிக்கொண்டு இரு என்று கூறி, கணவனுடைய உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்தக் குளிக்க வைத்தாள்.

அந்த அந்தணர் கலகையிடம், வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும், வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் காரியத்தைச் சாதித்துக் கொண்டு சுகமே வாழ்ந்தார். அந்த ஆப்த அன்பரை ஒருநாள் சந்தித்தார். ஐயரே! இப்பொழுது உன் வீட்டுக்காரி எப்படி நடந்து கொள்கிறாள்? என்று கேட்டார்.

இப்பொழுது எல்லாம் வெகு சுகமாக நடைபெறகின்றன. ஆனால், வேண்டாம் என்பதை வேண்டும் என்றும் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கவனமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுது அவள் துணி தோய்த்துப் போடுகின்றாள், எண்ணெய் தேய்க்கின்றாள். விசிறி விடுகின்றாள். படுக்கை விரிக்கின்றாள், எல்லாத் தொண்டும் செய்கின்றாள். ஒரு குறையும் இல்லை என்றார்.

ஒருநாள் அந்த வேதியர் மனைவியைப் பார்த்து, கலகை! நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப்பிரசாதம் போட்டு இதை ஜலதாரையில் கொட்டுமாறு சொல்லியிருக்க வேண்டும். சொல்லிருந்தால் சுத்தமான தண்ணீரில் கொட்டியிருப்பாள். அவர் சற்றுக் கவனக்குறைவாக, பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். கோபமே வராத குணக்குன்றமாகிய அந்த அந்தணர் கோபித்து, பாவி! எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தாய். அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே! இது எவ்வளவு பெரிய பாவம்? கலகை! நீ அலகையாகப் போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த வேத வித்தின் சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். குடிக்க நீரும், தங்க நிழலுமின்றி அங்கும் இங்குமாக அலைந்து உலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

கங்கைக்கரையில் "ஓம் நமோ நாராயணாய" என்று மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்தப் பெண் பேய் பிடிக்கச் சென்றது. நெருப்பை விழுங்கச் சென்ற எறும்பு போல் இருந்தது. முனிவர் புன்னகை புரிந்து கமண்டலத் தண்ணீரை, "ஓம் நமோ நாராயணாய" என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது, அழுது, தபோதனரே! நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவன் மனம் நோகப் பலப்பல குற்றங்கள் செய்த பாவத்தால், அவருடைய சாபத்தால் பேயாகத் திரிந்து அலைந்து நொந்தேன். எனக்கு அருள் புரிவீராக என்று வேண்டி நின்றாள். தர்மாங்கத முனிவர் அவளுக்குத் தண்ணருள் புரிந்து அம்மா! அழாதே. நான் அறிவு தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை செய்த தவத்தில் பாதி உனக்குத் தந்தேன் என்றார். வைகுண்டத்திலிருந்து பொன்மணி விமானம் ஒன்று வந்து இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் பரவாசுதேவனைச் சேவித்தப் பேரின்பத்தை எய்தினார்கள்.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து, தர்மாங்கதரே! நீ பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பேர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டு தவம் செய்வாயாக. நான் உனக்கு மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி இராவண வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். அம்மா! கலகை! நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற நாமத்துடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. நீ பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெருமையுடன் வாழ்வாய். சமயம் வரும்பொழுது என்னைக் கானகம் போகச் சொல்லிக் கலகம் செய்வாய் என்றார்.

திருமாலுடைய சக்கரம்-பரதராகவும், சங்கு-சத்துருக்கனனாகவும், ஆதிசேஷன் - இலக்குமணனாகவும் பிறக்குமாறு திருமால் கட்டளையிட்டருளினார்.

இவற்றையெல்லாம் வசிட்டர் தன் ஞானக் கண்ணால் கண்டார்.

தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு: இராமாயணம்-1

search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்


_*_*_*_

Thursday, June 4, 2009

அபிராமி அந்தாதி 11-20



அபிராமி அந்தாதி

பகுதி - 11-20

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்...


ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. 12

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!


பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? 13

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக்கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதிசக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: 14

ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!


தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15

அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!


கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. 16

கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? 17

அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. 18

அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்தநாரீŠஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19

ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.


உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. 20

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 1-10


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

நாளைய விரதம்



நாளை ( 05-06-2009) வெள்ளிக்கிழமை பிரதோஷ விரத தினமாகும். அன்பர்கள் இவ் விரதத்தை அநுஷ்டித்து சிவபெருமானுடைய அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.


இவ் விரதத்தைப் பற்றி அறிய கீழே உள்ள பிரதோஷ விரதம் எனும் சுட்டியை அழுத்துங்கள்.

Wednesday, June 3, 2009

பிரதோஷ விரதம்




பிரதோஷ விரதம்


கந்தபுராணத்தில் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவ விரதங்களுள் பிரதோஷ விரதமும் ஒன்று. இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசித் திதியிலே அதாவது அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாவது நாளிலே இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகிறது. சிவதருமோத்திரம், சிவரகசியம் முதலிய நூல்களிலும் இவ்விரதமகிமைக் கதைகள் காணப்படுகின்றன.

மாலைப்பொழுது என்னும் கருத்தையுடைய பிரதோஷம் என்ற சொல்லால் அழைக்கப்படும் இவ்விரத வழிபாடும் மாலை நேரத்திற்குரியதே. சூரிய அஸ்தமனத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் அஸ்தமனத்துக்குப் பின் மூன்றேமுக்கால் நாழிகையுமாகச் சேர்ந்த ஏழரை நாழிகைப் பொழுது பிரதோஷ காலம் எனப்படும். அதாவது பிற்பகல் சுமார் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரையிலான மூன்று மணித்தியால காலமே பிரதோஷ காலமாகக் கொள்ளப்படும். இக்காலத்தில் சிவபிரானை விஷேஷமாக வழிபடுவதே இவ்விரதத்தின் முக்கியமான அம்சமாகும்.

முன்பு தேவர்கள் அசுரர்களோடு இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் அங்கிருந்து ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அஞ்சியோடிய போது பரமசிவனார் அவர்கள் மீதும், சர்வலோக ஆன்மாக்கள் மீதும் கருணை கொண்டு அந்த ஆலகால விஷத்தைத் தாமே அருந்தித் தமது கண்டத்தில் நிறுத்தியருளினார். (இதனால் சிவபெருமான் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.) பின்னர் பயம் நீங்கிய தேவர்கள் இறைவனை வழிபட்டு மீண்டும் கடைந்த போது அமிர்தம் தோன்றியது.

அத்தருணம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்
ணம் எம் பெருமான் இடபதேவரின் கொம்புகளுக்கிடையில் நின்று திருநடனம் செய்தருளினார். வளர்பிறைத் திரயோதசியும், சனிக்கிழமையும் கூடிய ஒரு நன்னாளில்தான் இந்த வைபவம் நிகழ்ந்தது. இதனால் தான் சனிப்பிரதோஷ விரதம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

ஆலகால விஷத்தை உட்கொண்டபின் அது ஜீவராசிகளை வருத்தாமலிருக்கும் பொருட்டு ஒரு கணநேரம் சிவபிரான் மௌனமாக இருந்தார். அப்போது தேவரும், முனிவரும் உணவருந்தாது பரமசிவனாரைப் பிரார்த்தித்து நி
ன்றனர். அந்தக் காலமே ஏகாதசியாகும்.

இதன் பின்னர் இறைவனின் அருளாணைப்படி திருப்பாற்கடலை மீண்டும் கடைந்தபோது அமிர்தம் தோன்றியது. அதனை அமரர் அருந்தினர். இக்காலமே துவாதசியாகும். இதன் பின் முன்னர் குறிப்பிட்டவாறு சிவபிரான் டமருகம் ஏந்தி நடனம் செய்யத் திருமால் குடமுழா என்ற வாத்தியத்தை முழக்கத் தேவேந்திரன் சுருதி சேர்த்து நிற்க
, தும்புருநாரதர்கள் இசைபாடக் கலைவாணி மகரவீணையை மீட்டிப் பாடத் திருமகளும் இணைந்து பாட நான்முகன் தாளம் போட, உமாதேவியாரும், தேவரும், முனிவரும் இந்தத் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் தரிசித்து நின்றனர். இக் காலமே திரயோதசியாகும்.

இம் மூன்று திதிகளும் சேர்ந்த மூன்று நாட்கள் பரமசிவனாருக்கு மிகச் சிறிய அளவுள்ள பிரதோஷ காலமா
கும்.

கணவரை இழந்த பதிவிரதைப் பெண்ணொருத்தி தனது சொந்த மகனும், வளர்ப்பு மகனாகிய ஒரு அரசகுமாரனுமாகிய இரு புதல்வர்களுடன் வாழ வழி தெரியாது வருந்தி வறுமையில் உழன்றபோது சாண்டில்ய முனிவரால் உபதேசிக்கப்பட்டு மூவருமாக இப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்டனர். அதன்பிரகாரம் அந்தணகுமாரன் அறிவாற்றலும் பொருளும் பெற்றான். அரசகுமாரன் அரசாட்சியைப் பெற்றான் என்று புராணம் உ
ரைக்கும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடிய இவ்விரதத்தை முனிவர்கள் பலரும் இந்திரனும் கைக்கொண்டு அரும்பேறுகள் பல பெற்றனர். கடன், வறுமை, நோய், துர்மரணம், பயம் இவற்றைப் போக்கவல்லது இது. முக்கியமாகப் புத்திர லாபம் தரவல்லது. புத்திரரை விரும்புவோர் இவ்விரதமிருப்பது வழக்கம்.

இவ்விரத நாளிலே நித்திய கர்மாநுஷ்டானங்கள் முடித்து பகல் முழுவதும் போசனம் இல்லாமல் இருந்து மாலை நாலரை மணிக்கு முன்னதாக ஸ்நானம் செய்து சாயம் சந்தியாவந்தனம், சிவபூஜை முதலியவற்றைச் செய்த பின் (மாலை நேரத்துக்குரிய நித்திய கர்மாநுஷ்டானங்கள்) வெள்ளை ஆடை தரித்துச் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து பிரதோஷ பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சி
வாலயத்தில் பிரதஷிணம்(பிரதட்சணம்) செய்து வழிபடுவதற்கென்று சிறப்பான விதிமுறையொன்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளது.





இடபதேவரை
முதலில் வணங்கி அங்கிருந்து இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்த பின் சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் இடபதேவரை வணங்கி வலமாகக் கோமுகைவரை சென்று மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கித் திரும்பி வலமாகக் கோமுகைவரை சென்று (இத்தடவை இடபதேவரைத் தரிசிக்காமல் செல்ல வேண்டும்) மறுபடி அங்கிருந்து திரும்பி இடபதேவரைத் தரிசிக்காமல் இடமாகச் சென்று சண்டேஸ்வரரை வணங்கித் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து அவரது இரண்டு கொம்புகளின் நடுவே சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து பிரணவத்தோடு கூட "ஹர ஹர" என்று சொல்லி வணங்க வேண்டும். பிரதோஷ காலத்தில் கோமுகையைத் தாண்டக்கூடாது என்பதே முக்கிய விதியாகும். இந்தப் பிரதஷிண முறைக்குச் சோமசூத்திரப் பிரதஷிணம் என்று பெயர்.

இவ்வாறு ஆலய வழிபாடு செய்த பின் வீடு திரும்பிப் பிரதோஷ காலம் முடிந்த பிறகு (இரவு ஏழரை மணிக்கு மேல்) சிவனடியார்களுடன் போசனம் செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் அன்ன நைவேத்தியத்துடன் காப்பரிசியும் நிவேதனம் செய்து அன்பர்களுக்கு வழங்க வேண்டும். காப்பரிசி என்பது பச்சரிசியையும் பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு நனைய வைத்து வடித்தெடுத்து அதற்குச் சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் சேர்த்துக் குழைத்துச் (உப்புச் சேராமல்) செய்வதாகும். இதனையே பிரதோஷ விரதத்துக்கு உணவாகக் கொள்ள வேண்டும். இது இயலாதவர்கள் சர்க்கரைச் சாதத்தை நிவேதனம் செய்து உண்ணலாம்.

பிரதோஷ காலத்தில் எவராயினும் என்ணெய் தேய்த்தல், குளித்தல், போசனம் செய்தல், தூங்குதல் முதலியன செய்தலாகாது. இவ்வேளையில் மந்திரஜபம், நூல் படித்தல் என்பனவும் செய்யாது மௌனமாக இறைவனைத் தியானிக்குமாறு புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்களுள் ஒன்றில் சனிக்கிழமையில் பிரதோஷம் வரும் நாளாகப் பார்த்து இவ்விரதம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஒரு வருட காலம் இந்தப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்ட பின் முறைப்படி விரதோத்யாபனம் செய்யலாம். விரும்பினால் தொடர்ந்து கைக்கொள்ளலாம். ஆனால் வருடா வருடம் விரத பூர்த்தியைச் செய்ய வேண்டும். 41, 55, 81, 97 என்ற எண்ணிக்கை வரும்வரை வளர்பிறைப் பிரதோஷம் மட்டும் அநுஷ்டிப்பார்கள் சிலர்.

இவ்விரதம் கைக்கொள்வோருக்கு கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் இவை யாவும் நீங்கி முக்தி சித்திக்கும் என்று ஆறுமுக நாவலரவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

" இரண நல்குர விரும்பவ மிரும்பசி யுரோகம்
அரணு றும்பயங் கிலேசங் கேதம்மவ மிருத்து
மரண வேதனை யிவையெலா மகற்றென வணங்கிப்
புராண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால் " - கடம்பவன புராணம்.



search tags : Pirathosham, Pirathosam, Lord Shiva, Viratham, பிரதோஷம், பிரதோஷ விரதம், விரதம்.

-*-*-*-

Monday, June 1, 2009

அபிராமி அந்தாதி 1-10



அபிராமி அந்தாதி

பகுதி - 1-10

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்...


காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-

கார் அமர் மேனிக் கணபதியே-நிற்கக் கட்டுரையே.


கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக் கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.


உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே. 1


உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. 2


அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே- வெருவிப்

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.


மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4


மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்

திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. 5


அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய வி„ஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே-

முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே

பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. 6


செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,

மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்

துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே. 7

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!


சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்

கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே 8


என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.


கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,

முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. 9


அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து

அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. 10


அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையேயாகும்.


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்


search tags : Abirami Anthathi, Abirami Paddar, Amman, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர், அம்மன்

-----

Related Posts Widget for Blogs by LinkWithin