ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Thursday, April 30, 2009

உலக நியதி

உலக நியதி

பட்டினத்தாரின் கருத்து நிறைந்த ஒரு பாடல் இது. ஒவ்வொரு வரிகளும் உண்மை. பாடலைக் காண்போம் வாருங்கள்.

நீ எதை அதிகமாய் விரும்பிகிறாயோ...
அதை ஒரு நாள் வெறுக்க வைப்பதும்
எதை நீ வெறுக்கிறாயோ - அதை
ஒரு நாள் விரும்ப வைப்பதுமே
இறைவனின் லீலையாகும். அதனால்
ஒன்றை விரும்பும் போதே, அதை ஒரு நாள்
வெறுக்க வேண்டி வரும் என்பதையும்
நினைவில் வைத்துக் கொண்டால்
விருப்பும் - வெறுப்பும் சமநிலைப்பட்டு
இன்பமும் துன்பமும் இல்லாமல் போய்விடும்
இறந்து கிடக்கும் பிணத்தின் மீது
இறக்கப்போகும் பிணங்கள்
விழுந்து அழுவதில் அர்த்தமில்லை.

மிகுந்த அர்த்தம் பொதிந்த ஒரு பாடல். இந்தப் பாடலின் அர்த்தத்தினை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். இருப்பினும் சில விடயங்களில் இது பொருந்தவில்லை. என் பெற்றோர், நான் வணங்கும் தெய்வங்கள், நல்லோர் இவர்கள் மேல் நான் கொண்ட நேசம் ஒருநாளும் மாறியதில்லை. ஆனால் வேறு நான் நேசித்த அநித்ய பொருட்களையும், சில பழக்கவழக்கங்களையும் வெறுத்திருக்கிறேன். அநித்ய பொருட்கள் என்றால் நிலையில்லாத பொருட்கள்.

விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவருதல் சாத்தியமா. ஆம். ஞானிகள் விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகவே எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் நம்மால் எப்படி விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவர முடியும்?. தியானத்தின் மூலமும், வாழ்க்கையின் படிப்பினைகள் மூலமும்தான். இதுவரை நான் முயற்சி செய்ததில் ஒரு 10% தான் முன்னேறியுள்ளேன். ஆனால் இந்தப் 10% தால் நான் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளேன். ஆக விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள். முயற்சியில் ஈடுபடும் போதே நிம்மதியினையும், சாந்தியினையும் அடைவீர்கள்.

இறந்தவர்களைக் கண்டு இறக்கப் போகும் நாம் அழுவது விந்தைதான். பிறப்பினையும் இறப்பினையும் முழுதுமாக உணர்ந்து கொண்டால்தான் ஒரு துக்கவீட்டில் கூட மனம் சஞ்சலமில்லாமல் இருக்கமுடியும். பூமியில் நிலையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை என்பதை மனதில் கொண்டால் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். துக்கவீட்டிற்குச் சென்றால் மனம் துக்கமடையும், அப்போதெல்லாம் இந்தப் பாட்டினை நினைவிற் கொள்வேன், மனம் அமைதியாகிவிடும். மனம் அமைதியாக இருந்தால்தான் அந்த துக்கவீட்டில் துக்கத்தில் ஆழ்ந்திருப்போரை நாம் அமைதிப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யமுடியும். மாறாக நாமும் அவர்களோடு துக்கத்தில் ஆழ்ந்து விட்டால் நம்மைத் தேற்றவே ஒருவர் வரவேண்டி இருக்கும்.


search tags : katurai, artcle, கட்டுரை, பயனுள்ளவை, பட்டினத்தார், patinathar

Wednesday, April 29, 2009

ஆன்மிகக் கதைகள் - 2

ஆன்மிகக் கதைகள் - 2

- அரசனும் அடிமையும் -


அரசன் ஒருவருக்கு ஓர் அடிமை மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் சேவை செய்து வந்தான். தனது அரசனை எப்போதும் போற்றியபடியும், எந்த நேரத்திலும் சேவைபுரியத் தயாராக இருந்தான். அவ்வடிமையின் உண்மைத்தன்மையை நன்றாக உணர்ந்த அரசர் அவனைத் தன் முதலமைச்சராக நியமித்தார். இவ்வாறு அடிமையாக இருந்த ஒருவன் இரவோடிரவாக முதலமைச்சராக மாறியதைக் கண்ட மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அடிமையான முதலமைச்சர் மீது பொறாமை கொண்டனர்.எல்லா அமைச்சர்களும் இந்த விடயம் காரணமாக ஒன்று கூடி தமது இந்த மனக்குறையை அரசனிடம் கூறினர். இவர்களுடைய மனக்குறையை மிகவும் அமைதியாகக் கேட்டு விட்டு "இன்றிலிருந்து ஒரு கிழமை முடிய நீங்களும் முதலமைச்சரும் எம்மை இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள பூஞ்சோலையில் உள்ள விடுதியில் சரியாக மாலை 4 மணிக்கு என்னை வந்து சந்திக்க வேண்டும். எவர் ஒருவர் என்னை வந்து முதலாவதாகச் சந்திக்கிறாரோ அவரே எம்மீது உண்மையான அன்பும் மரியாதையும் உள்ளவர்" என அரசர் கூறினார்.

ஒரு சில நிமிடங்களின் பின் அரசர் முதலமைச்சரை வரவழைத்து ஏனையோருக்கு கூறியவற்றைக் கூறினார். பின்னர் தளபதியை வரவழைத்து அமைச்சர்கள் தம்மைக் காண இருக்கும் பூஞ்சோலைக்கு இட்டுச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் விடுதிகளும் கூடாரங்களும் அமைக்கும்படியும் அதில் சுவைமிகுந்த சிற்றுண்டிகளும், மனதைக் கவரும் பொருட்களும், களியாட்டங்களும் ஏற்பாடு செய்யும்படி கூறினார். பின் அனைத்து அமைச்சர்களுக்கும் கால்நடையாக வந்தே தம்மைக் காணவேண்டும் என செய்தி அனுப்பினார்.

அரசர் குறித்த நாளும் வந்தது. முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வாறு இவர்கள் நடந்து செல்லும் போது முதலமைச்சரைத் தவிர மீதி அனைவரும் சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கும் கூடாரங்களுக்கும் சென்று இன்புற்று இருந்தனர். சிற்றுண்டிகள் மற்றும் களியாட்டங்கள் என அனைத்துமே இலவசமாக இருந்தமையால் மிகவும் ஆனந்தமாக இருந்தனர். அரசரைச் சந்திக்க இன்னும் நேரம் உண்டு என கூறிக்கொண்டு சாலையில் இருந்த அனைத்து களியாட்ட இடங்களுக்கும் சென்றனர். இவ்வாறாக நேரம் சென்று கொண்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்க, முதலமைச்சரோ இவை எவற்றிலும் தன் கவனத்தைச் சிதறவிடாது அரசர் ஆணையை மனதிற் கொண்டு நேரே பூஞ்சோலை விடுதியை தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே சென்றடைந்தார். ஏனைய அமைச்சர்களில் சிலர் அரை மணித்தியாலம், சிலர் ஒரு மணித்தியாலம் பிந்தியே வந்தனர். சிலரோ வராது இருந்துவிட்டனர்.

அடுத்த நாள் அனைத்து அமைச்சர்களையும் அழைத்தார். அவர்களிடம் " இந்த அடிமையை(முதலமைச்சரைச் சுட்டிக் காட்டி) ஏன் முதலமைச்சராக்கினேன் என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்குமெனெ எண்ணுகிறேன். இந்த உயர்ந்த பதவிக்குத் தகுந்த அதி உத்தம குணங்கள் பொருந்தியவர் இவர் என்பதனை அறிந்தே முதல் அமைச்சர் பதவியை இவருக்கு அளித்தேன் " எனக் கூறினார். அமைச்சர்கள் வெட்கத்தில் தலை குனிந்தபடி அரசனுடைய முடிவை வரவேற்றனர்.

இது போன்றே, உண்மையான ஞானிகளும், துறவிகளும், பக்தர்களும் இறைவனையன்றி வேறு ஒருவரையும் மனதில் சிந்திக்க மாட்டார்கள். இறைவனை அடையும் நேர்வழியில் செல்வார்கள். வீதியோரக் கவர்ச்சிக்கு ஒப்பான மாயையில் சிக்கமாட்டார்கள். உயிருக்கு உறுதுணையான இறைவனையே நாடுவார்கள். அதனால் மனதில் நல்ல எண்ணங்களோடு, சமுதாயத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள். காரணம் இறைவனையே சதா சிந்திக்கும் மனதில் நல்ல எண்ணங்களே எப்போதும் தோன்றும்.



search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

Monday, April 27, 2009

ஆன்மிகக் கதைகள் - 1

ஆன்மிகக் கதைகள் - 1

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.


search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

ஐம்பெரும் வேள்விகள்

ஐம்பெரும் வேள்விகளைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். வேள்வி என்பது யக்ஞம் அல்லது யாகம் எனப் பொருள்படும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அவசியம் இவற்றைச் செய்ய வேண்டும்.

1. தேவ யக்ஞம் :

கடவுள் வழிபாடு என்பது தினந்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. இஷ்ட தேவதையை முறைப்படி நாள்தோறும் வாழ்த்தி வணங்க வேண்டும். தினமும் நாம் இறைவனை வழிபடும் போது தேவ யக்ஞம் செய்தவர்களாகின்றோம்.

2. பித்ரு யக்ஞம் :

எந்த ஒரு மனிதனும் தன் முன்னோர்குக் கடன்பட்டவன் ஆகின்றான். அப்படிப்பட்ட முன்னோர்க்கு நன்றியுள்ளவனாக இருக்கவேண்டும். தினமும் இறைவனைத் தொழும் போது " என் முன்னோர்கள் எவ்வுலகில் எந்தநிலையில் இருந்தாலும் இன்புற்று இருக்கவேண்டும் " என்று நம் முன்னோர்க்காக வணங்கவேண்டும்.

அத்தோடு நம்மோடு இருக்கும் நம் தாய் தந்தையர்க்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ரு யக்ஞமாகக் கொள்ளப்படும்.

3. ரிஷி யக்ஞம் :

உலக நன்மையின் பொருட்டு ரிஷிகளும் சான்றோர்களும் சிறந்த சாஸ்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் எழுதிச் சென்ற தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும், அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் ரிஷி யக்ஞம் அல்லது பிரம்ம யக்ஞம் ஆகும்.

4. பூத யக்ஞம் :

பசு, ஆடு போன்ற உயிரினங்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பல வகைகளில் பயன்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட இவற்றை நாம் நன்கு பேணிக் காத்துவருதல் வேண்டும். இப்படி காத்துவருதல் பூத யக்ஞம் ஆகும்.

5. நர யக்ஞம் :

மக்களது பசியைப் போக்கி, சிறந்த கல்வியை அளித்து, அவர்களின் நோயை நீக்கி அவர்களுக்கு செய்யும் நல்லுதவிகள் எல்லாம் நர யக்ஞத்தில் அடங்குகின்றன,

இங்கனம் உள்ள, பஞ்ச மகா யக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபட வேண்டும். உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அவ்வுணவு மழையில் இருந்து உருப்பெறுகின்றது. அம்மழை யக்ஞத்தில் இருந்து வருகிறது. எனவே மழை வரவேண்டும் என நாம் விரும்பினால், இந்த ஐந்து வகையான வேள்விகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன.


search tags : velvi, yagam, yaham, வேள்வி, யாகம்

Sunday, April 26, 2009

அன்னையின் வாகனங்கள்

அன்னை உமையவள் எழுந்தருள் பாலிக்கும் வாகனங்களையும் அவற்றின் தத்துவங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.


யானை வாகனம்:



தேவி, பண்டன் என்ற அசுரனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டாள். அப்போது தனது அங்குசத்திலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தாள். குரோதம் மற்றும் ஞானத்தின் வடிவான அங்குசத்திலிருந்து தோன்றிய அச்சக்தியை 'ஸம் பத்கரி' என்று அழைத்தனர். இவளே அன்னையின் யானைப் படையின் தலைவியானாள். 'ரணகோலஹலம்' என்ற யானையே இவட்கு வாகனமாயிற்று.

"உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து" என்ற திருக்குறள், 'மனவுறுதி என்ற அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளையும் அடக்கும் சான்றோர் முக்திக்கு வித்தாகின்றனர்' என்று உரைக்கின்றது.

இதே கருத்தை வலியுறுத்துவதுதான் அம்பிகையின் வாகனம். அதாவது அம்பிகை வழிபாடு உயர்ந்த புலனடக்கத்தைத் தரும் என்பதே கருத்து.

மற்றும் மயில் போல் யானையும் தனது வடிவத்தால் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினைவுபடுத்துகிறது. தானே ஓங்காரத்தின் உட்பொருள் என்பதை அன்னை யானை ஊர்தியால் உணர்த்துகிறாள்.


அன்ன வாகனம்:



அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் இயல்புடையது. அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப்பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள். மேலும் சில மந்திரங்களை 'ஹம்சம்' என்று குறிப்பிடுவர். ஹம்சம் என்றால் அன்னப்பறவை என்று பொருள்.

அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை. அவளை உணர்ந்து உயர்ந்த சான்றோர்களை பரமஹம்சர்கள் என்று கூறுவர். அச்சான்றோர்களின் மனதில் இருப்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை ஹம்ச வாகனத்தில் வருகிறாள்.

மேலும், தற்கால விமானங்கள் போல் தரையில் ஓடிய பின்னரே அன்னப்பறவையும் மேலே பறக்கத் தொடங்கும் இயல்புடையது. மண்ணில் இல்லறத்தில் சிறப்புற வாழ்ந்து மேல் நிலைக்கு உயரும் வாழ்க்கை நெறியை உணர்த்தவும் அவள் அன்னத்தைச் சிறப்பு வாகனமாகக் கொண்டுள்ளாள்.


நாக வாகனம்:



நாகம் (பாம்பு) விநாயகருக்கு உதர பந்தனம் எனும் அரைஞாண் கயிறாகவும், திருமாலுக்குப் பள்ளியாகவும், சிவனுக்கு நாகாபரணம்(நாக ஆபரணம்) ஆகவும், முருகனின் மயிற்கால் பந்தனமாகவும் விளங்குகின்றது. அம்பிகைக்குச் சிறுவிரல் மோதிரமாக விளங்கும் நாகமே சிறப்பு நாட்களில் வாகனமாகிறது.

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சுருண்டு படுத்திருக்கும் பாம்பு போல் தோன்றும். இந்திய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு, கற்றுத் தேர்ந்து, பல நூல்களையும் இயற்றிய ஆங்கிலேய அறிஞர் சர் ஜான் உட்ராஃப் குண்டலினி சக்தியை 'சர்பண்டைன் பவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே ஊர்தியாகின்றது.

நாக வாகனம் ஐந்து தலைகளுடன் நாகம் குடையெடுப்பதுபோல் அமைந்திருக்கும். வாற் பகுதி சுருட்டிக் கொண்டு அடிப்பீடம் போல் காட்சிதரும்.

அம்பிகைக்கும், சிவனுக்கும் ஊர்தியாகும் பொழுது நாகவாகனம் என்றும், திருமாலுக்கு வாகனமாகும் பொழுது 'சேஷவாகனம்' எனவும் பெயர் பெறும்.



சிம்ம வாகனம்:



அம்பிகைக்கே உரிய சிறப்பு ஊர்தி சிங்கமே. " சிங்கத்திலேறிச் சிரித்தெவையும் காத்திடுவாள் " என்கிறார் பாரதிரியார்.

தனது 'கர்ஜனை' யினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமை சிங்கத்தின் தனித்தன்மை ஆகும். கம்பீரமும் யாரும் எளிதில் அண்டமுடியாது என்ற நிலையும் உடையது. அதே நேரத்தில் தருமம் தவறாதது சிங்கம். தன்னை எதிர்க்காத விலங்குகளை அடிக்காது. பசியில்லா வேளையில் வேட்டையாடாது.

அம்பிகையும் தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்த சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.

சிங்கமுகாசுரன் சூரபதுமனின் தம்பியாவான். முருகன் சூரனைத் தனக்கு மயில் வாகனமாக மாற்றிக் கொண்டான் அல்லவா? அதே போல் அவன் தம்பி சிங்கனையும் சிம்ம வாகனமாக்கித் தன் தாய்க்கு அளித்து விட்டான். இன்றும் பிள்ளைகள் தனது தாய்க்கென தனிக் கார் வாங்கிக் கொடுப்பது போலத்தான்.

அம்பிகை அமரும் அரியணையும் 'ஸ்ரீமத் சிம்மாசனம்' என்று சகஸ்ரநாமத்தில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. பரத நாட்டியத்தில் 'சிம்ம வாகினி' என்ற ஒரு ஆட்டம் உண்டு. குறிப்பிட்ட ஜதிகளுடன் தாளக் கட்டுடன் ஆடினால் அரங்கில், ஆடும் பகுதியில், கீழே வைக்கப்பட்டிருக்கும் வண்ணப்பொடி தூவிய காகிதம் அல்லது துணியில் சிம்மம் வரையப்பட்டு விடும். இது வியத்தகு அற்புத ஆட்டம்.

பெரும்பாலும் காளியம்மன் முதலான ஆற்றல் மிகு தெய்வங்களுக்கே சிம்மவாகனம் சிறப்பு ஊர்தியாக விளங்குகிறது.



ரிஷப வாகனம்:



சிவாலயத் திருவிழாக்களில் கணபதி, சோமாஸ்கந்தர், தனி அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் என ஐந்து மூர்த்தங்கள் உலாவில் இடம் பெறும். இவற்றையே பஞ்ச மூர்த்திகள் அல்லது ஐந்திருமேனிகள் என்பர்.

இறைவன் ரிஷப வாகனக் காட்சியே சிவாலயத் திருவிழாக்களில் முதன்மையானது. அப்போது சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்தில் வரும்பொழுது தனியம்பாள் தனக்கே உரிய தனி ரிஷபத்தில் எழுந்தருளுவாள்.

அறுசுவை உண்டியை அனைவருக்கும் அளித்து விட்டு ஆலகால விஷத்தை உண்டவன் இறைவன். மாளிகைகளை மக்களுக்குக் கொடுத்துவிட்டு அவன் மயானத்தில் வசிப்பவன். அதாவது தன்னலமற்ற தியாகராஜனாக அவன் விளங்குகின்றான். அவன் எவ்வழியோ அம்பிகையும் அவ்வழிதான்.

காளை மாடு வயலில் ஓயாது உழைத்து உதவுகிறது. விளைந்த உணவுப் பொருட்களை பொதியாகச் சுமந்து வந்து சேர்க்கின்றது. அதன் உழைப்பால் உற்பத்தியான தானியங்களின் உட்பகுதியான அரிசியையும், பருப்புக்களையும் நமக்கு அளித்து விடுகின்றது. நாம் விரும்பாத உமி, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தனக்கு உணவாக உண்டு மகிழ்கிறது. " உழைத்த எமக்கே உணவுப் பொருள் அனைத்தும்" என்று காளைகள் போராடத் தொடங்கினால் மனிதன் பட்டினியால் வாட வேண்டியதுதான்.

உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் விருப்பம், இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் விடையூர்தியை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் ரிஷப வாகனம் தரும தேவதையின் வடிவமே என்பர். அனைத்தும் அழிந்துபடும் பேரூழிக் காலத்தில், தருமம், தான் அழியாது நிலைத்திருக்க விரும்பி அழியாத சிவசக்திகளின் ஊர்தியாகி, காளையாக வருகிறது.



குதிரை வாகனம்:



அம்பிகை தனது பாச ஆயுதத்திலிருந்து தோற்றுவித்த சக்தி 'பரி ஊர்வாள்' எனப் பொருள்படும் அச்வாரூடா தேவியாவாள். எவராலும் வெல்ல முடியாத 'அபராஜிதம்' என்ற குதிரை அச்வாரூடாவின் வாகனமாயிற்று. இவள் அம்பிகையின் குதிரைப் படையின் தலைவி. கோடிக்கணக்கான குதிரைகள் இவளது ஆளுகைக்கு உட்பட்டவை.

எண்ணற்ற ஆசைகளே குதிரைப் படையாகும். அவற்றை நன்னெறிப்படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப்படைத் தலைவி.

இயந்திரங்களின் ஆற்றலை அளக்கத் தற்காலத்தில் குதிரைச் சக்தியே அலகாக உள்ளது.

ஆற்றல்களுக்கெல்லாம் அதிராணியாக விளங்குபவள் என்பதையும் நன்னெறிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி அருள்வாள் என்பதையும் உணர்த்த அச்வ வாகனம் அல்லது குதிரை வாகனத்தைக் கொண்டிருக்கிறாள் தேவி.


காமதேனு வாகனம்:



அழகிய பெண்ணின் முகமும் பசுவின் உடலும் பறவையின் இறக்கைகளும் கொண்ட காமதேனுவின் உடலில் அனைத்துத் தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வ குணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது பசுவின் பால் என்பது அறிவியல் கருத்து.

காமதேனு விரும்பிய அனைத்தையும் அளிக்கும் ஆற்றலுடையது என்பர். ஆகவேதான், இன்றும் பல பொருள் அங்காடிகளுக்கு 'காமதேனு' என்று பெயர் சூட்டுகின்றனர்.

அனைத்துத் தேவர்களையும் தனது மேலாண்மையால் கட்டுப்படுத்துபவள் தேவி. அடியார்களின் விருப்பங்களையும் அவள் விரைவில் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை வலியுறுத்தவே அம்பிகைக்குச் சிறப்பு ஊர்தியாக இது அமைகிறது.

- - -

கந்தருவி வாகனம்: ( மன்னிக்கவும் படம் கிடைக்கவில்லை)

மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் கந்தர்வர்கள் கவலையற்று இசைபாடித் திரிவதே இவர்களின் வேலை.

'இசை வடிவாய் நின்ற நாயகி' என்று அபிராமிப்பட்டரால் போற்றப்படும் அம்பிகைக்குக் கந்தர்வப் பெண் வாகனமாக விளங்குகின்றாள். மனித முகமும் இறக்கைகளும் உள்ள வடிவத்துடன் கந்தருவி விளங்குவாள்.

நுண்கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கே உரிய தனிஉலகத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பார்கள். அதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் கந்தர்வர்களின் சிறகுகள்.

சிவன் கோயில் திருவிழாக்களில் இறைவனுக்கும் கந்தருவ வாகனம் உண்டு. அன்றே அம்பிகைக்குக் கந்தருவி வாகனம்.

நுண்கலைகளில் தனக்குள்ள ஈடுபாடு முதலியவற்றை விளக்கவும் அவற்றை அடியார்களுக்கு அருள்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை கந்தருவி வாகனத்தில் வருகிறாள்.

- - -

மான் வாகனம்: (மன்னிக்கவும் படம் கிடைக்கவில்லை)

அம்பிகையின் மான் ஊர்தி வடமொழி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அப்படியே தேவி சம்பந்தமான தமிழ் நூல்களிலும் இடம் பெறவில்லை.

ஆனால், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் அன்னை மான்மேல் வருவாள் என்ற குறிப்பு உள்ளது.

சிலப்பதிகாரத்தில் வேட்டுவரி என்ற பகுதியில் பல்வேறு திருநாமங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றே 'பாய்கலைப் பாவை' என்பதாகும்.

துள்ளிப் பாயும் கலைமானைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவள் என்பது இதன் பொருள்.

மனித மனம் ஓரிடம் நில்லாது அலைபாயும் இயல்புடையது. அதனை இறைவன் தனது ஆளுகையில் வைத்துள்ளான். சிவபெருமானின் இடக்கரத்தில் இடம் பெறும் மான் இதனையே உணர்த்துகிறது.

அதே வகையில், துள்ளிப்பாயும் இயல்புடைய மனத்தின் மீது ஏறி அதனை நெறிப்படுத்துபவள் அம்பிகை. மனத்தின் மீது அவளுக்கே மேலாண்மை உண்டு. எனவே, அவள் பாய்கலைப் பாவையாகி வருகிறாள்.

இவை தவிர கிளி, பூதம், யாளி போன்ற வாகனங்களும் உண்டு.


(நன்றி - மயூரமங்கலம்)


search tags : annai vaganam, simma vaganam, rishaba vaganam, anna vaganam, naga vaganam, kuthirai vaganam, அன்னையின் வாகனங்கள், ரிஷபம், காமதேனு, சிம்மம், நாகம், அஷ்வம், குதிரை.

Saturday, April 25, 2009

மதுரை சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய ஒளிப்பதிவு இது. புகைப்படங்களைத் தொகுத்து இவ்வொளிப்பதிவினை உருவாக்கியுள்ளனர். பின்னணியில் ஒலிக்கும் இசை மிகவும் பொருத்தமாக உள்ளது.

நீங்களும் இவ் ஒளிப்பதிவினைக் கண்டு இன்பமடையுங்கள்:





search tags : madurai meenakshi amman, madhurai meenakshi amman, meenakshi, மதுரை மீனாக்க்ஷி அம்மன், மதுரை, மீனாட்சி, சொக்கநாதர்.

Friday, April 24, 2009

பூஜை செய்யும் வழிமுறைகள்

* நெற்றியில் திருநீறோ குங்குமமோ அல்லது திருமண்ணோ இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. காரணம் இவை இறை சின்னங்கள். இவை நம் மனதை ஒருமுகப்படுத்தி பூஜையில் ஈடுபட உதவும்.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜைக்குப் பயன்படும் மலர்கள் புழு அல்லது பூச்சியின் தாக்கத்திற்கு ஆளாகாததாக இருக்கவேண்டும். ஒரு வேளை அவை புழு,பூச்சி அரித்துக் காணப்படுமாயின் அவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு நல்ல மலர்களின் காம்புகளை ஆய்ந்து அவற்றில் தலைமுடியோ அல்லது வேறு பொருட்களோ இல்லாதவாறு சுத்தப்படுத்த வேண்டும்.

* பூஜைக்கு தேவையான பொருட்களை நினைவில் வைத்து முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையின் போது பொருட்களை சேகரிப்பதைத் தவிருங்கள்.

* தீபம், மணி, வெற்றிலை, தேங்காய், சங்கு, பழம். பூக்கள் இவற்றை வெறுந்தரையில் வைக்கக்கூடாது.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜை நடுவில் எழுந்தி போகக்கூடாது.

* மந்திரம் தவிர்ந்த வேறு பயனற்ற பேச்சுக்கள் எதையும் பூஜையின் போது பேசலாகாது. மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் இறைவனை இறைஞ்சி வணங்குங்கள்.


search tags : payanulla thakaval, good, poojai, பயனுள்ள தகவல், நல்ல தகவல்கள், தகவல்கள்.

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் அருளப்பெற்ற பதிகம் இது. மிகுந்த சக்தி பெற்றது. இப் பதிகத்தினைப் பாராயணம் செய்ய சில விதிமுறைகளை அன்பர்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என இப்பதிகம் உள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் விதிமுறைகள் :

1. திருநீறு அணிந்து கொண்டால்தான் நமது தூலதேகம் பேரொளி வடிவான இறைவனை வணங்கும் தகுதியைப் பெறும். எனவே பாராயணம் செய்யத் தொடங்கும் முன் அவசியம் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.

2. பாடல்களை எழுத்துப் பிழையற ஓத வேண்டும். ஓதுதல் என்பது உரக்கச் சொல்லுதல் அன்று, மனத்திற்குள்ளாகச் சொல்லுதலே.

3. பாடல்களை விரைவாகவும் படிக்கக் கூடாது. அமைதியுடன் ஒவ்வொரு பாடலின் பொருளிலும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பாடலின் பொருளில் மனம் அழுந்தினால் சுவாமிகள் குறிப்பிடுகின்ற மனோலயம் தானே நிலைபெறும்.

4. பாராயணம் சிரத்தையுடனும், ஆழ்ந்த திடமான நம்பிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறுமோ நிறைவேறாதோ என்ற சந்தேகம் கூடாது. 'சுவாமிகளின் பாடல்களை ஓதி நாம் முருகப்பெருமானை வணங்குகின்றோம். நமது பிரார்த்தனை நிறைவேறுதல் உறுதி' என்ற நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்.

5. காலை, நண்பகல், மாலை இம்மூன்று வேளைகளிலும் நியமத்துடன் பாராயணம் செய்க. நேரமும், வாய்ப்பும், சூழ்நிலையும் ஒத்துவரவில்லையெனில் காலையில் மட்டுமாவது அவசியம் பாராயணம் செய்க.

6.'ஓய்வு கிடைத்த போது பாராயணம் செய்யலாம்' என்ற எண்ணம் கூடாது. நாள் தோறும் தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும். இடைவெளி விட்டுப் பாராயணம் செய்யக்கூடாது.

7. நமது மரியாதைக்குரியவர் பேச விரும்பினால் கூடப் பாராயணத்தை இடையில் நிறுத்தி விட்டு உரையாடலில் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு தோத்திரத்தையும் அரைகுறையாகப் பாதியில் ஓதி நிறுத்திவிடக் கூடாது.

8. புலால் உணவு, கள்ம் சாராயம், பீடி, சிகரெட் இவை நீக்கிப் பாராயணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர் என்பது உறுதி.

-----

குமாரஸ்தவம் (அதன் பொருளோடு)


ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
(ஆறு திருமுகங்களுடன் அடியார்களின் தேவைகளை உணர்ந்து வழங்கி அருள் செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
(ஆறு வகையான வழிபாட்டு நெறிமுறைகளுக்கும் முதன்மையாக உள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கிரீவ பதயே நமோ நமஹ:
(ஆறு தலைகளின் திருமேனிகளின் கழுத்துகளிலும் மணமிக்க வெற்றி மாலைகள் அணிந்துள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
(ஆறு சிரசுகளிலும் அழகிய திருமகுடங்கள் சூட்டியுள்ள அருள் தரும் கற்பகமாம் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:
(ஆறு கோணங்களின் அமைப்பாகவும் ஆறு எழுத்தான மறைச் சொல்லாகவும் உள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கோச பதயே நமோ நமஹ:
(ஆறு நெறிமுறைகளுக்கும் அருள் தரும் நூல்களுக்கும் ஆசான் ஆகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
(ஒன்பது செல்வங்களும் இகநலன்களும் மற்றும் நற்சுகமும் தந்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
(மங்களங்கள் யாவும் தந்து நலன்களும் நற்பேறுகளும் அருளும் சேவல் கொடியுடைய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
(அடியார்களின் மெய் அறிவை வேலாயுதத்தால் உணர்த்தி அருளுடன் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சுரபதி பதயே நமோ நமஹ:
(சூரனையும் பதுமனையும் இரண்டாகப்பிளந்து திருச்செந்திலில் வானோரை சிறைமீட்ட சேனைத் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
(தில்லை நடராசரின் திருமகளாக இருதய குகையில் இருந்து இயக்கி நடத்தும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷடஷர பதயே நமோ நமஹ:
(ஓம் சரவணபவ நமஹ எனப் போற்றும் அடியார்களுக்கு அருளும் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
(அகத்திய முனிவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஆசானாக உள்ள சுவாமிநாத குருவாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
(தவமியற்றும் முனிவர்களுக்கும் அடியார்களுக்கும் வேண்டும் வரமருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் இஹபர பதயே நமோ நமஹ:
(வழிபடுவோரின் இகநலன்கள் மற்றும் ஆன்ம லாபமும் நல்வாழ்வும் தந்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் புகழ் முநி பதயே நமோ நமஹ:
(சந்த இசைப்பாடல்கள் பாடித்திருக்குமரனைப் போற்றும் அருணை அருணகிரிநாதரின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஜய ஜய பதயே நமோ நமஹ:
(எங்கும் எதிலும் வெற்றி மேல் வெற்றியுடன் வாகையும் சூடும் வெற்றி வேலின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நய நய பதயே நமோ நமஹ:
(எண்ணி நல்லன எல்லாம் வழங்கும் காமதேனுவாக பொருள் பலவும் தந்து அருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
(அழகின் திருஉரு உடைய செவ்வேள் எனும் சுவாமிநாத குருசுவாமியாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:
(வள்ளிப் பிராட்டியாகிய செயல் ஆற்றலைத் தந்தருளும் வேடர்குல மன்னர் மகளின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
(கைகலந்து போரிடும் முறையில் பகைவரை வென்று அடியார்தமைக் காத்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அஸ்தர பதயே நமோ நமஹ:
(கையிலிருந்து வீசும் கூரிய வேலாயுதத்தால் போரிட்டு அசுரர்களை வெற்றி கொள்ளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
(கைகளில் உள்ள ஆயுதங்களால் போரிட்டு பகைவர்களை வெல்லும் மறக்கருணையுடைய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சஷ்டீ பதயே நமோ நமஹ:
(ஆறாம் நாளாக உள்ள சஷ்டியன்று விரதம் இருப்போருக்கு அருளும் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
(வேள்வி செய்வோர்க்கு வேண்டும் நன்மைதனைத் தந்து அருளும் தன்னிகரற்ற தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அபேத பதயே நமோ நமஹ:
(குணமாகிய குன்றில் நின்று குறைகள் மற்றும் மாசுகள் ஏதுமின்றி அருளாட்சி செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
(அனுபூதி எனும் மெஞ்ஞானத்தை உணர்த்தியருளி அடியார்களை உய்வடையச் செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
(எதிரியின் படைகளைச் சுற்றி வளைத்துப் போரிட்டு அழித்து வெற்றியடையும் தேவர்களின் சேனைத்தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மயூர பதயே நமோ நமஹ:
(விரைந்து செல்லும் ஊர்தியும் ஓம் எனும் திரு உருவமும் உடைய மயில் வாகனத்தின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பூத பதயே நமோ நமஹ:
(உயிர் வாழ்வனவற்றின் இதயத்தில் வீற்றிருந்து ஆன்ம ஆற்றலாக இயங்கி வரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் வேத பதயே நமோ நமஹ:
(மறை நூல்கள் அனைத்தையும் ஓதுவித்து எங்கும் இலங்கி விளங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் புராண பதயே நமோ நமஹ:
(பூமியின் தோற்றத்திற்கு முக்கியமானதும் எப்போதும் எங்கும் நிறைந்துள்ள அருளே உருவான தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பிராண பதயே நமோ நமஹ:
(உயிரோட்டமாக எல்லாவற்றிலும் இருந்து அவற்றை ஏற்றருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பக்த பதயே நமோ நமஹ:
(இறையன்பு உடையோர் வழிபடும் இடத்திற்கு உவந்து வந்து அருள் மழைபொழியும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் முக்த பதயே நமோ நமஹ:
(அகப்பற்றும் புறப்பற்றும் இல்லாத மோன நிலையடைந்த அனுபூதியாளர்களின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அகார பதயே நமோ நமஹ:
(எழுத்துக்களுக்கு அ முதலில் உள்ளது போல் ஆக்கல் தொழிலையும் செய்யும் இறைவனாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் உகார பதயே நமோ நமஹ:
(ஊகாரமாகிய காக்கும் சக்தியாகிய திருச்செந்தூரில் சூரனிடமிருந்து சுரர்களைக் காத்து மீட்டு அருளிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மகார பதயே நமோ நமஹ:
(மகாரமாகி ஏற்றருளும் பாங்குடன் வாழ் நாளிலேயெ அவரவர் நல்வினை வழி மெய்யறிவினை வழங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் விகாச பதயே நமோ நமஹ:
(சிவசுப்பிரமணியமாக எங்கும் எதிலும் முழுவதுமாக நிறைந்துள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
(மூலமுதலுக்கும் முந்தியதும் யாவரும் எப்போதும் விரும்பிப் போற்றி வணங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பூதி பதயே நமோ நமஹ:
(பூதி எனப்படும் பொருள் வளம் அனைத்தையும் நல்கியருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அமார பதயே நமோ நமஹ:
(வேட்கையை வென்ற சிவனுக்கு ஒரு சொல்மறை ஓதிய சுவாமிநாதர் குமரகுருவாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் குமார பதயே நமோ நமஹ:
(எப்போதும் இளம் குமராக உள்ளவனும் கருவேள் தரும் மாயைதனை நீக்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

குமாரஸ்தவம் நிறைவுற்றது.


search tags : sree kumarasthavam, pamban swami, ஸ்ரீ குமாரஸ்தவம், பாம்பன் சுவாமிகள், கந்தன், முருகன், Lord Muruga, Lord Kanthan

Tuesday, April 21, 2009

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கலிதோஷம் நீக்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜெயமருள் போற்றுகின்றேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரெஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரண மடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத்தா னறிந்து நான் தன் மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலை தனில் சொன்னதைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை

அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெல்லாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமியுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்தி லாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்வியஜோதி யானகந்தா
பரஞ்ஜோதி யுங்காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்

திருமலை முருகாநீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மல மகற்றிடுவாய்
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங் கிரிகுஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூது வாதுக்களை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா என்கண் முருகா நீ

என்னுள் ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்கார ஜீவனைச்சிவ னாக்கிடுவாய்
குன்றக் குடிக்குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா

பவழமலை ஆண்டவனே பாபங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல் கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்

ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றிகந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒரு பொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பது மன்பென்றாய்

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள் மந்திர மென்றாய்
அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியவன் நீ யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மல மாக்கிடுவாய்
யானெனெ தற்றமெய் ஞானம தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகம மேத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம் பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய்வந் தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
வித்தையா மிவ்வுலகை வித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயமென்றலறுகின்றேன்

அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்
உன் அருளாலே உன் தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞான சித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு

அறிவை அறிந்துடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்தா குருநாதா ஸ்கந்த குருநாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லது கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவபுண் ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்

சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்
சிவனைப் போலென்னைச் செய்திடுவ துன்கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்

தென்மேற்கிலுமென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரஷிப்பாய்
வடமேற்கிலுமென்னை மயிலோனே ரஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்து வந்து ரஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேள் காக்கட்டும்

நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்க ளிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்

மனத்தை முருகன் கை மாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிதுநிலைத் திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்து முகர் அனைத்தையுமே
உரோமத் வாரமெல்லாம் உமைபாலா ரஷிப்பாய்
தோல்ரத்தம் மஜ்ஜையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அஹங்காரமுமகற்றி அறிவொளியா யிருந்தும்

முருகா வெனைக்காக்க வேல் கொண்டு வந்திடுவீர்
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹவென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடுநீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்

முருகன் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் காலபய மில்லையடா
காலனை நீஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடி செய்தால் சுப்ரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீஜபித்தே முக்தனு மாகிடடா
அஷர லஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்

எண்ணிய தெலாம் கிட்டும் எமபய மகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதைநீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்துடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்குமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரஹ் மண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே

அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே வேண்டி நான்வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறி வானகந்தன் பரங்குன்றில் இருக்கின்றாய்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்மமய மாக்கிடுவாய்

திருச்செந் தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய்
பழமுதிர்ச் சோலையில் பரஞ்ஜோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்த கிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கிற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரணமடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னரு ளாலேதான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக் குயிரானகந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னி லுன்னைக்காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசித்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழியொன்று மறிந்திலேன் நான்

ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே
திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யா னந்தமதில்
நித்யானந்தமே நின்னரு வாகையினால்

அத்வை யானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச் செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
துக்கங்க ளனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுக மானகுரோ அறிந்திட்டே னுன்மஹிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக் கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ

ஞான தண்டபாணியே என்னை ஞானபண்டித னாக்கிடுவாய்
அகந்தையெலா மழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ள வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங் கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும்

அன்பே ஹரியும் அன்பே பிரம்மனும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோஷம்
அன்பே பிரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கும் மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரேதான்
ஸ்கந்தாஸ் ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ் ரமந்தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உனையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகி யாகஎனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிடுவாய்
மெய்யடியா ராக்கி மெய்வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ

மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரே
கற்றவர்க ளோடென்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகாகேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில்
கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா

பரமா னந்தமதில் எனைமறக்கப் பாலிப்பாய்
மால் முருகா வள்ளிமணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன் கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவா வினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க் குத்தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்

ஔவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக் கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன் நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய் தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாஷியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின் நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்
அங்கிங் கெனாதபடி எங்குமே முருகனப்பா

முருகன் இல்லாவிட்டால் முவ்வுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்
முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ் ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேக மில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுரு வேஸத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மா னந்தமுண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருன்னை
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர் போற்றிடுவர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கவசமென்று உணர்ந்திடுவாய்
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே

சொன்னபடி செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தோன்றி ஏத்துவோர்க்கு
அஷ்டைஸ் வர்யந்தரும் அந்தமில்லா இன்பந்தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன்
வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமரோதம் கலிதோஷ மகற்று விக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்

அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலப மாய்க்கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா வுளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
ஸ்கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ

ஸ்கந்தகுரு கவசந்தன்னை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபர சுகமுண்டாகும் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்திரைகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரஷிக்கும் ஸ்கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ ஸ்கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அக்ஞானமு மகற்றி அருள்ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னிலவ னாகிடுவன்
தன்னில் உன்னைக் காட்டி உன்னில் தன்னைக் காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்த ஜோதி யானகந்தன் கந்தகிரி யிருந்து
தண்டாயுதம் தாங்கி தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாட கந்தகிரி வாருமினே

கந்தகிரி வந்திநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ்பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளளுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறையோதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாஷரம் பெற்று
ஆறுமுறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்

ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா ஸித்திகிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துதர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
ஸ்கந்தகுரு கவசமோதி ஸ்கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளிலே நீ எடுத்து
கந்தனென்ற மந்திரத்தை கண்மூடி யுருவேத்தி

உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால்
சித்த மலமகன்று சித்தசுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி யேறிடுவீர்
கந்தகிரி யேறிஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெல்லாம் பெற்றிடுவீர்.

( ஸ்கந்தகுரு கவசம் முற்றிற்று )


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் (ஒலி,ஒளி)

searcj tags : sree skandaguru kavasam, Lord Muruga, Lord Kanthan, கந்தகுரு கவசம், ஸ்கந்தகுரு கவசம், முருகன், கந்தன்

Related Posts Widget for Blogs by LinkWithin