அபிராமி அந்தாதி
பகுதி - 21-30
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்...
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே. 21
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. 22
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே. 23
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. 24
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாப ஆத்மாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே. 26
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, வி‰ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை
விளைவிக்கின்றது.
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே. 27
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. 28
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே. 29
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே. 30
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட்கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்).
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 11-20
நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்
search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்
_*_*_*_
No comments:
Post a Comment