ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, May 20, 2009

திருமணக் கிரியைகள்




திருமணக் கிரியைகள்

இந்து முறைப்படியான திருமணங்களின் போது பல கிரியைகள் செய்யப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவை ஏன் செய்யப்படுகின்றன என அறிவீர்களா, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது வாழ்வில் முக்கியமானதொன்றாகும். இத் திருமணத்தின் போது நடைபெறக்கூடிய கிரியைகளில் பல கோயில் கிரியைகளில் நடைபெறுவதுதான். உதாரணமாக அனுஜ்ஜை, சங்கற்பம், பிள்ளையார் பூஜை, புண்ணிய யாகம், பஞ்சகவ்வியம், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம், கும்பபூஜை, ஓமம் வளர்த்தல், ஆகியவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றினைத் தொடர்ந்து திருமணத்திற்குச் சிறப்பாகவுள்ள கிரியைகள் நடைபெறும். உதாரணமாக பிதிர்தேவர்களது ஆசிர்வாதம் பெறுதல், மணமகனுக்கு உபசாரம் செய்தல், கன்னிகாதானம், கூறை கொடுத்தல், தாலி கட்டுதல், அக்கினி பூஜை, பால்,பழம் கொடுத்தல், நவக்கிரக தானம், பசு தரிசனம், பாணிக்கிரகணம்(கையைப் பற்றுதல்), அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல், பிராயச்சித்தம், அக்கினியை வலம் வருதல், பெரியோர் வாழ்த்துதல் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

இக் கிரியைகளின் தத்துவங்களை அல்லது விளக்கத்தினைக் காணலாம் வாருங்கள்.

அரசாணி : திருமண மண்டபத்தில் சிவசக்தியின்(சிவம்+சக்தி) பாவனையில் அரசும் முருங்கும் நடப்படும். இதுவே அரசாணிமரம் எனப்படும்.

அனுஜ்ஜை : ஆரம்பிக்கும் கிரியையில் உள்ளத்தை உறுதி செய்தல். அதாவது மணமகன் திருமணம் செய்வதற்கும், ஆசாரியார் அதை நடத்துதற்கும் உள்ளத்தை உறுதி செய்தலே அனுக்ஜை ஆகும்.

விநாயகர் பூஜை : எந்தச் செயலும் இனிதே நடைபெறுவதற்கும் விநாயகரின் அருள் அவசியம் வேண்டும். அதே போல் திருமணக் கிரியைகளும் தடங்கலின்றி இனிதே நடைபெற விநாயகரின் அருளை வேண்டிச் செய்யப்படும் பூஜை.

ஆசமனம் : மணமகன் மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல். இதனால் உள்ளம் தூய்மையாகி ஆன்மா அருள்வழி நிற்கும்.

புண்ணிய யாகம் : இடத்தையும் பொருளையும் சுத்தி செய்தல். இது பஞ்சகவ்வியம் கொண்டு செய்யப்படும்.

அங்குரார்ப்பணம் : நவதானியங்களை முளைப்பதற்காக இடுதல். இது மணமக்களுக்கு நன்மைகளும் எல்லாச் செல்வங்களும் கிடைத்தற் பொருட்டு செய்யப்படுவதாகும்.

இரட்சாபந்தனம் : இரட்சை என்றால் காப்பு, பந்தனம் என்றால் கட்டுதல். எனவே இரட்சாபந்தனம் என்றால் காப்பு கட்டுதல் எனப்பொருள்படும். இது மணமக்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தொடங்கிய கருமத்தினை இடையூறின்றி முடிக்கவும் இடையில் குற்றங்கள் எதுவும் நிகழாதிருக்கவும் அவர்களுக்கு கையில் கட்டப்படும்.

கும்ப பூஜை : இரட்சாபந்தனமான பின்னர் ஆசாரியார் முறைப்படி சிவனதும் சக்தியினதும் அருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியையே கும்பபூஜை ஆகும்.

நவக்கிரக பூஜை : நம் வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. புதிதாக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்களின் நவக்கிரக தோஷ பலத்தைக் குறைக்கவும், அவற்றால் ஏற்படும் குற்றங்களைப் போக்கியருளும்படியும் வேண்டி செய்யப்படும் பூஜை இது.

ஓமம் வளர்த்தல் : கும்பத்திலே பூஜித்த யாகேசுவரியின் (சிவன் சக்தி) அருளை நிலைபெறச் செய்வதற்காக ஓமகுண்டத்தில் அக்கினி காரியம் செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி 'சிவாக்கினி' எனப்படும். இச் சிவாக்கினி வாழ்க்கைக்கு வேண்டிய தூய அருளை நல்கும்.

பிதுரர் ஆசிர்வாதம் : நற்காரியங்களின் போது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவது நம் மரபு. அதே போல் திருமணத்தின் போதும், வாழ்க்கையினை ஆரம்பிக்க இருக்கும் மணமக்களின் முன்னோரை அழைத்து ஆசிர்வாதம் பெற இடம் பெறும் கிரியையே பிதுரர் கிரியை எனப்படும். இது மணமக்களின் தந்தையார்களால் செய்யப்படும். மணமக்களின் பாட்டன், பூட்டன் ஆகியோரின் பெயர்கள் கூறி ஆசி வேண்டப்படும்.

மணமகனுக்கு உபசாரம் : மணவறையில், மணமகனின் வலப்பக்கத்தில் மணமகளை இருத்தி இரட்சாபந்தனம் செய்த பின்பு, மணமகளின் தகப்பனார் கன்னிகாதானம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொள்வார். பின்பு பட்டு வேட்டி சால்வையுடன் உபசாரப் பொருட்களை உபகாரமாக மணமகனுக்குக் கொடுப்பார்.

கன்னிகாதானம் : மணமகளின் தந்தை தம் மடியிலே மகளை இருத்தி அவளைத் தானமாகத் தாரை வார்த்து மணமகனின் கையில் அளிப்பார். தண்ணீரைத் தாரையோடு கொடுப்பதால் இது 'தாராதத்தம்' எனப்படும். கையில் நீர்விடுதல் ஒரு பொருளை இறுதியாகக் கொடுத்தலுக்கு அறிகுறி.

கூறை கொடுத்தல் : மணமகளின் திருமணச் சேலை, தாலி மற்றும் உபசாரப் பொருட்களை வைத்துச் சுத்தி செய்து பூஜித்த பின் பெரியோரினால் அவை ஆசிர்வதிக்கப்படும். பின்னர் மணமகன் மணமகளுக்கு உபசாரமாகக் கூறையைக் கொடுப்பார்.



தாலி கட்டல் : தாலியில் சிவலிங்கம், விநாயர் அல்லது இலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்படல் வேண்டும். மணமகனால் தாலிக்குத் தீபம் காட்டப்படும். தாலி கட்டுவதற்கு முன்னர் முகூர்த்தக் குற்றங்களைத் தீர்ப்பதற்காக தானம் செய்யப்படும். பின்னர் மணமகன், தன் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டு மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். மணமகனின் சகோதரியார் முடிச்சினைப் போட மணமகனின் தாயார் தீபத்தைக் காட்டுவார். மணமகன், மணமகள் நெற்றி மீது குங்குமமும் விபூதியும் இடுவார். பின்னர் மணமகள் மணமகனின் இடதுபுறத்தில் அமர்த்தப்படுவார். இதனையடுத்து அக்கினி வளர்த்துப் பூஜை நடைபெறும்.

பால் பழம் கொடுத்தல் : தயிர், தேன், சர்க்கரை, நெய், பழம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதார்த்தத்தை மணப்பெண் முதலில் மணமகனுக்கும், பின்னர் மணமகன் மணப்பெண்ணுக்கும் கொடுப்பார்கள். உயர்ந்த பதார்த்தங்களின் சுவை போன்று மணமக்கள் வாழ்வு முழுவதும் நலம் நிலவவேண்டும் என்பதற்காக இது வழங்கப்படுகிறது.

கோதரிசனம் : பசு புண்ணியத்தின் வடிவம். அதன் உடலில் அனைத்து கடவுளரும் தேவர்களும் வசிக்கிறார்கள். அப்புண்ணிய வடிவத்தைப் பார்த்தல் நல்லசகுனம். இதனால் வாழ்க்கையில் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

ஏழடி வைத்தல் : மணமகளுடைய கையை மணமகன் பிடித்துக் கொண்டு தோழி, தோழனுடன் அக்கினியை வலம் வருகையில் ஏழு அடி வந்ததும் அம்மி மிதித்தல் நடைபெறும். இது மூன்று முறை நடைபெறும். ஒவ்வொருமுறை வலம் வந்ததும் மணமகளின் சகோதரன் நெற்பொரியினை மணமக்கள் கையிற் கொடுப்பார். அவர்கள் அதனை அக்கினியில் இடுவார்கள். நெல் பொரியாக மலர்வது போன்று அவர்களுடைய வாழ்வும் வளம்பெற வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஏழு அடி வைத்தலின் தத்துவத்தைப் பார்ப்போம். இல்வாழ்க்கைக்கு வேண்டிய ஏழு பொருட்களைக் குறிக்கும், இவற்றைப் பெற இருவரும் ஒத்து முயற்சி செய்ய வேண்டும். அந்த ஏழு பொருட்களாவன, உணவுப்பொருள், உடற்பலம், கடவுள் வழிபாடு, மன அமைதி, அறிவு, காலத்திற்கு காலம் வாரும் பொருட்களும், அவற்றால் வரும் சுகங்களும், யாகத்திற்கு வேண்டிய துணைகள்.

அம்மி மிதித்தல் : மணமகன் மணமகளது வலதுகாலைத் தூக்கி அம்மி மீது வைப்பார். இதன் கருத்தானது பெண்ணாணவள் அந்த கல்லைப் போலத் தன்னுடைய நிலையில் இருந்து கற்புறுதியாக வாழ வேண்டும் என்பதாகும்.

பிராயச்சித்தம் : குற்றங்களைத் தீர்ப்பதற்காக பிராயசித்த ஓமமும், கிரியைகளின் நிறைவு குறித்துப் பூரணாகுதியும் நடைபெறும்.

அருந்ததி காட்டல் : இது ஒழுக்கம், கற்பு, பிறரை விழையாமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் உயர்வு குறித்துக் காட்டப்படும். இது பெண்ணுக்கு மாத்திரமன்றி ஆணுக்கும் உரியது.

ஆசிர்வாதம் : இறுதியாக ஆசாரியார் பூரணாகுதி செய்து மணமக்களை ஆசிர்வதிப்பார். அதன் பிற்பாடு நிறைவான பெரியோர் அறுகரிசி போட்டு ஆசிர்வதிப்பர். அறுகரிசி மங்கலப் பொருளாகும்.

திருமணக் கிரியைகள் ஆரம்பமுதல் வாழ்த்து நடைபெறும் வரை அனைவரையும் மகிழ்விக்க மங்கள வாத்தியங்கள் ஒலிக்கப்படும்.

அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் பண்டைய காலந்தொட்டே வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு சேக்கிழார் பெரிய புராணம் பாடி முடித்து யானை மீதமர்ந்து வீதியுலா வரும்போது அறுகெடுத்து வாழ்த்தப்படுகிறார்.

ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர்கொண்டு
அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பைக ளெல்லாம் - இவ்வாறு திருத்தொண்டர் புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த மரபு காலப்போக்கில் அறுகோடு நெல்லும் மலரும் கலந்து இடுதல் என்று மாறிற்று. பின்னர் நெல் அரிசியாகி அர்ச்சதை இடுதல் என்று ஆயிற்று. அறுகும் அர்ச்சதையும் மலரும் கலந்து வாழ்த்துதல், அட்சதையிடுதல் என்று இன்றைய வழக்கில் வழங்கக் காண்கின்றோம்.



நன்றி : ஆன்மிக கிரியைகள், சைவ ஏடு, விரதங்களும் சடங்குகளும்.


search tags : Thirumanam, Thirumanam Sadanku, Thirumanam Kiriyai, திருமணம், திருமணச் சடங்கு, திருமணக் கிரியைகள்.

2 comments:

Nandhan Sp said...

இணையத்தில் வேறு எதையோ தேடிகொண்டிருக்கும்போது உங்கள் வலைத்தளத்தை காண நேர்ந்தது...
வடிவமைப்பும் இடுகைகளும் அருமையாக இருகின்றன...

உங்களது இந்த இறைபணி தொடர மேன்மேலும் சிறக்க ...எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமையையும் சகல சௌபாக்யங்களயும் தந்தருள வேண்டுகிறேன்..

அடியார் said...

தங்கள் வருகைக்கும், நற்கருத்துக்கும், தரும் ஊக்கத்திற்கும் நன்றிகள் அன்பரே.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin