ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, May 29, 2009

சண்முக கவசம்



பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929 ) அருளிய சண்முக கவசம்


அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2

இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3

ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4

உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7

ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8

ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9

ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10

ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13

ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14

சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16

டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17

இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19

நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20

பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21

மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22

யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23

ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24

லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25

வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26

இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27

இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28

இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29

இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30

திருச்சிற்றம்பலம்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஸ்ரீ குமாரஸ்தவம்

search tags : Lord Murugan, Sanmuga kavasam, Shanmuga kavasam, Paamban Swami, சண்முக கவசம், பாம்பன் சுவாமிகள்

2 comments:

sury siva said...

இது நடந்து ஒரு 30 வருடங்களுக்கு மேல் இருக்கும்.
தஞ்சையில் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் நான் மேலதிகாரியாகப் பணி புரிந்துகொண்டிருந்தபொழுது,
டிஸ்க் ப்ரொலாப்ஸ் எனச்சொல்லப்படும் முதுகுத்தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டிக்கொண்டிருந்தபோது, எங்கள் கோட்டத் தலைவியாக இருந்த திருமதி சரஸ்வதி கல்யாணசுந்தரம்
அவர்கள் (அவரும் அவர் கணவர் திரு கல்யாணசுந்தரம் அவர்களும் முருக பகதர்கள் ) என்னை ஷ்ணமுக‌
கவசம் படிக்கச்சொல்லி, நானும் படித்து, எனது நோயின் தீவிரம் குறைந்தது எனக்கு இன்னும் பசுமரத்து
ஆணிபோல நினைவில் நிற்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com

அடியார் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே...

சண்முக கவசம் எத்தனை சக்திவாய்ந்தது என்பதைத் தங்களின் கருத்து நிரூபித்து விட்டது.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin