இராமாயணம்
பகுதி - 9
சீதாதேவி இலகுவில் தூக்கிய வில்லை வளைத்தவனுக்கே பெண்ணைத் தருவதாகப் பிரகடனம் செய்தார் ஜனகர். பலர் வந்து வளைக்காமல் தோல்வி அடைந்தார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் பரம மங்களமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் குழுமினார்கள். அந்த யாகத்துக்கான அழைப்பு சித்தாசிரமத்தில் இருந்த விசுவாமித்திரரை அடைந்தது.
விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா! உன்னால் ஒரு பெரிய காரியம் நடக்க இருக்கிறது. அதற்கிடையில் ஜனகருடைய யாகத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இராம இலட்சுமணருடன் மிதிலையை நோக்கி புறப்பட்டார். வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியைத் தரிசித்தார்கள். பகீரதன் கங்கை கொண்டு வந்த வரலாற்றை விசுவாமித்திரர் இராமருக்குக் கூறினார். வழியில் முருகப் பெருமான் திருவவதாரம் செய்த சரவணப் பொய்கையைக் கண்டு முருகப் பெருமனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.
ஓடக்காரன் சந்திப்பு:
மூவரும் தேவரும் போற்றும் மிதிலைக்கருகிலே சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி குறுக்கிட்டது. அதற்குப் பாலம் இல்லை. அந்த நதியைக் கடக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து வணங்கி நின்றான்.
நீ யாரப்பா? உனக்கு என்ன பேரப்பா? என்று கேட்டார்கள்.
அவன் நான் வீரப்பன் என்றான்.
அக்கரைக்குப் போகவேண்டும். ஓடம் கிடைக்குமா?
நான் ஓடக்காரன். மீனவர் மரபில் வந்தவன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன்.
இப்போது ஓடம் தயாராக இருக்கின்றதா? எத்தனைப் பேர் ஏறலாம்?
அறுபது பேர் ஏறலாம். நீங்கள் மூவர்தான் வந்திருக்கின்றீர்கள்.
அப்பா! இன்னும் 57 பேர்கள் சேரும் வரையிலும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?
நீங்கள் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள். உங்களைக் காக்க வைக்கமாட்டேன். உங்கள் மூவருக்கும் ஓடம் செலுத்துவேன்.
அப்படியானால் அறுபது பேருக்குரிய கட்டணத்தை நாங்களே தந்துவிடுவோம்.
நீங்கள் மூவரும் ஏறினால் மும்மூர்த்திகள் ஏறியது போலாகும். உங்களிடத்தில் காசு வாங்கமாட்டேன். உங்கள் ஆசி இருந்தால் போதும். ஏறுங்கள்.
விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறுகின்ற பொழுது அந்த மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் கால் வைக்காதே. அப்பன் ஆணை என்றான்.
இராமர் துக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்குச் சீற்றம். இவனை அறைந்துவிட்டு நாமே ஓடம் செலுத்தலாம் என்று எண்ணினார். இராமர், தம்பி! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்திக் கொண்டிருக்கிறான். தனியார் துறையில் அரசாங்கம் கை வைக்கக்கூடாது. அரசாங்கம் மேற்கொண்ட இலாக்கா ஒழுங்காக இருப்பதில்லை. பச்சையாக இருக்கின்ற என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன? அவனுக்குச் சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டுதானே?
அப்பா! மீனவனே! நான் ஏன் ஏறக்கூடாது?
ஐயா! தங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன். சீறுகின்ற சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். நீங்கள் யார்?
அப்பா! அயோத்தியை ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் மக்கள் நாங்கள்.
அம்மீனவன் உள்ளம் துடித்து, கண்ணீர் வடித்து வணங்கி, என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரமூர்த்தி! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். அமைச்சர்கள் வந்தாலே மிகப்பெரிய வரவேற்புச் செய்கின்றார்கள். நீங்கள் சக்கரவர்த்தித் திருக்குமாரர். உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். தாங்கள் மட்டும் ஒடத்தில் கால் வைக்கவேண்டாம்.
ஏனப்பா? நான் ஏறக்கூடாது?
ஐயனே! சிறிது தூரத்தில் ஒரு கருங்கல் பாறை இருந்தது. நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை ஆடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இதில் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடனே ஓடம் பெண்ணாக மாறிவிடும். நான் வீட்டிலுள்ள பெண்ணைக் காப்பாற்றுவேனா? இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவேனா? தனவந்தர்கள் இரு தாரத்தடன் அல்லல்படுகிறார்கள். நான் ஏழை. இந்த ஓடத்தை வைத்தக்கொண்டுதான் ஜீவனம் பண்ணுகிறேன்.
அப்பா! நாங்கள் கால் வைத்தால் பெண்ணாகாது. நாங்கள் அவசியம் அக்கரைக்குப் போகவேண்டும்.
அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நதியில் இறங்கிச் சுத்தமாகக் காலைக் கழுவிவிடுங்கள். கல்லைப் பெண்ணாக்குகின்ற மருந்து தண்ணீரில் கரைந்து போகட்டும் பின்னர் ஏறிக்கொள்ளலாம்.
இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் வைத்துத் தேய்க்கக் கூடாது என்று வசிட்டர் உமக்குச் சொல்லவில்லையா? கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய்த் தேய்த்துவிடுவேன் என்று கூறி, இராமருடைய சரணார விந்தங்களைச் செப்புத் தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை எடுத்து அர்ச்சனை செய்தான். எம்பெருமானே உன் பாத பூசைக்குச் சரபங்கர், பாரத்துவாஜர், தண்டக வனத்த மகரிஷிகள், சபரி முதலிய மகரிஷிகள் பலகாலம் காத்திருக்க, தவம் செய்யாத தமியேனுக்கு முதல் பாதபூசை கிடைத்ததே என்று துதி செய்து வந்தனை வழிபாடு செய்தான்.
இராமர், தம்பி இலட்சுமணா! இவனை அறைந்துவிடலாமா? என்று எண்ணினாயே! நமது பாதபூசைக்காகவே இவ்வாறு செய்தான் என்றார்.
மீனவன், இராமா! கல்லைப் பெண்ணாக்கும் மருந்து தண்ணீரில் இறங்கிவிட்டது. இதைக் கீழே விட்டால் கீழேயிருக்கிற கற்களெல்லாம் பெண்களாகிவிடும். ஏன் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி ஆசுமனம் செய்து தலையில் ஊற்றிக்கொண்டான். மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியே ஓடத்தைச் செலுத்தினான். ஓடத்தை விட்டு இறங்கியவுடன் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை இனாமாகத் தந்தார். அவன் அதை வாங்க மறுத்தவிட்டான்.
இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். தொழிலாளியிடம் தொழிலாளி இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதியைக் கடக்க ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்குத் திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர். இப்பொழுது நான் இதற்கு இனாம் வாங்கினால் அப்பொழுது நான் பொருள் தர எங்கே போவேன்? என்று கூறி, தொழுது அழுது இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். அவன் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.
தொடரும் ...
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 8
search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்
_*_*_*_