ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, April 26, 2009

அன்னையின் வாகனங்கள்

அன்னை உமையவள் எழுந்தருள் பாலிக்கும் வாகனங்களையும் அவற்றின் தத்துவங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.


யானை வாகனம்:



தேவி, பண்டன் என்ற அசுரனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டாள். அப்போது தனது அங்குசத்திலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தாள். குரோதம் மற்றும் ஞானத்தின் வடிவான அங்குசத்திலிருந்து தோன்றிய அச்சக்தியை 'ஸம் பத்கரி' என்று அழைத்தனர். இவளே அன்னையின் யானைப் படையின் தலைவியானாள். 'ரணகோலஹலம்' என்ற யானையே இவட்கு வாகனமாயிற்று.

"உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து" என்ற திருக்குறள், 'மனவுறுதி என்ற அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளையும் அடக்கும் சான்றோர் முக்திக்கு வித்தாகின்றனர்' என்று உரைக்கின்றது.

இதே கருத்தை வலியுறுத்துவதுதான் அம்பிகையின் வாகனம். அதாவது அம்பிகை வழிபாடு உயர்ந்த புலனடக்கத்தைத் தரும் என்பதே கருத்து.

மற்றும் மயில் போல் யானையும் தனது வடிவத்தால் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினைவுபடுத்துகிறது. தானே ஓங்காரத்தின் உட்பொருள் என்பதை அன்னை யானை ஊர்தியால் உணர்த்துகிறாள்.


அன்ன வாகனம்:



அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் இயல்புடையது. அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப்பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள். மேலும் சில மந்திரங்களை 'ஹம்சம்' என்று குறிப்பிடுவர். ஹம்சம் என்றால் அன்னப்பறவை என்று பொருள்.

அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை. அவளை உணர்ந்து உயர்ந்த சான்றோர்களை பரமஹம்சர்கள் என்று கூறுவர். அச்சான்றோர்களின் மனதில் இருப்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை ஹம்ச வாகனத்தில் வருகிறாள்.

மேலும், தற்கால விமானங்கள் போல் தரையில் ஓடிய பின்னரே அன்னப்பறவையும் மேலே பறக்கத் தொடங்கும் இயல்புடையது. மண்ணில் இல்லறத்தில் சிறப்புற வாழ்ந்து மேல் நிலைக்கு உயரும் வாழ்க்கை நெறியை உணர்த்தவும் அவள் அன்னத்தைச் சிறப்பு வாகனமாகக் கொண்டுள்ளாள்.


நாக வாகனம்:



நாகம் (பாம்பு) விநாயகருக்கு உதர பந்தனம் எனும் அரைஞாண் கயிறாகவும், திருமாலுக்குப் பள்ளியாகவும், சிவனுக்கு நாகாபரணம்(நாக ஆபரணம்) ஆகவும், முருகனின் மயிற்கால் பந்தனமாகவும் விளங்குகின்றது. அம்பிகைக்குச் சிறுவிரல் மோதிரமாக விளங்கும் நாகமே சிறப்பு நாட்களில் வாகனமாகிறது.

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சுருண்டு படுத்திருக்கும் பாம்பு போல் தோன்றும். இந்திய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு, கற்றுத் தேர்ந்து, பல நூல்களையும் இயற்றிய ஆங்கிலேய அறிஞர் சர் ஜான் உட்ராஃப் குண்டலினி சக்தியை 'சர்பண்டைன் பவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே ஊர்தியாகின்றது.

நாக வாகனம் ஐந்து தலைகளுடன் நாகம் குடையெடுப்பதுபோல் அமைந்திருக்கும். வாற் பகுதி சுருட்டிக் கொண்டு அடிப்பீடம் போல் காட்சிதரும்.

அம்பிகைக்கும், சிவனுக்கும் ஊர்தியாகும் பொழுது நாகவாகனம் என்றும், திருமாலுக்கு வாகனமாகும் பொழுது 'சேஷவாகனம்' எனவும் பெயர் பெறும்.



சிம்ம வாகனம்:



அம்பிகைக்கே உரிய சிறப்பு ஊர்தி சிங்கமே. " சிங்கத்திலேறிச் சிரித்தெவையும் காத்திடுவாள் " என்கிறார் பாரதிரியார்.

தனது 'கர்ஜனை' யினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமை சிங்கத்தின் தனித்தன்மை ஆகும். கம்பீரமும் யாரும் எளிதில் அண்டமுடியாது என்ற நிலையும் உடையது. அதே நேரத்தில் தருமம் தவறாதது சிங்கம். தன்னை எதிர்க்காத விலங்குகளை அடிக்காது. பசியில்லா வேளையில் வேட்டையாடாது.

அம்பிகையும் தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்த சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.

சிங்கமுகாசுரன் சூரபதுமனின் தம்பியாவான். முருகன் சூரனைத் தனக்கு மயில் வாகனமாக மாற்றிக் கொண்டான் அல்லவா? அதே போல் அவன் தம்பி சிங்கனையும் சிம்ம வாகனமாக்கித் தன் தாய்க்கு அளித்து விட்டான். இன்றும் பிள்ளைகள் தனது தாய்க்கென தனிக் கார் வாங்கிக் கொடுப்பது போலத்தான்.

அம்பிகை அமரும் அரியணையும் 'ஸ்ரீமத் சிம்மாசனம்' என்று சகஸ்ரநாமத்தில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. பரத நாட்டியத்தில் 'சிம்ம வாகினி' என்ற ஒரு ஆட்டம் உண்டு. குறிப்பிட்ட ஜதிகளுடன் தாளக் கட்டுடன் ஆடினால் அரங்கில், ஆடும் பகுதியில், கீழே வைக்கப்பட்டிருக்கும் வண்ணப்பொடி தூவிய காகிதம் அல்லது துணியில் சிம்மம் வரையப்பட்டு விடும். இது வியத்தகு அற்புத ஆட்டம்.

பெரும்பாலும் காளியம்மன் முதலான ஆற்றல் மிகு தெய்வங்களுக்கே சிம்மவாகனம் சிறப்பு ஊர்தியாக விளங்குகிறது.



ரிஷப வாகனம்:



சிவாலயத் திருவிழாக்களில் கணபதி, சோமாஸ்கந்தர், தனி அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் என ஐந்து மூர்த்தங்கள் உலாவில் இடம் பெறும். இவற்றையே பஞ்ச மூர்த்திகள் அல்லது ஐந்திருமேனிகள் என்பர்.

இறைவன் ரிஷப வாகனக் காட்சியே சிவாலயத் திருவிழாக்களில் முதன்மையானது. அப்போது சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்தில் வரும்பொழுது தனியம்பாள் தனக்கே உரிய தனி ரிஷபத்தில் எழுந்தருளுவாள்.

அறுசுவை உண்டியை அனைவருக்கும் அளித்து விட்டு ஆலகால விஷத்தை உண்டவன் இறைவன். மாளிகைகளை மக்களுக்குக் கொடுத்துவிட்டு அவன் மயானத்தில் வசிப்பவன். அதாவது தன்னலமற்ற தியாகராஜனாக அவன் விளங்குகின்றான். அவன் எவ்வழியோ அம்பிகையும் அவ்வழிதான்.

காளை மாடு வயலில் ஓயாது உழைத்து உதவுகிறது. விளைந்த உணவுப் பொருட்களை பொதியாகச் சுமந்து வந்து சேர்க்கின்றது. அதன் உழைப்பால் உற்பத்தியான தானியங்களின் உட்பகுதியான அரிசியையும், பருப்புக்களையும் நமக்கு அளித்து விடுகின்றது. நாம் விரும்பாத உமி, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தனக்கு உணவாக உண்டு மகிழ்கிறது. " உழைத்த எமக்கே உணவுப் பொருள் அனைத்தும்" என்று காளைகள் போராடத் தொடங்கினால் மனிதன் பட்டினியால் வாட வேண்டியதுதான்.

உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் விருப்பம், இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் விடையூர்தியை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் ரிஷப வாகனம் தரும தேவதையின் வடிவமே என்பர். அனைத்தும் அழிந்துபடும் பேரூழிக் காலத்தில், தருமம், தான் அழியாது நிலைத்திருக்க விரும்பி அழியாத சிவசக்திகளின் ஊர்தியாகி, காளையாக வருகிறது.



குதிரை வாகனம்:



அம்பிகை தனது பாச ஆயுதத்திலிருந்து தோற்றுவித்த சக்தி 'பரி ஊர்வாள்' எனப் பொருள்படும் அச்வாரூடா தேவியாவாள். எவராலும் வெல்ல முடியாத 'அபராஜிதம்' என்ற குதிரை அச்வாரூடாவின் வாகனமாயிற்று. இவள் அம்பிகையின் குதிரைப் படையின் தலைவி. கோடிக்கணக்கான குதிரைகள் இவளது ஆளுகைக்கு உட்பட்டவை.

எண்ணற்ற ஆசைகளே குதிரைப் படையாகும். அவற்றை நன்னெறிப்படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப்படைத் தலைவி.

இயந்திரங்களின் ஆற்றலை அளக்கத் தற்காலத்தில் குதிரைச் சக்தியே அலகாக உள்ளது.

ஆற்றல்களுக்கெல்லாம் அதிராணியாக விளங்குபவள் என்பதையும் நன்னெறிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி அருள்வாள் என்பதையும் உணர்த்த அச்வ வாகனம் அல்லது குதிரை வாகனத்தைக் கொண்டிருக்கிறாள் தேவி.


காமதேனு வாகனம்:



அழகிய பெண்ணின் முகமும் பசுவின் உடலும் பறவையின் இறக்கைகளும் கொண்ட காமதேனுவின் உடலில் அனைத்துத் தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வ குணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது பசுவின் பால் என்பது அறிவியல் கருத்து.

காமதேனு விரும்பிய அனைத்தையும் அளிக்கும் ஆற்றலுடையது என்பர். ஆகவேதான், இன்றும் பல பொருள் அங்காடிகளுக்கு 'காமதேனு' என்று பெயர் சூட்டுகின்றனர்.

அனைத்துத் தேவர்களையும் தனது மேலாண்மையால் கட்டுப்படுத்துபவள் தேவி. அடியார்களின் விருப்பங்களையும் அவள் விரைவில் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை வலியுறுத்தவே அம்பிகைக்குச் சிறப்பு ஊர்தியாக இது அமைகிறது.

- - -

கந்தருவி வாகனம்: ( மன்னிக்கவும் படம் கிடைக்கவில்லை)

மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் கந்தர்வர்கள் கவலையற்று இசைபாடித் திரிவதே இவர்களின் வேலை.

'இசை வடிவாய் நின்ற நாயகி' என்று அபிராமிப்பட்டரால் போற்றப்படும் அம்பிகைக்குக் கந்தர்வப் பெண் வாகனமாக விளங்குகின்றாள். மனித முகமும் இறக்கைகளும் உள்ள வடிவத்துடன் கந்தருவி விளங்குவாள்.

நுண்கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கே உரிய தனிஉலகத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பார்கள். அதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் கந்தர்வர்களின் சிறகுகள்.

சிவன் கோயில் திருவிழாக்களில் இறைவனுக்கும் கந்தருவ வாகனம் உண்டு. அன்றே அம்பிகைக்குக் கந்தருவி வாகனம்.

நுண்கலைகளில் தனக்குள்ள ஈடுபாடு முதலியவற்றை விளக்கவும் அவற்றை அடியார்களுக்கு அருள்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை கந்தருவி வாகனத்தில் வருகிறாள்.

- - -

மான் வாகனம்: (மன்னிக்கவும் படம் கிடைக்கவில்லை)

அம்பிகையின் மான் ஊர்தி வடமொழி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அப்படியே தேவி சம்பந்தமான தமிழ் நூல்களிலும் இடம் பெறவில்லை.

ஆனால், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் அன்னை மான்மேல் வருவாள் என்ற குறிப்பு உள்ளது.

சிலப்பதிகாரத்தில் வேட்டுவரி என்ற பகுதியில் பல்வேறு திருநாமங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றே 'பாய்கலைப் பாவை' என்பதாகும்.

துள்ளிப் பாயும் கலைமானைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவள் என்பது இதன் பொருள்.

மனித மனம் ஓரிடம் நில்லாது அலைபாயும் இயல்புடையது. அதனை இறைவன் தனது ஆளுகையில் வைத்துள்ளான். சிவபெருமானின் இடக்கரத்தில் இடம் பெறும் மான் இதனையே உணர்த்துகிறது.

அதே வகையில், துள்ளிப்பாயும் இயல்புடைய மனத்தின் மீது ஏறி அதனை நெறிப்படுத்துபவள் அம்பிகை. மனத்தின் மீது அவளுக்கே மேலாண்மை உண்டு. எனவே, அவள் பாய்கலைப் பாவையாகி வருகிறாள்.

இவை தவிர கிளி, பூதம், யாளி போன்ற வாகனங்களும் உண்டு.


(நன்றி - மயூரமங்கலம்)


search tags : annai vaganam, simma vaganam, rishaba vaganam, anna vaganam, naga vaganam, kuthirai vaganam, அன்னையின் வாகனங்கள், ரிஷபம், காமதேனு, சிம்மம், நாகம், அஷ்வம், குதிரை.

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin