ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Monday, June 15, 2009

அபிராமி அந்தாதி 31-40



அபிராமி அந்தாதி

பகுதி - 31-40

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. 31

அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.


ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே. 32

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே 33

தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவபெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ’அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. 34

தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35

அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடைய பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!


பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே. 36

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. 37

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. 38

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.


ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. 39

அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!


வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. 40

ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 21-30


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.

search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin