திருக்குறள் - 1-10
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அடிப்படையாவது, முதன்மையாவது 'அ' கரம் எனும் எழுத்து. அது போல இவ் உலகிற்கு எல்லாம் முதன்மையானவன், அடிப்படையானவன் இறைவன்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
உண்மை அறிவாக விளங்கும் இறைவனின் தூய திருவடிகளைத் தொழுதலே கல்வி நூல்களைக் கற்றதின் பயனாகும்.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பர்களின் இதயமலரில் அமர்ந்திருக்கும் இறைவனின் மாண்புமிக்க திருவடிகளை இடைவிடாது சேர்ந்து நினைப்பவர் இன்பம் குறையாது இவ்வுலகின் கண் நிலைத்து வாழ்வர்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன். அந்த இறைவனின் திருவடிகளையே எண்ணிப் பொருந்துபவர்களுக்கு என்றும் எங்கும் எத்துன்பமும் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவனின் பொருள் பொதிந்த உண்மைப் புகழைப் புரிந்து அவனை விரும்புகிறவர்களிடம் அறிவினை மயக்கி இருள் தருகின்ற தீவினை நல்வினை என்ற இரு வினைகளும் அணுகா.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.
மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின்பால் எழும் தாகங்களை அழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறிகளின்பால் முறையுடன் ஒழுகுபவர் என்றென்றும் நிலைத்து வாழ்வார்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றக் அரிது.
எந்த வகையிலும் யாராலும் தனக்கு நிகராக ஒப்புவமை காட்ட முடியாத இறைவனின் திருவடிகளை எண்ணித் துதிப்பார்களைத் தவிர, மற்றவர்கள் தங்கள் மனதில் எழும் துன்பச் சுமைகளை மாற்றல் இயலாது.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.
அறக் கடலாகத் திகழும் இறைவனின் திருவடிகளை எண்ணிச் சேர்ந்தவர்களைத் தவிர, பிறர் பொருட்கடல், இன்பக்கடலாகிய பிற கடல்களை நீந்திக் கடக்க இயலாது.
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
உணர்ச்சிகளை உணராத கொள்கையற்ற உடல் பொறிகள் பயனற்றவை. அவை போல் எட்டுக் குணங்களின் இருப்பிடமாகத் திகழும் இறைவனை வணங்காத தலைகளும் பயனற்றவை.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
இறைவன் திருவடிகளை எண்ணித் துதிப்பவர் மட்டுமே பிறப்பு எனும் பெரிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு எண்ணாதவர் அக்கடலுள் வீழ்ந்து இன்னல் அடைவர்.
search tags : Thirukuaral, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 day ago
2 comments:
இந்த பொருளுரைகள் யாருடையவை என்று சொல்லுங்களேன்.
தங்கள் வருகைக்கு நன்றி ஊர்சுற்றி...
அனைத்துக் குறள்களின் பொருளுரைகளும் புலவர் த. மாணிக்கம்பிள்ளை என்பவருடையது. என்னுடையது அல்ல.
Post a Comment