ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Thursday, May 14, 2009

திருக்குறள் 11-20 (பொருளோடு)



திருக்குறள் 11-20

அறத்துப்பால்


வான் சிறப்பு


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. -11


இப் புவியானது நிலைபெற்று உய்ய மழை பொழிகிறது. எனவே அம்மழையே உயிர்களுக்கு அமிர்தம் என உணர்தல் வேண்டும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. -12


நமக்கான உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதுடன், அருந்துவோர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் எனும் உணவைத் தருவதும் மழையாகும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13


வான்மழை சரியான காலங்களில் பெய்யாமல் பொய்க்குமானால், பரந்த கடல் சூழ்ந்த இந்த உலகத்தினுள் பசியானது நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். -14


மழை எனும் வளம் குறைந்தால் உழவர்கள் ஏர் பூட்டி உழ மாட்டார், இயலாது.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15


மழையானது பெய்ய வேண்டிய பருவத்தில் பெய்யாது மக்கள் வாழ்வினைக் கெடுக்கும். ஆனால் அதே மழைதான் பின்னர் கெட்டுப்போன மக்களுக்குத் துணையாக மீண்டும் பெய்யும்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -16


மேகத்தில் இருந்து வரும் மழைத்துளிகள் விழாமல் போனால் பூமியின் மேலே பச்சைப் புற்களின் தலை கூடத் தென்படுவது கடினமாகும்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். -17

கடல்நீரை உண்ட மேகம் மீண்டும் அதனிடத்தில் செல்லாதுவிடின் பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. -18


வானமானது மழையைத் தராது வறட்சி ஏற்படுமாயின் வானத்து தேவர்களுக்கான சிறப்புப் பூசைகளும் வழிபாடுகளும் இப் புவியில் நடக்காது.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19


வானமானது மழையை வழங்காது போகுமானால் இப் பெரிய உலகில் தானம், தவம் என்ற இரு அறங்களும் தங்காமல் மங்கி விடும்.

நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. -20


எந்த வகையில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் நீரின்றி உலக வாழ்க்கை அமையாது. அப்படியே அந்த நீரும் வானத்தில் இருந்து மழையாக ஒழுகா விட்டால் கிடைக்காது.


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 1-10


search tags : Valluvar, Thirukural, வள்ளுவர், திருக்குறள்

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி
தொடரட்டும்
தமிழ்ப்பணி

அடியார் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தரும் ஊக்கத்திற்கும் நன்றி அன்பரே...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin