ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Thursday, June 18, 2009

அபிராமி அந்தாதி 41-50



அபிராமி அந்தாதி

பகுதி - 41-50

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. 41

அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.


இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. 42

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43

சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!


தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44

எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன்.


தாயே! தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. 45

அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.


வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. 46

ஏ அபிராமியே! விஷ„த்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.


வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47

அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48

ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளும், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளும் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 49

நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!


நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. 50

ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், வி‰ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 31-40


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin