சப்த மாதர்
சப்த மாதர்களைப் பற்றி அறிவீர்களா?. வாருங்கள் அறிந்து கொள்வோம்.
1. பிராமி
பிரம்மனின் சக்தி. இவர் மஞ்சள் நிறமானவர். நான்கு முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டு காணப்படுவார். வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய இருகரங்களிலும் அட்சமாலை, சிகுவா என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க மற்றையன புத்தகம், கமண்டலம் என்பனவற்றை ஏந்தியவாறு காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் பிராமியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. இவர் செந்தாமரை மீது உட்கார்ந்திருப்பார். வாகனமாகவும் கொடியாகவும் அன்னம் காணப்படும். மஞ்சள் ஆடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்திருப்பார். தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.
2. மகேசுவரி
சிவனின் சக்தி. வெள்ளை நிறமானவர். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் இவருக்கு ஆறு கரங்களும், ரூபமண்டனம், மச்சபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம் என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது. இவரது தலையில் ஜடா மகுடம் காணப்படும். அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
3. கௌமாரி
முருகனின் சக்தி. இவர் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை ஏந்தியிருக்கும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது. அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். இவர் பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும் இவ்வாகமம் கூறுகின்றது. கௌமாரி மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவள்.
4, வைஷ்ணவி
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
5. வராகி
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
6. இந்திராணி
இந்திரனின் சக்தி. இவர் பொன்னிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் அட்ச மாலை, வஜ்ரம் என்பன காணப்படும். இடது பக்க கரங்களிலொன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், பூர்ணாகாரணாகமம் என்னும் நூல்களில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவர்றினை ஏந்தியிருக்கும். தேவி புராணத்தில் அங்குசம், வஜ்ரம், என்பனவற்றினை ஏந்திய இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. இந்திராணிக்கு ஸ்ரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும், அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும், பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும் கூறப்படுகின்றது. ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன் காட்டவேண்டும் எனக் கூறுகின்றது. இவரது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்களை அணிந்திருப்பவர். இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.
7. சாமுண்டி
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள் என்பனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி மகாத்மியம் இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும் அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது. இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர் எனவும் தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும் செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : மயூரமங்கலம்
search tags : Saptha Matha, Saptha Mathar, சப்த மாதா, சப்த மாதர்
_*_*_*_
2 comments:
Nice Article....
ipothan saptha matha pathi therichuketen...
keep this good work
Jana
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜனா...
Post a Comment